அரிதான தலைவர்களுள் ஒருவர் மன்மோகன் சிங்: முதல்வர் ஸ்டாலின்
அரிதான தலைவர்களுள் ஒருவராக வரலாறு மன்மோகன் சிங் பெயரைப் பொறித்து வைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்திய பின், முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:
இந்தியாவின் தலைசிறந்த மகன்களுள் ஒருவரான டாக்டர் மன்மோகன் சிங்கிற்கு எனது இறுதி மரியாதையைச் செலுத்தினேன்.
வரலாறு அவரை கனிவுடன் நடத்தும் என்பது மட்டுமல்ல, தமது தொலைநோக்கால் ஒரு நாட்டையே மறுசீரமைத்த, தமது பணிவால் கோடிக்கணக்காருக்கு ஊக்கமூட்டிய, அடுத்து வரும் தலைமுறைகளுக்கெல்லாம் தமது வாழ்க்கையால் நம்பிக்கை மற்றும் வளர்ச்சிக்கான கலங்கரை விளக்கமாக விளங்கும் அரிதினும் அரிதான தலைவர்களுள் ஒருவராக வரலாறு அவரது பெயரைப் பொறித்து வைக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிக்க: மன்மோகன் சிங் உடலுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் அஞ்சலி!
மன்மோகன் சிங் மறைவு
முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான மன்மோகன் சிங் வயதுமூப்பு காரணமாக வியாழக்கிழமை இரவு காலமானார்.
தில்லி இல்லத்தில் குடும்பத்தினர் மற்றும் முக்கிய பிரமுகர்களின் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்பட்டுள்ளது. இன்று அதிகாலை காங்கிரஸ் தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல் காந்தி நேரில் அஞ்சலி செலுத்தினர்.
மன்மோகன் சிங் இல்லத்துக்கு நேரில் சென்று பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், ஜெ.பி. நட்டா உள்ளிட்டோரும் அஞ்சலி செலுத்தினர்.