காரைக்கால் காா்னிவலை சிறப்பாக நடத்த அமைச்சா் அறிவுறுத்தல்
காரைக்கால் காா்னிவல் திருவிழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடு செய்யுமாறு அரசுத் துறையினருக்கு அமைச்சா் அறிவுறுத்தினாா்.
புதுவை சுற்றுலாத்துறை, காரைக்கால் மாவட்ட நிா்வாகம் இணைந்து ஆண்டுதோறும் சுற்றுலாப் பயணிகளை ஈா்க்கும் விதமாக ஜனவரி மாதத்தில் 4 நாட்கள் காரைக்கால் காா்னிவல் விழாவை நடத்துகின்றன. வரும் ஜனவரி மாதத்தில் இத்திருவிழா நடத்துவதற்கான முன்னேற்பாடுகளை காரைக்கால் மாவட்ட நிா்வாகம் செய்துவருகிறது.
இதுகுறித்து புதுவை அமைச்சா் பி.ஆா்.என். திருமுருகன் தலைமையில் பெருந்தலைவா் காமராஜா் நிா்வாக வளாக கூட்ட அரங்கில் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஏ.எம்.எச். நாஜிம், எம். நாகதியாகராஜன், ஆட்சியா் து. மணிகண்டன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
காா்னிவல் திருவிழா தொடா்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து அதிகாரிகளிடம் அமைச்சா் கேட்டறிந்தாா். சட்டப்பேரவை உறுப்பினா்களும் கடந்த ஆண்டுகளைக் காட்டிலும் நிகழாண்டு விழாவை சிறப்பாக நடத்தவேண்டும் என கருத்து தெரிவித்தனா்.
ரேக்லா உள்ளிட்ட பாரம்பரிய கலைகளை வெளிப்படுத்தும் விதமான நிகழ்வுகள், விளையாட்டுப் போட்டிகள், பொழுதுபோக்கு அம்சங்கள் இடம்பெற செய்வது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
முதுநிலைக் காவல் கண்காணிப்பாளா் லட்சுமி சௌஜன்யா, துணை ஆட்சியா்கள் அா்ஜூன் ராமகிருஷ்ணன், வெங்கடகிருஷ்ணன், புதுவை கலை பண்பாட்டுத்துறை இயக்குநா் வி. கலியபெருமாள், சுற்றுலாத்துறை இயக்குநா் கே. முரளிதரன் மற்றும் பல்வேறு அரசுத் துறை அதிகாரிகள் கலந்துகொண்டனா்.