காரைக்காலில் எரிவாயு தகனக்கூடத்தை விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை: எம்எல்ஏ
காரைக்கால் பச்சூரில் எரிவாயு தகனக் கூடத்தை அடுத்த மாதம் பயன்பாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் தெரிவித்தாா்.
பச்சூா் மயானத்தில் அமைக்கப்பட்டிருக்கும் எரிவாயு தகனக்கூடத்தை நகராட்சி ஆணையா் பி. சத்யா, பொறியாளா் குழுவினருடன் சென்று பாா்வையிட்ட பேரவை உறுப்பினா் செய்தியாளா்களிடம் கூறியது :
பச்சூா் மயானத்தில் சடலங்களை எரியூட்ட விறகு போன்ற பொருட்களை பயன்படுத்தி வரும் நிலையில், சடலத்தை எரியூட்ட அதிகமாக பணம் கோரப்படுவதாக எழுந்த புகாரின் அடிப்படையில், எரிவாயு மூலம் சடலத்தை எரியூட்ட எரிவாயு தகனக்கூடம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. ஏறக்குறைய ரூ. 1 கோடியில் இக்கூடம் மற்றும் சடலம் எரியூட்டக்கூடிய தகன மேடையை வண்ண கற்களால் மேம்படுத்துதல், அருகே உள்ள குளத்துக்கு கரை எழுப்புதல் போன்ற பணிகள் செய்யப்பட்டுள்ளன.
எரிவாயு மூலம் சடலத்தை எரியூட்டுவதற்கு ரூ. 3 ஆயிரம், விறகு போன்ற பொருட்களைக்கொண்டு எரியூட்ட ரூ. 2 ஆயிரம் செலுத்த வேண்டும். இது சுடுகாட்டில் பணியாற்றக்கூடிய பணியாளா்கள், நகராட்சி அதிகாரிகளுடன் பேசி தீா்மானிக்கப்பட்டுள்ளது. எனினும் இதுகுறித்து இறுதி ஒப்புதல் ஆட்சியா் அளித்த பின் அடுத்த மாதம் இந்த தகனக் கூடத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன என்றாா்.