பனிப்பொழிவில் சிக்கிய சுற்றுலாப் பயணிகள்: மசூதியில் அடைக்கலம் கொடுத்த காஷ்மீர் மக்கள்!
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவில் சிக்கித் தவித்த சுற்றுலாப் பயணிகளுக்கு அங்குள்ள மக்கள் மசூதிகளிலும் வீடுகளிலும் அடைக்கலம் கொடுத்துள்ளனர்.
ஜம்மு - காஷ்மீரில் உள்ள சோனமர்க் பகுதிக்கு சுற்றுலா சென்ற பஞ்சாபைச் சேர்ந்த பயணிகள் கடும் பனிப்பொழிவு காரணமாக திரும்பிவர முடியாமல் அவதிப்பட்டுள்ளனர்.
அவர்களின் வாகனங்கள் பனியில் சிக்கியதாலும் அருகில் தங்குவதற்கு விடுதிகள் ஏதும் இல்லாததாலும் குந்த் பகுதியில் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
இந்த நிலையில், அந்தப் பகுதிவாசிகள் அங்குள்ள ஜாமியா மசூதியில் பயணிகள் அனைவருக்கும் அடைக்கலம் கொடுத்துள்ளனர்.
இதையும் படிக்க | 2024 - மோடி முதல் அம்பேத்கர் வரை பேசுபொருளான சர்ச்சைகள் ஒரு பார்வை!
கடந்த அக்டோபரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் 6 பேர் கொல்லப்பட்ட ககான்கீர் பகுதிக்கு 10 கி.மீ தொலைவில் ஜாமியா மசூதி அமைந்துள்ளது.
சுற்றுலாப் பயணிகள் மசூதியில் தங்கியிருக்கும் விடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
”காஷ்மீர் மக்களின் விருந்தோம்பலை அனுபவிக்க ஒவ்வொருவரும் காஷ்மீருக்குச் செல்லவேண்டும். இங்குள்ள அனைவரும் அன்பானவர்கள். நாங்கள் பனியில் சிக்கித் தவித்தபோது இங்கிருந்த மக்கள் பெரிதும் உதவினர். இவர்கள் அனைவருக்கும் நாங்கள் நன்றிக்கடன் பட்டுள்ளோம்” என சுற்றுலாப் பயணிகள் தெரிவித்தனர்.
இதையும் படிக்க | ஏஐ தொழில்நுட்பம் மனித இனத்தை அழிக்கும்: நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானி எச்சரிக்கை!
காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு காரணமாக ஸ்ரீநகர் - ஜம்மு நெடுஞ்சாலையில் பல சுற்றுலாப் பயணிகள் சிக்கித் தவித்து வருகின்றனர். பல இடங்களில் அவர்களுக்கு உதவியாக பொதுமக்களும் காவல்துறையினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.