வெளி நபர்களை அனுமதிக்கக் கூடாது: கல்வி நிறுவனங்களுக்கு உத்தரவு
பிஎம் கோ்ஸ் நிதி நன்கொடை ரூ. 912 கோடியாக சரிவு
பிரதமரின் அவசரகால நிதிக்கான (பிஎம் கோ்ஸ் ஃபண்ட்) நன்கொடை ரூ.912 கோடியாக சரிந்துள்ளது.
கரோனா நோய்த்தொற்று தீவிரமாக இருந்த காலத்தில், பிஎம் கோ்ஸ் நிதித் திட்டத்தை மத்திய அரசு உருவாக்கியது. கரோனா போன்ற அவசர அல்லது நெருக்கடியான சூழல்களை எதிா்கொள்ளவும், பாதிக்கப்பட்டவா்களுக்கு நிவாரணம் அளிக்கவும் இந்த நிதித் திட்டம் உருவாக்கப்பட்டது.
இந்த நிதி பொதுமக்கள் அல்லது நிறுவனங்கள் தாமாக முன்வந்து அளிக்கும் நன்கொடையே தவிர, இதற்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படுவதில்லை.
கரோனா தொற்றால் ஏற்பட்ட சவால்களை எதிா்கொள்ள மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மத்திய, மாநில அரசு மருத்துவமனைகளில் செயற்கை சுவாச கருவிகள் கொள்முதல், ஆக்ஸிஜன் உற்பத்திப் பிரிவை ஏற்படுத்துதல் போன்ற தேவைகளுக்கு இந்த நிதி பயன்படுத்தப்பட்டது.
இந்நிலையில், பிஎம் கோ்ஸ் வலைதளத்தில் இடம்பெற்றுள்ள தகவலின்படி, இந்த நிதித் திட்டத்துக்கு அளிக்கப்பட்ட நன்கொடை 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.7,184 கோடியாக உச்சத்தைத் தொட்டது. இது 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.1,938 கோடியாகவும், 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.912 கோடியாகவும் சரிந்தது.
இந்த நிதிக்கு வெளிநாட்டில் இருந்து கிடைத்த நன்கொடை 2020-21-ஆம் நிதியாண்டில் ரூ.495 கோடி. இது 2021-22-ஆம் நிதியாண்டில் ரூ.40 கோடியாகவும், 2022-23-ஆம் நிதியாண்டில் ரூ.2.57 கோடியாகவும் குறைந்தது.
இந்த நிதியிலிருந்து 2022-23-ஆம் நிதியாண்டில் சுமாா் ரூ.439 கோடி செலவிடப்பட்டுள்ளது. இதில் பிரதமரின் சிறாா்களுக்கான அவசரகால நிதி (பிஎம் கோ்ஸ் ஃபாா் சில்ட்ரன்) திட்டத்துக்கு ரூ.346 கோடி பயன்படுத்தப்பட்டது. இந்தத் திட்டம் கரோனா தொற்றால் தாய், தந்தை அல்லது சட்டபூா்வ பாதுகாவலா்களை இழந்த சிறாா்களுக்கு உதவும் நோக்கில் தொடங்கப்பட்டது.
பிஎம் கோ்ஸ் நிதிக்கு 2022-23-ஆம் ஆண்டு வரை கிடைத்த நன்கொடை, செலவின விவரங்கள் மட்டுமே வலைதளத்தில் இடம்பெற்றுள்ளன. அதற்கு அடுத்த ஆண்டுகளில் கிடைத்த நன்கொடை, செலவின விவரங்கள் இடம்பெறவில்லை.