செய்திகள் :

தேசியம் 2024

post image

ஜனவரி

1: கருந்துளை, ஊடுகதிர் உமிழ்வு உள்ளிட்ட வானியல் ஆய்வுக்காக 'எக்ஸ்போசாட்' செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. நாட்டில் அறிவியல் ஆய்வுக்காக அர்ப்பணிக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் இது.

6: சூரியனின் புறவெளி ஆய்வுக்காக அனுப்பப்பட்ட ஆதித்யா எல்-1 செயற்கைக்கோள், 127 நாள்கள் பயணத்துக்கு பிறகு தனது இலக்கை எட்டியது.

7: கார்கிலில் இந்திய விமானப் படையின் சி-130 கனரக விமானம் இரவு நேரத்தில் முதல் முறையாக தரையிறங்கி சாதனை.

22: உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில் கட்டப்பட்டுவரும் ஸ்ரீராமர் கோயிலில், பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் மூலவர் பிராணப் பிரதிஷ்டை.

28: பிகாரில் ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் உடனான கூட்டணியை முறித்த ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ் குமார், பாஜகவுடன் கைகோத்து மாநில முதல்வராக 9-ஆவது முறையாக பதவியேற்றார்.

31: உத்தர பிரதேச மாநிலம், வாரணாசியில் உள்ள ஞானவாபி மசூதியின் பாதாள அறையில் உள்ள ஹிந்து தெய்வங்களின் சிலைகளுக்கு நீதிமன்ற அனுமதியின்பேரில் பூஜை.

பிப்ரவரி

2: நிலமோசடி வழக்கில் கைதானதைத் தொடர்ந்து, ஜார்க்கண்ட் முதல்வர் பதவியில் இருந்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவர் ஹேமந்த் சோரன் விலகிய நிலையில், புதிய முதல்வராக சம்பயி சோரன் பதவியேற்பு.

7: உத்தரகண்டில் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவதற்கான மசோதா சட்டப் பேரவையில் நிறைவேற்றம்.

15: அரசியல் கட்சிகள் நன்கொடை பெறுவதற்கான தேர்தல் பத்திர திட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது எனக் கூறி, அத்திட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது உச்சநீதிமன்றம்.

17: வானிலை மாற்றங்களைக் கணிப்பதற்கான இன்சாட்-3டி செயற்கைக்கோள் ஜிஎஸ்எல்வி-எஃப்14 ராக்கெட் மூலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

27: விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் 'ககன்யான்' திட்டத்துக்காக இந்திய விமானப் படை விமானிகள் நால்வர் (பிரசாந்த் பாலகிருஷ்ணன் நாயர், அஜீத் கிருஷ்ணன், அங்கத் பிரதாப், சுபான்ஷு சுக்லா) தேர்வு.

மார்ச்

6: லட்சத் தீவு கூட்டங்களில் ஒன்றான மினிகாய் தீவில் ஐஎன்எஸ் ஜடாயு கடற்படை தளம் தொடக்கம்.

14: 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்துக்கான பரிந்துரை அறிக்கையை குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான உயர்நிலைக் குழு சமர்ப்பிப்பு.

16: மக்களவைத் தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

22: பிரதமர் மோடிக்கு பூடான் நாட்டின் உயரிய 'ஆர்டர் ஆஃப் தி டிரக் கியால்போ' விருது அளிப்பு. இவ்விருதை பெற்ற முதல் வெளிநாட்டுத் தலைவர் பிரதமர் மோடி.

31: பாஜக முதுபெரும் தலைவர் எல்.கே.அத்வானியை அவரது இல்லத்தில் சந்தித்து 'பாரத ரத்னா' விருதை வழங்கி கௌரவித்தார் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு.

ஏப்ரல்

4: பிறப்பு பதிவேட்டில் தாய்-தந்தை இருவரின் மதத்தை குறிப்பிடுவதை கட்டாயமாக்கும் வரைவு விதிகள் மத்திய உள்துறை அமைச்சகத்தால் வெளியீடு.

10: உலகின் சிறந்த 500 பல்கலைக்கழகங்கள்-உயர்நிலை கல்வி நிலையங்கள் பட்டியலில் சென்னை ஐஐடி, மும்பை ஐஐடி, தில்லி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழகம் உள்பட 69 இந்திய பல்கலைக்கழகங்கள்-

உயர்நிலை கல்வி நிலையங்கள் இடம்பெற்றன.

19: பிரம்மோஸ் சூப்பர்சானிக் ஏவுகணைகளின் முதல் தொகுதியை பிலிப்பின்ஸூக்கு வழங்கியது இந்தியா. இதன் மூலம் இந்த வகை ஏவுகணைகளை இந்தியா முதல்முறையாக ஏற்றுமதி செய்தது.

19: 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளுக்கு முதல் கட்டமாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்றது.

மே

2: ஹிந்து திருமணச் சட்டம் தொடர்பான வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், சப்தபதி போன்ற சடங்குகள் இல்லாமல் செய்யப்படும் திருமணங்களின் பதிவு செல்லாது என்று தீர்ப்பு.

8: கோவிஷீல்ட் தடுப்பூசிகள் அரிதாக ரத்தம் உறைதல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துவதாக தெரிவித்திருந்த அஸ்ட்ராஜெனகா நிறுவனம், உலக அளவில் அந்தத் தடுப்பூசிகளை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு.

13: தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் இல்லத்தில் ஆம் ஆத்மி எம்.பி. ஸ்வாதி மாலிவால் தாக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. .

13: ஈரானில் சாபஹார் துறைமுக முனையத்தை இயக்கும் 10 ஆண்டு ஒப்பந்தத்தில் இந்தியா, ஈரான் கையொப்பம்.

15: குடியுரிமை திருத்தச் சட்டத்தின் கீழ், முதல்முறையாக 14 பேருக்கு குடியுரிமைச் சான்றிதழ்களை மத்திய அரசு வழங்கியது.

21: மும்பை பங்குச்சந்தையில் பட்டியலிடப்பட்ட அனைத்து நிறுவனங்களின் மொத்த சந்தை மூலதனம் முதல்முறையாக 5 டிரில்லியன் டாலர்களை (சுமார் ரூ.425 லட்சம் கோடி) எட்டியது. இதன் மூலம் 5 டிரில்லியன் டாலர் மதிப்புகொண்ட பங்குச் சந்தைகள் உள்ள அமெரிக்கா, சீனா, ஜப்பான், ஹாங்காங் நாடுகளின் வரிசையில் இந்தியா இடம்பெற்றது.

23: நேபாளத்தில் இருந்து எவரெஸ்ட் சிகரத்தில் இளவயதில் ஏறிய இந்தியர் என்ற பெருமையை காம்யா கார்த்திகேயன் (16) பெற்றார்.

ஜூன்

4. மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி வெற்றி.

5: ஒடிஸா முதல்வராக தொடர்ந்து 24 ஆண்டுகளாகப் பதவி வகித்து வந்த ஒடிஸா முதல்வர் நவீன் பட்நாயக்கின் ஆட்சிக் காலம், சட்டப்பேரவைத் தேர்தலில் ஏற்பட்ட தோல்வியால் முடிவுக்கு வந்தது.

9: பிரதமராக 3-ஆவது முறையாக மோடி பதவியேற்பு.

12: ஆந்திர முதல்வராக தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு 4-ஆவது முறையாகப் பதவியேற்பு.

13: தேசிய பாதுகாப்பு ஆலோசகராக அஜீத் தோவல் தொடர்ந்து மூன்றாவது முறையாக நியமனம்.

26: மக்களவைத் தலைவராக ஓம் பிர்லா தொடர்ந்து இரண்டாவது முறையாக தேர்வு.

ஜூலை

7: நாட்டில் 113 புதிய மருத்துவக் கல்லூரிகளை அமைக்க தேசிய மருத்துவ ஆணையம் அனுமதி. தமிழ்நாட்டில் 5 கல்லூரிகளை அமைக்க அனுமதி.

15: 2024-ஆம் ஆண்டில் உலகில் எந்தவொரு தடுப்பூசியையும் செலுத்திக்கொள்ளாத குழந்தைகளின் எண்ணிக்கை (16 லட்சம்) அதிகம் உள்ள நாடுகளில், இந்தியா இரண்டாவது இடத்தில் இருப்பதாக யுனிசெஃப் அறிக்கை.

22: ஆர்எஸ்எஸ் அமைப்புடன் தொடர்பு வைத்திருக்கும் அரசு ஊழியர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என்பதை மத்திய அரசு உறுதி செய்தது.

30: கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தில் உள்ள சூரல்மலை, முண்டகை பகுதிகளில் பயங்கர நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர்.

ஆகஸ்ட்

1: ராணுவ மருத்துவ சேவைகள் பிரிவின் முதல் பெண் தலைவராக லெஃப்டினன்ட் ஜெனரல் சாதனா சக்சேனா நியமிக்கப்பட்டார்.

9: மேற்கு வங்க மாநிலம், கொல்கத்தாவில் உள்ள ஆர்.ஜி.கர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் முதுநிலை பெண் பயிற்சி மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை. இச்சம்பவத்துக்கு பிறகான நிகழ்வுகள், மேற்கு வங்க அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

23: பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கின் அமெரிக்க பயணத்தில், இந்தியா-அமெரிக்கா இடையே 2 முக்கிய பாதுகாப்பு ஒப்பந்தங்கள் கையொப்பம்.

27: தில்லி கலால் கொள்கை முறைகேடு வழக்கில், தெலங்கானா முன்னாள் முதல்வர் சந்திரசேகர் ராவின் மகளும், பாரத ராஷ்டிர சமிதி எம்எல்சியுமான கவிதாவுக்கு உச்சநீதிமன்றம் ஜாமீன்.

செப்டம்பர்

3: மேற்கு வங்கத்தில் பாலியல் வன்கொடுமை மற்றும் பிற கொடூர குற்றங்களுக்கு மரண தண்டனை விதிக்கும் 'அபாரஜிதா' மசோதா பேரவையில் நிறைவேற்றம்.

13: அந்தமான் தலைநகர் போர்ட் பிளேர் பெயரை 'ஸ்ரீவிஜயபுரம்' என மாற்ற மத்திய அரசு முடிவு செய்தது.

17: தில்லி கலால் கொள்கை முறைகேடு தொடர்புடைய பண முறைகேடு தடுப்புச் சட்ட வழக்கில் கைதாகி ஜாமீனில் விடுதலை ஆன முதல்வர் அரவிந்த் கேஜரிவால் தனது பதவியை ராஜிநாமா செய்தார்.

18: ஆந்திரத்தில் ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான முந்தைய ஆட்சியில் திருப்பதி லட்டு தயாரிக்க விலங்கு கொழுப்பு உள்பட தரமற்ற பொருள்கள் பயன்படுத்தப்பட்டதாக முதல்வர் சந்திரபாபு நாயுடு பரபரப்பு குற்றச்சாட்டு.

21: தில்லி முதல்வராக அதிஷி (43) பதவியேற்றார். இதன்மூலம் பாஜக முதல்வர் சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரஸ் முதல்வர் ஷீலா தீக்ஷித்துக்கு பிறகு தில்லியின் மூன்றாவது பெண் முதல்வரானார் அதிஷி .

அக்டோபர்

7: பிரதமர் மோடி- மாலத்தீவு அதிபர் முகமது மூயிஸ் இடையிலான பேச்சுவார்த்தைக்கு பிறகு, மாலத்தீவால் எதிர்பார்க்கப்பட்ட இருதரப்பு கரன்ஸி மாற்று ஒப்பந்தம் கையொப்பமானது.

8: 90 தொகுதிகளைக் கொண்ட ஹரியாணா பேரவைத் தேர்தலில் 48 இடங்களில் வெற்றிபெற்று தொடர்ந்து மூன்றாவது முறையாக பாஜக ஆட்சியமைத்தது. .

8: 90 தொகுதிகளைக் கொண்ட ஜம்மு-காஷ்மீரில் 10 ஆண்டுகளுக்குப் பின் பேரவைத் தேர்தல் நடத்தப்பட்டது. இதில் தேசிய மாநாட்டுக் கட்சி-காங்கிரஸ்-மார்க்சிஸ்ட் கூட்டணி 49 இடங்களில் வென்றன.

13: ஹரியாணா முதல்வராக இரண்டாவது முறையாக நாயப் சிங் சைனி பதவியேற்பு

16: ஜம்மு-காஷ்மீர் முதல்வராக தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா பதவியேற்பு.

21: கிழக்கு லடாக்கில் உள்ள எல்லை கட்டுப்பாடு கோடு (எல்ஏசி) பகுதிகளில் ரோந்துப் பணிகளை மேற்கொள்வது குறித்து இந்தியா-சீனா இடையே ஒப்பந்தம் கையொப்பமானது. நான்கு ஆண்டுகளாக நிலவி வரும் பிரச்னைக்கு தீர்வு.

28: குஜராத்தின் வதோதரா நகரில் நாட்டின் முதல் தனியார் ராணுவ விமான தயாரிப்பு ஆலையை ஸ்பெயின் பிரதமர் பெட்ரோ சான்செஸூடன் இணைந்து பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

29: 'ஆயுஷ்மான் பாரத்' இலவச மருத்துவக் காப்பீட்டின்கீழ், 70 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மூத்த குடிமக்கள் அனைவருக்கும் ரூ.5 லட்சம் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார்.

நவம்பர்

6: நாட்டின் தலைசிறந்த அரசு மற்றும் தனியார் உயர்கல்வி நிலையங்களில் சேர்க்கை பெறும் மாணவர்கள் எளிதாக கல்விக் கடன் பெற வழிவகுக்கும் பிரதமரின் 'வித்யாலக்ஷ்மி' திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

11: உச்சநீதிமன்றத்தின் 51-ஆவது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா பதவியேற்பு.

23: 81 தொகுதிகளைக்கொண்ட ஜார்க்கண்ட் பேரவைத் தேர்தலில் ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா (ஜேஎம்எம்), காங்கிரஸ் கூட்டணி 56 இடங்களில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியமைத்தது.

23: 288 தொகுதிகளைக்கொண்ட மகாராஷ்டிர பேரவைத் தேர்தலில் பாஜக-சிவசேனை (ஷிண்டே பிரிவு)- தேசியவாத காங்கிரஸ் (அஜீத் பவார் பிரிவு) ஆகிய கட்சிகளின் மகாயுதி கூட்டணி 230 தொகுதிகளில் அபார வெற்றிபெற்றது.

28: ஜார்க்கண்ட் முதல்வராக ஜேஎம்எம் தலைவர் ஹேமந்த் சோரன் பதவியேற்பு.

டிசம்பர்

5: மகாராஷ்டிர முதல்வராக பாஜக மூத்த தலைவர் தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வர்களாக சிவசேனை தலைவர் ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜீத் பவார் ஆகியோர் பதவியேற்றனர்.

9: ரஷியாவில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகளுடன் கூடிய போர்க்கப்பலான 'ஐஎன்எஸ் துஷில்' இந்திய கடற்படையில் இணைக்கப்பட்டது.

10: குடியரசு துணைத் தலைவரும் மாநிலங்களவைத் தலைவருமான ஜகதீப் தன்கரை பதவி நீக்குக் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டுவருவதற்கான நோட்டீஸை எதிர்க்கட்சிகளை சமர்ப்பித்தன.

10: ரிசர்வ் வங்கியின் 26-ஆவது ஆளுநராக சஞ்சய் மல்ஹோத்ரா பொறுப்பேற்றார்.

19: அம்பேத்கர் அவமதிப்பு விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாக நுழைவு வாயில் பகுதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், பாஜக எம்.பி.க்களுக்கும், காங்கிரஸ் எம்.பி.க்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்த கைகலப்பு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மீது பல்வேறு பிரிவுகளில் வழங்குப் பதிவு.

20: ஒரே நாடு ஒரே தேர்தல்' நடைமுறையை அமல்படுத்துவதற்கான இரு மசோதாக்கள் நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு பரிந்துரை. குழுவின் தலைவராக 39 உறுப்பினர்களைக்கொண்ட இக்குழுவின் தலைவராக பாஜக எம்.பி. பி.பி. செளதரி நியமனம்.

24: மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் கனிம சுரங்கம் அமையவுள்ள இடத்தை மறுஆய்வுக்கு உள்படுத்துமாறு மத்திய சுரங்கத் துறை அமைச்சகம் கேட்டுக்கொண்டது.

24: கேரளம், மணிப்பூர் உள்பட 5 மாநிலங்களின் ஆளுநர்கள் மாற்றம்.

‘2025’ - பாதுகாப்புத்துறை சீர்திருத்தங்களுக்கான ஆண்டு: அமைச்சர் ராஜ்நாத் சிங்

புது தில்லி: நிகழாண்டை ‘சீர்திருத்தங்களுக்கான ஆண்டாக’ மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. முப்படைகளுக்கும் இடையே பிணைப்பை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு முப்படைகளுக்குமான ஒருங்கிணைந்த ... மேலும் பார்க்க

மகா கும்பமேளாவில் இந்துக்கள் அல்லாதோர் கடை வைக்கத் தடை!

மகா கும்பமேளாவையொட்டி பிரயாக்ராஜில் இந்துக்கள் அல்லாதோர் கடை வைக்கத் தடை விதிக்க வேண்டும் என்று துறவிகள் கூறியுள்ளனர். உத்தரப் பிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் கங்கை நதிக்கரையில் வெகு சிறப்பாக நடைபெறும் ம... மேலும் பார்க்க

'இனிமேலாவது பிரதமர் மோடி மணிப்பூருக்குச் செல்ல வேண்டும்' - ஆர்ஜேடி எம்.பி.

இனியாவது பிரதமர் மோடி மணிப்பூருக்குச் செல்ல வேண்டும் என்று ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவர் மனோஜ் குமார் கூறியுள்ளார். மணிப்பூரில் கடந்த 2023 ஆம் ஆண்டு குக்கி - மெய்தி சமூகத்தினரிடையே ஏற்பட்... மேலும் பார்க்க

வைஷ்ணவி தேவி கோயிலில் 94.8 லட்சம் பேர் சுவாமி தரிசனம்!

ஜம்மு-காஷ்மீரில் உள்ள மாதா வைஷ்ணவி தேவி கோயிலில் 2024-ல் மொத்தம் 94.83 லட்சம் பக்தர்கள் கோயிலுக்கு வருகை தந்துள்ளனர் என ஆலய வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரி கூறியுள்ளார். ஜம்மு-காஷ்மீரின் மிகவும் புன... மேலும் பார்க்க

நள்ளிரவு 0.00! மும்பை ரயில்கள் ஹார்ன் அடித்து புத்தாண்டுக் கொண்டாட்டம்!

மும்பையில் சிறப்பு மிக்க சத்ரபதி சிவாஜி ரயில் முனையத்தில், புத்தாண்டுக் கொண்டாட்டத்தை முன்னிட்டு நள்ளிரவு 12 மணிக்கு ரயில்களில் ஹார்ன் அடித்து புத்தாண்டுக் கொண்டாட்டத்தை மேலும் உற்சாகமாக்கியிருந்தது.ப... மேலும் பார்க்க

பாஜகவைப் பார்த்து மக்கள் சிரிப்பார்கள்: ஆம் ஆத்மி தலைவர்

மக்களுக்கு இலவசங்களை அள்ளிக்கொடுத்த ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரை கேள்வி கேட்டால் மக்கள் சிரிப்பார்கள் என்று அக்கட்சியின் தலைவர் சஞ்சய் சிங் புதன்கிழமை தெரிவித்தார். மேலும் பார்க்க