டாக்டர் ஊசீஸ்வரனின் கணக்கு வாத்தியார் - சிறுகதை | My Vikatan
வாசகர்களை, எழுத்தாளர்களாக, பங்களிப்பாளர்களாக மாற்றும் விகடனின் `My Vikatan’ முன்னெடுப்பு இது. இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் அனைத்தும், கட்டுரையாளரின் தனிப்பட்ட கருத்துகள். விகடன் தளத்தின் கருத்துகள் அல்ல. - ஆசிரியர்.
"இப்பல்லாம், காலை டிபன் சாப்டமா? காப்பி குடிச்சமான்றத கூட பொண்டாட்டிகிட்ட கேட்டு கன்ஃபர்ம் பண்ண வேண்டி இருக்கு டாக்டர். அவ்ளோ ஞாபகமறதி வந்துட்டுது.
எந்த பள்ளில படிச்சேன், என் ஒண்ணாங்கிளாஸ் டீச்சரம்மா பேரு, ஏழாம் வகுப்பு படிச்சப்ப நானும் என் நண்பனும், வீட்ல நாலணா திருடி, ஒண்ணா சேர்ந்து அஞ்சிகல்லு தூரம் வெய்யில்ல நடந்துபோய் பார்த்த எம்.ஜி.ஆர் படத்தோட பேரு, அந்த டூரிங் கொட்டாயோட பேரு, எட்டாம் கிளாஸ்ல நான் லவ் லட்டர் கொடுத்த பொண்ணோட பேரு, அவ்ளோ ஏன், நா பியூசி ரிசல்ட்ட பேப்பர்ல பார்த்தப்ப போட்டிருந்த சட்டையின் கலர்கூட எனக்கு தெளிவா ஞாபகம் இருக்கு. ஆனா சமீபத்தில நடந்த சம்பவங்கள் ஏனோ ஒடனே ஒடனே மறந்து போகுது. ஒருநாள் ராத்திரி திடீர்னு எழுந்து உக்காந்துக்கிட்டு, "படையப்பால" ரஜினிக்கு ஜோடியா நடிச்ச பொண்ணு பேரு ஞாபகம் வராம, விடிய விடிய முழிச்சுச்சிட்டு யோசன பண்ணிக்கிட்டு உக்காந்திருந்தேன்னா பார்த்துக்கோங்க டாக்டர்!" என்று கவலையுடன் முறையிட்ட என் எஸ்.எஸ்.எல்.சி, கணக்கு வாத்தியார் `எவரெஸ்ட்’ சத்யமூர்த்தி சாரை (ஆறடி உயரம் தாண்டிய ஆசிரியர் என்பதால் நாங்கள் வைத்த பட்டப்பெயர்) இடைமறித்து,
"சார்! ப்ளீஸ் என்ன டாக்டர்னு கூப்டாதிங்க சார். வாடா போடான்னே கூப்டுங்க. நான் என்னிக்குமே உங்க அன்பார்ந்த மாணவன் சார்" என்றேன்.
அவரோ, "அதெல்லாம் பழைய கத. இன்னிக்கு நீங்க டாக்டர், நான் உங்க பேஷண்ட்" என்று அவருக்கே உரித்தான கண்டிப்பான ஆசிரியர் தொனியில் கூறி ஏதோ பெரிய ஜோக் அடித்தது போல் வாய்விட்டு சிரித்தார்.
நான் ராணுவ டாக்டராக தேர்வு செய்யப்பட்டு "லடாக்" எல்லைக்கு புறப்பட்டுச் செல்கையில், என்னை வழியனுப்ப, அவர் சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு வந்திருந்து, என் இருகரங்களையும் ஆதரவுடன் பற்றிக்கொண்டு, "ஈஸ்வர்! தாயகத்தை காப்பது பெற்ற தாயை காப்பதைக்காட்டிலும் ஆயிரமாயிரம் மடங்கு சிறந்தது" எனக் கூறி, கட்டியணைத்து ஆயிரம் ரூபாயை என் பாக்கெட்டில் திணித்தது, இன்றும் பசுமையாய் என் நினைவில் நிலைத்து நிற்கிறது.
பதினைந்தாண்டு ராணுவ சேவையை முடித்து மீண்டும் சென்னை வந்து, ஜமீன் பல்லாவரத்தில் கிளினிக் திறந்தபின், அவரை மீண்டும் சந்தித்தபோது, பெரும் ஆனந்தமுற்றேன்.
ஆனாலும் அவர் என்னை டாக்டர் என்றுதான் அழைப்பார். ஃபீஸ் வாங்க மறுத்தால்,"மருத்துவன் ஃபீசை கொடுக்காமப்போனா நோய் குணமாகாது" என்று சிரித்தபடி கூறி, என் சட்டை பாக்கெட்டில் வலுக்கட்டாயமாக திணித்துவிட்டுச் செல்வார்.
எழுபது வயதைக் கடந்திருந்த அவர், தன் ஜோல்னா பையில் கைவிட்டு நீண்ட போராட்டத்துக்குப் பிறகு லேப் ரிப்போர்ட்ஸை உருவி என்னிடம் நீட்டியபடி, "எல்லாம் நார்மலாத்தான் இருக்கு.. என்ன, இந்த சுகரும் கொலஸ்ட்ராலும் மட்டும் குறயவேமாட்டேன்னு அடம்பிடிக்குது." என்றார்.
"சார் இவ்ளோ கஷ்ட படுறீங்களே, உங்க மகன் இல்ல மகள துணைக்கு கூட்டிண்டு வந்திருக்கலாமே" என்றேன்.
அவரோ ஏதோ பெரிய ஹாஸ்யத்த கேட்டதுபோல், கௌரவம் படத்துல, வர பேரிஸ்டர் ரஜினிகாந்த் சிவாஜி சிரிப்பதுபோல் சிரித்து "அந்த கூத்த ஏன் கேக்கற, என் ஒரே பையன கஷ்டப்பட்டு ஐ.ஏ.ஸ் படிக்கவச்சி, பெரிய பணக்கார சம்பந்தம் புடிச்சி கல்யாணம் கட்டிவெச்சேன். ஆனா விளக்கேத்த வந்த புண்ணியவதிக்கோ, மாமனார் மாமியாரைக் கண்டாலே ஆகல. அவனும் எவ்வளவோ போராடிப் பார்த்தான். அவளோ டைவர்ஸ் வரைக்கும் போயிட்டா. இரண்டு குழந்தைங்க வேறா ஆயிடிச்சி. ஆகவே நாங்களே தலையிட்டு, "நீ கொழந்தக்குட்டியோட நல்லபடியா வாழ்ந்தா அதுவே எங்களுக்கு பரம சந்தோஷம்"னு அட்வைஸ் பண்ணி அவன அவளோட அனுப்பி வெச்சோம். இதே சென்னைல மாமியார் வீட்டோட அன்னிக்கி ஐக்கியம் ஆனவன்தான், இன்னிவரிக்கும், நாங்க உயிரோடு இருக்கமா இல்ல செத்தமான்னு? தெரிஞ்சிக்கக்கூட ஒரு நட வந்து எங்கள எட்டிப் பார்க்கல. இப்ப எந்த ஊர்ல, எந்த பதவில, என்னவா இருக்கானோ தெரியல" என்று அவர் ஒரே மூச்சில் கூறிமுடித்தபோது, அவர் கண்களில் தெரிந்த முதுமையின் பயத்தை, என்னால் துல்லியமாக உணர முடிந்தது.
நான் அச்சூழ்நிலையின் இறுக்கத்தை போக்க எத்தனித்து "சார் அந்த காலத்துல , நீங்க "ட்ரிக்னாமெட்ரி" எடுக்க ஆரம்பிச்சா, என்னைப் போன்ற வடிகட்ன மக்கு பையகூட ஆர்வமா கேப்பானே சார்! எஸ்.எஸ்.எல்.சில, கணக்கு பாடத்துல நூத்துக்கு நூறு சதவிகித மாணவர்கள பாஸ் பண்ண வச்சி சாதனை படைச்சீங்களே சார். அத எங்களால எப்டி சார் மறக்க முடியும்" என்று ஐஸ் வைத்து பேச்சை மாற்றி அவரை தேற்ற முயன்றேன். அவரோ அசிரத்தையாக தலையசைத்தபடி மேலே விட்டத்தை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தார்....
என் நினைவுகளோ, அவர் வகுப்பு எடுத்த பள்ளி நாள்களை நோக்கி மின்னல் வேகத்தில் காலப்பயணம் செய்தது....
"காஸ்கொயர் தீட்டா ப்ளஸ் சைன்ஸ்கொயர்" என சிம்மகுரல் ஒலிக்க, கையில் சாக்பீஸுடன் அவர் கண்முன் தோன்றினார். வகுப்பில் பின் ட்ராப் சைலன்ஸ். திடீரென கேட்ட சிரிப்பொலி அவர் கவனத்தை கலைக்க, டக்கென கரும்பலகையில் இருந்து 180 டிகிரி ரொட்டேட் செய்து அவர் எய்த சாக்பீஸ் அம்பு துல்லியமாக பயணித்து சிரித்தவனின் தலையை பதம் பார்த்தது. அவன் வலியால் தலையை தேய்த்தபடி எழுந்து நின்றான். அவன் வேறு யாருமல்ல சாட்சாத் அடியேன்தான்.
எவரெஸ்ட் சார் சாக்பீஸ் தாக்குதல் நடத்தினார் என்றால், அதை மிகப்பெரிய அவமானமாக கருதிய காலக்கட்டம் அது. அவர் நேராக என்னை நோக்கி படை எடுக்க, என் கைகால்கள் உதர துவங்கியது. அதற்கான மூலக்காரணம் யாதெனில், நான் கணக்கு நோட்ஸ் எடுக்காமல் என் சயன்ஸ் நோட்டில் மனிதனின் ஜீரண மண்டலத்தை, அப்போதுதான் வரைந்து முடித்திருந்தேன் என்பதால்தான்.
ஜோக் சொல்லி என்னை சிரிக்கவைத்து மாட்டிவிட்ட, பக்கத்து இருக்கை மாணவனோ, தனக்கு எதுவுமே தெரியாததுபோல் முகத்தை வைத்தபடி, காஸ்தீட்டாவில் கான்ஸன்ட்ரேட் செய்வதுபோல் பாவ்லா பண்ணிக்கொண்டிருந்தான்.
என்னை கோபத்துடன் நெருங்கிய அவர் கண்ணில் என் "ஜீரண மண்டல வரைபடம்" பட்டுவிட...சட்டென அவர் சாந்தமாகி "அட, இவ்ளோ அழகா தத்ரூபமா வரஞ்சிருக்கியே. சபாஷ்" என்று என் முதுகில் தட்டிக்கொடுத்து பாராட்டி..கணக்குல உனக்கு இன்டர்ஸ்ட் இல்ல.நீ பயாலஜியை நல்லா படிச்சி, நல்ல மார்க் வாங்கி டாக்டர் ஆயிடு" என வாழ்த்தினார்.
அவர் வாய்முகூர்த்தம் அப்படியே பலித்து நான் டாக்டராகி, இன்று அவருக்கே வைத்தியம் செய்வதை எண்ணி என் கண்கள் பனிக்க,....
"இன்சுலின் லோட் பண்ணட்டுமா சார்" என்ற என் நர்ஸ் உமாவின் வெங்கல குரல்கேட்டு இருவரும் நிகழ்காலம் திரும்பினோம்.
சிறிது நேர உரையாடலுக்கு பிறகு, அவர் மெல்ல எழுந்து "நான் கிளம்பறேன் டாக்டர்" என்று கூறியபடி, தன் ஜோல்னா பையை மறந்துவிட்டுட்டு என் கிளினிக்கின் பரிசோதனை அறையின் வாயிலை நோக்கி நடக்க எத்தனித்தார். நர்ஸ் உமா "சார் சார்! உங்க பையை விட்டுட்டிங்க,.. வழி அந்தப் பக்கம் சார்" என்று அவர் கரத்தை அன்புடன் பற்றி உதவி செய்ய முற்பட...
அவர் சட்டென கையை உதரித்தள்ளி "வேண்டாந்தாயி. நானே சமாளிச்சுக்குவேன்" என தன் இயலாமையிலும் சுயமரியாதையை இழக்க துணியாத கௌரவத்துடன் வெளியேற, அவள் மனசுகேக்காம அவர் தெருமுனை திரும்பும் வரை பார்வையாலேயே அவரை வழி அனுப்பி வைத்தாள்!
அவர் தந்து சென்ற ரிப்போர்ட்ஸை மீண்டும் ஒருமுறை ஆழமாக வாசித்தேன். எனக்கு திக்கென்று தூக்கிவாரிப்போட்டது.
ஆம். நான் சந்தேகித்தபடியே அவர் "அல்ஸீமர்(Alzeemer disease)" எனப்படும் வயோதிக "மறதி நோயால்" பீடிக்கப்பட்டதற்கான அறிகுறி ஆதாரங்கள் அதில் புலப்பட்டன.
இந்நோய், மூளையில் சேமித்து வைக்கப்படும் ஞாபக முடிச்சுகளை சிறிது சிறிதாக செயலிழக்கச்செய்து, ஒரு கட்டத்தில், நினைவுகள் அனைத்தையும் அறவே மறக்கடிக்க செய்துவிடும் ஒரு கொடிய நோய்.
தான் யார், தன்னை சுற்றி இருப்பவர்கள் யார் யார்? எங்கு இருக்கிறோம், என்ன செய்தோம், செய்கிறோம், செய்யப் போகிறோம்! உண்டோமா உடுத்தினோமா உறங்கினோமா ?, காலைக்கடன்களை கழித்தோமா? என முற்கால, இக்கால, பிற்கால நினைவுகள் எனும் முக்கால ஞாபகங்களும் மறந்துபோய், உற்றார் உறவினர், நட்புகள், உடமைகள், சொத்து சுதந்திரங்கள் என அனைத்தும் விஷயங்களும் சுத்தமா மறந்துபோய்விடும்.
இன்று புதிதாய் பிறந்த பச்சிளங்குழந்தைபோல், தன்னை தானே பராமரித்துக்கொள்ளும் தன்மையை இழந்து, முழுக்க முழுக்க பிறரை நம்பி வாழும் அபாய நிலைக்குத் தள்ளப்படும் ஆதரவற்ற நிலையை இந்நோய் ஏற்படுத்திவிடும். இந்நோய் முதுமை அளிக்கும் ஈவிரக்கமற்ற ஒரு சாபக்கேடு. இது பொதுவாக எல்லோருக்கும் வருவதில்லை. ஒருசிலருக்கு மட்டுமே ஏற்படும் ஓர் அபூர்வ நோய்!
என் கண்முன் எவரெஸ்ட் சார் மீண்டும் வந்து நின்றார்! எப்பேர்ப்பட்ட சிறந்த மனிதாபிமானமுள்ள ஆசிரியர் அவர். அரசுப்பள்ளியில் பயிலும் ஏழை மாணவர்களுக்கு , வழிகாட்டியாய் விடிவெள்ளியாய் வாழ்ந்த ஓர் உயர்ந்த மனிதர் அவர்.
ஒரு மாணவரைக்கூட அவர் கைதொட்டு அடித்ததில்லை, எந்த தண்டனையும் கொடுத்ததில்லை. ஆனாலும் அனைத்து மாணவர்களுக்கும் அவர்மேல் ஒரு மரியாதை கலந்த பயம் எப்போதும் உண்டு..அடிமட்ட முட்டாளையும் கணிதத்தில் தேர்ச்சிபெற வைத்த அதிசய ஆசான் அவர்.
சிறுவயதிலேயே அன்பு தந்தையை இழந்த, ஏழை மாணவனான என்னை, அறிவாற்றல் பெற அனைத்து ஆலோசனைகளையும் அன்பாய் வழங்கி, தேவையான நிதியுதவியும் செய்து, எம்.பி.பி.எஸ் மருத்துவனாக மாற்றியதில் பெரும்பங்கு ஆற்றியவர்.
அப்பேர்பட்ட அவருக்கு ஏன் கடவுள் இந்த வியாதியை கொடுக்கணும்.? இதை எவ்வாறு அவரிடமோ, அல்லது ஏற்கனவே நொடிந்து நோய்வாய்ப்பட்டு நாட்களை எண்ணி கொண்டிருக்கும் அவர் மனைவியிடமோ எடுத்து சொல்வது என கனத்த இதயத்துடன் யோசித்தபோது என்னையும் அறியாமல் என் கண்ணில் நீர் வழிவதைக்கண்ட, நர்ஸ் உமா "சார் என்ன ஆச்சி. உடம்பு கிடம்பு சரியில்லையா. காப்பி வாங்கி வரட்டுமா சார்" என குரல் கொடுக்க, நான் சகஜ நிலைக்கு திரும்பி, "அதெல்லாம் ஒண்ணுமில்ல. அடுத்த பேஷண்டை அனுப்புமா" என்றேன்.
அடுத்தநாள் அவர் மகனின் தொலைபேசி எண்ணை சிரமப்பட்டு தேடி கண்டுபிடித்து, தொடர்பு கொண்டு அவரிடம் பேசி, நிலைமையை விளக்கமாய் எடுத்துச்சொன்னேன்,
ஆனால் அவரோ அசுவாரஸ்யமாய், தன் மனைவியிடம் மந்திர ஆலோசனை செய்ய , அவரோ, "வயசானாலே இப்டி மூள கலங்கிபோவது சகஜம்தானே. அதற்கு நாம என்ன செய்ய முடியும்" என ஏதேதோ, பாசமின்றி நேசமின்றி பேசியது தெளிவாய் என் காதில் விழுந்தது.
கோபத்தில் டக்கென போனை கட் பண்ணிய நான், "சின்ன வயதில் எனை தவிக்கவிட்டு மறைந்த என் அன்புத்தந்தை, மீண்டும் எனக்கு "எவரெஸ்ட் வாத்தியார்" வடிவில் கிடைத்துவிட்டார். அவர் உருவாக்கிய ஒரு மருத்துவனாக, அவர் மாணவனாக, அவருக்கு உறுதுணையாய் அவருடனிருந்து அவர் கடைசி மூச்சுள்ளவரை, காப்பேன்!" என என்னுள் சங்கல்பம் செய்து கொண்டேன்.
( முற்றும்)
விகடனில் உங்களுக்கென ஒரு பக்கம்...
உங்கள் படைப்புகளைச் சமர்ப்பிக்க - my@vikatan.com என்ற மின்னஞ்சலுக்கு அனுப்புங்கள்!
ஏதோ ஓர் ஊரில், எங்கோ ஒரு தெருவில் நடந்த ஒரு விஷயம்தான் உலகம் முழுக்க வைரலாகிறது. உங்களைச் சுற்றியும் அப்படியொரு வைரல் சம்பவம் நடந்திருக்கலாம்... நடந்துகொண்டிருக்கலாம்... நடக்கலாம்..! அதை உலகுக்குச் சொல்வதற்காகக் களம் அமைத்துக் கொடுக்கிறது #MyVikatan. இந்த எல்லையற்ற இணையவெளியில் நீங்கள் செய்தி, படம், காணொளி, கட்டுரை, கதை, கவிதை என என்ன வேண்டுமானாலும் எழுதலாம். ஃமீம்ஸ், ஓவியம் என எல்லாத் திறமைகளையும் வெளிப்படுத்தலாம்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/E0QlpeNbGHnF9W5rFKCVSU
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள...
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்...