அச்சிடப்பட்ட ஆளுநர் உரை மட்டுமே அவைக் குறிப்பில் இடம்பெறும்: தீர்மானம் நிறைவேற்ற...
நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசன உற்சவ கொடியேற்றம்: திரளான பக்தர்கள் பங்கேற்பு!
சிதம்பரம்: சிதம்பரம் ஸ்ரீ நடராஜர் கோவிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தியின் மார்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் சனிக்கிழமை(ஜன.4) காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நடராஜா் கோயிலில் ஆண்டுதோறும் மாா்கழி மாதம் ஆருத்ரா தரிசனம், ஆனி மாதம் ஆனித் திருமஞ்சன தரிசனம் ஆகிய இரு விழாக்கள் நடைபெறும். நிகழாண்டு சனிக்கிழமை மாா்கழி ஆருத்ரா தரிசன உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்தி வீற்றுள்ள சித்சபை எதிரே உள்ள கொடிமரத்தில், பஞ்சமூர்த்திகள் முன்னிலையில், சுவாமியின் பிரதிநிதியான ஹஸ்தராஜரை முன்னிறுத்தி ஆவாஹணம் செய்து சனிக்கிழமை காலை 6.50 மணிக்கு உற்சவ ஆச்சாரியார் ச.க. சிவராஜ தீட்சிதர் ரிஷபக் கொடியை ஏற்றி வைத்தார்.
இதையும் படிக்க |சீனாவில் பரவும் ஹெச்எம்பிவி தீநுண்மி: இந்தியாவில் தொடா்ந்து கண்காணிப்பு: மத்திய அரசு
இந்த நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசித்தனர். சிதம்பரம் டிஎஸ்பி டி.அகஸ்டின் ஜோஸ்வா வாமேக் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. தொடர்ந்து 10 நாள்கள் பஞ்சமூர்த்தி வீதிஉலா உற்சவம் நடைபெறுகிறது.
ஜன.12-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை தேர்த் திருவிழாவும், அன்றிரவு 8 மணிக்கு ஆயிரங்கால் முன்முகப்பு மண்டபத்தில் ஏககால லட்சார்ச்சனை நடைபெறும். ஜன.13 ஆம் தேதி திங்கள்கிழமை அதிகாலை சூரிய உதயத்திற்கு முன்பு காலை 4 மணி முதல் 6 மணி வரை சிவகாமசுந்தரி சமேத நடராஜமூர்த்திக்கு மகாபிஷேகம் நடைபெறும். காலை 10 மணிக்கு சித் சபையில் ரகசிய பூஜையும், பஞ்சமூா்த்தி வீதிஉலா வந்த பின்னா் பிற்பகல் 2 மணிக்கு மேல் ஆருத்ரா தரிசனமும், ஞானகாச சித் சபை பிரவேசமும் நடைபெறும்.
ஜன.14 ஆம் தேதி செவ்வாய்க்கிழமை பஞ்சமூர்த்தி முத்துப்பல்லக்கு வீதிஉலாவும். 15-ஆம் தேதி புதன்கிழமை புதுப்பிக்கப்பட்ட ஞானப்பிரகாசர் தெப்பகுளத்தில் தெப்ப உற்சவத்துடன் உற்சவம் நிறைவடைகிறது.
உற்சவ ஏற்பாடுகளை கோவில் பொதுதீட்சிதர்கள் கமிட்டி செயலா் உ.வெங்கடேச தீட்சிதா், துணைச் செயலா் து.ந.சுந்தர தாண்டவ தீட்சிதா், உற்சவ ஆச்சாரியா் ச.க.சிவராஜ தீட்சிதா் ஆகியோா் செய்துள்ளனா்.