மாணவர்களை தடியடி நடத்தி விரட்டுவதா? தேர்வர்கள் போராட்டத்தில் பிரசாந்த் கிஷோர்!
பிகாரில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்களை விரட்ட லத்தியை பயன்படுத்தும் யுக்தியை மாநில அரசு கடைபிடிப்பதாக ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் தெரிவித்தார்.
நியாயமான கோரிக்கைகளுக்காக பொது இடத்தில் போராடுவது மாணவர்களின் உரிமை என்றும், இதனை தன்மானப் பிரச்னையாக மாநில அரசு பார்ப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
பிகாரில் டிச. 13ஆம் தேதி நடந்த ஒருங்கிணைந்த முதல்நிலைத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என பிகார் அரசு பணியாளர் தேர்வாணையத்துக்கு (பிபிஎஸ்சி) தேர்வர்கள் கோரிக்கை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பிகார் அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்தவர்களை காவல் துறையினர் தடியடி நடத்தி கலைத்தனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆணையத்தின் முன்பு நேற்று (டிச. 28) போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.
இந்நிலையில், இன்று தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி திடலில் தேர்வர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை ஜன் சுராஜ் கட்சியின் தலைவர் பிரசாந்த் கிஷோர் நேரில் சென்று சந்தித்தார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுடன் பேசிய பிரசாந்த் கிஷோர்,
நாங்கள் போராட்டத்தில் ஈடுபட இங்கு வரவில்லை. மாணவர்கள் இங்கு அமர்ந்துள்ளனர்; அவர்களை சந்திக்கச் சென்றோம். காந்தி திடல் பொதுவான ஓர் இடம். மாணவர்கள் சென்று முறையிட வேறு எந்த இடமும் இல்லாதபட்சத்தில், அவர்கள் பொது இடத்தில் கூடுகின்றனர். தேர்வர்கள் விவகாரத்தை மாநில அரசு ஏன் தன்மானப் பிரச்னையாகப் பார்க்கிறது என்று தெரியவில்லை. இது அவர்களையே அவர்கள் காயப்படுத்திக்கொள்வதற்குச் சமம்.
ஜனநாயகத்தின் தாயாக இருப்பது பிகார் மாநிலம். மாணவர்கள் தங்கள் மனதில் எழுந்ததைப் பேச உரிமையில்லை என்றால், அது லத்தி தந்திரம். அமைதியான முறையில் போராடுபவர்களை தடியடி நடத்தியா கலைப்பது. அதனால்தான் அவர்களுக்கு ஆதரவு நாங்கள் நிற்கிறோம் என பிரஷாந்த் கிஷோர் குறிப்பிட்டார்.
இதையும் படிக்க | சொல்லப் போனால்... மன்மோகன் சிங்: கருணை காட்டும் வரலாறு!