பிரபல மலையாள சின்னத்திரை நடிகர் ஓட்டல் அறையில் சடலமாக மீட்பு!
பிரபல மலையாள நடிகர் திலீப் சங்கர் தனது ஓட்டல் அறையிலிருந்து இன்று (டிச.29) சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
மலையாள சின்னத்திரையின் முன்னனி நடிகர் திலீப் சங்கர் இவர் பல்வேறு பிரபலமான சின்னத்திரை தொடர்களில் நடித்து வந்தார். மேலும், சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.
சின்னத்திரை படப்பிடிப்பிற்காக இவர் திருவனந்தபுரத்திலுள்ள தனியார் விடுதியில் கடந்த 4 நாள்களாக தங்கியிருந்ததாகக் கூறப்படுகிறது
இந்நிலையில், கடந்த இரு நாள்களாக அவருடன் நடிக்கும் நடிகர்கள் சிலர் அவரை செல்போனில் தொடர்புக் கொள்ள முயன்றுள்ளனர். ஆனால், அவர் எந்தவொரு அழைப்புக்கும் பதிலளிக்காததினால் சந்தேகம் ஏற்பட, அவர் தங்கியிருந்த ஓட்டல் அறைக்கு நேரில் சென்று பார்த்துள்ளனர்.
இதையும் படிக்க: கோயிலில் சிலிண்டர் வெடிப்பு: பலி எண்ணிக்கை 6 ஆக உயர்வு!
அங்கு, அவருடைய அறையிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனைத் தொடர்ந்து இன்று (டிச.29) காலை விடுதி ஊழியர்கள் அவரது அறையை திறந்து பார்த்ததில் திலீப் சங்கர் சடலமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் அங்கு விரைந்த காவல்துறையினர் அவரது உடலைக் கைப்பற்றி உடற் கூராய்விற்காக அனுப்பி வைத்தனர். மேலும், தடவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு அந்த அறையில் சோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதுகுறித்து, காவல்துறை அதிகாரி ஒருவர் கூறியதில் திலீப் சங்கரின் மரணத்தில் சந்தேகம் படும்படியான ஆதாரங்கள் எதுவும் கிடைக்கவில்லை என்றும் அவரது மரணத்திற்கான காரணம் உடற்கூராய்விற்கு பின்னரே தெரியவரும் எனவும் கூறினார்.