வட மாநிலங்களில் கடும் பனிப்பொழிவு! விமான, ரயில் சேவை பாதிப்பு!
Magnus Carlsen: FIDE விதி தளர்வால் கிடைத்த வாய்ப்பு... சாம்பியன் பட்டத்தைப் பகிர்ந்த கார்ல்சன்!
நியூயார்க்கின் வோல் ஸ்ட்ரீட்டில் சர்வதேச செஸ் கூட்டமைப்பு சார்பில் (FIDE) சார்பில், உலக ரேபிட் & பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டிகள் டிசம்பர் 26 முதல் 31 வரை நடைபெற்றது. இதில், உலகின் நம்பர் ஒன் செஸ் வீரர் மற்றும் ஐந்து முறை உலக சாம்பியன் பட்டத்தை வென்ற மேக்னஸ் கார்ல்சன் (Magnus Carlsen), கடந்த வெள்ளிக்கிழமை போட்டியில் பங்கேற்க ஜீன்ஸ் அணிந்து வந்ததால், ஆடை கட்டுப்பாட்டு விதிகள் காரணமாகத் தகுதிநீக்கம் செய்யப்பட்டார்.
முதலில், தலைமை நடுவர் அலெக்ஸ் ஹோலோவ்சாக் உடையை உடனடியாக மாற்ற கோரிக்கை வைத்தார். ஆனால், நடுவரின் கோரிக்கையை ஏற்க மறுத்ததால் கார்ல்சன் போட்டியிலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். கூடவே அவருக்கு 200 அமெரிக்க டாலர் அபராதமும் விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, மேக்னஸ் கார்ல்சன் உலக ரேபிட் மற்றும் பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். பின்னர், ஞாயிறு அன்று FIDE, ஜீன்ஸ் அணிந்து வரலாம் என ஆடைக்கட்டுப்பாட்டு விதிகளைத் தளர்த்தியது.
அதையடுத்து, நேற்று முன்தினம் 52 வயதான ஜெர்மன் கிராண்ட்மாஸ்டரான மைக்கேல் பெசோல்டுக்கு எதிரான ஆட்டத்தில் பங்கேற்க கார்ல்சன் ஒரு நிமிடம் தாமதமாக வந்தார். அதோடு, போட்டி நேரம் முடிய 27 நொடிகள் மீதமிருந்த நிலையில், கார்ல்சன் வெற்றியும் பெற்றார். வெற்றிக்குப் பின் பேசிய கார்ல்சன், ``மீண்டும் திரும்பி வருவது மகிழ்ச்சி தருகிறது" என்றும், ``புதிய ஜீன்ஸ் வங்கச் சென்றதால் வரத் தாமதமானது" என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், கடைசி நாளான நேற்று நடைபெற்ற இறுதிப்போட்டியில் கார்ல்சனும், இயன் நெபோம்னியாச்சியும் (Ian Nepomniachtchi) மோதினர். முதல் இரண்டு சுற்றுகளை வென்று கார்ல்சன் முன்னிலை வகிக்க, இயன் நெபோம்னியாச்சி அடுத்த இரண்டு சுற்றுகளை வென்று 2-2 என சமநிலைக்கு வந்தார். பின்னர், அடுத்தடுத்த மூன்று சுற்றுகளும் டிரா ஆனது.
இறுதியில், இருவரும் சாம்பியன் பட்டதைப் பகிர்ந்து கொள்ளலாம் என இயன் நெபோம்னியாச்சியிடம் கார்ல்சன் முன்மொழிந்தார். அதையடுத்து, நடுவர்கள் அந்த முன்மொழிவை ஏற்று, 2024 பிளிட்ஸ் செஸ் சாம்பியன்களாக இருவரையும் அறிவித்தனர். இதன்மூலம், பிளிட்ஸ் செஸ் சாம்பியன்ஷிப் வரலாற்றில், முதல்முறையாக சாம்பியன் பட்டம் பகிர்ந்துகொள்ளப்படும் முதல் நிகழ்வாக இது அமைந்தது. இருப்பினும், பலரும் இதனை விமர்சித்துவருகின்றனர்.
குறிப்பாக, அமெரிக்க கிராண்ட்மாஸ்டர் ஹான்ஸ் நீமன் (Hans Niemann), ``சதுரங்க உலகம் அதிகாரப்பூர்வமாக நகைச்சுவையாக இருக்கிறது. வரலாற்றில் ஒருபோதும் இது நடந்ததில்லை. மேலும், இந்த வாரத்தில் 2வது முறையாக செஸ் அதிகாரப்பூர்வ அமைப்பு ஒரு ஒற்றை வீரரால் கட்டுப்படுத்தப்படுகிறது என்பதை என்னால் நம்ப முடியவில்லை. ஒருவர் மட்டுமே உலக சாம்பியனாக இருக்க முடியும்!" என்று எக்ஸ் தளத்தில் FIDE-ஐ விமர்சித்திருக்கிறார்.