R.N.Ravi : ``குகேஷ் வென்றவுடன் இந்தியா முழுவதுமிருந்து எனக்கு போன் வந்தது!'' - ஆளுநர் ரவி பாராட்டு!
உலக செஸ் சாம்பியனாகியிருக்கும் குகேஷூக்கு கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பாராட்டு விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதில் பேசிய ஆளுநர், 'குகேஷ் வென்றவுடன் இந்தியா முழுவதுமிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் தனக்கு அழைப்புகள் வந்ததாக பேசியிருந்தார்.
குகேஷூக்கும் அவரது பெற்றோருக்கும் பொன்னாடை போர்த்தி பெருமாள் புகைப்படம் ஒன்றை ஆளுநர் பரிசாகக் கொடுத்தார்.
நிகழ்வில் குகேஷ் பேசுகையில், 'உலக சாம்பியன் ஆவது என்னுடைய சிறுவயது ஆசை. என்னுடைய அப்பா அம்மாதான் இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணம். 11 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் சாம்பியன்ஷிப் கோப்பையை இந்தியாவுக்கு கொண்டு வந்ததில் மகிழ்ச்சி. என்னுடைய பயிற்சியாளர் குழுவுக்கும் எனக்கு உதவியவர்களுக்குமே கூட இந்தத் தருணத்தில் நன்றி கூறிக்கொள்கிறேன்.' என்றார்.
தொடர்ந்து ஆளுநர் ஆர்.என்.ரவி பேசுகையில், 'குகேஷ் ஒட்டுமொத்த இந்தியாவையும் வெற்றியடைய வைத்திருக்கிறார். உலகளவில் இந்தியாவின் எழுச்சியை குகேஷின் வெற்றி வேகப்படுத்தியிருக்கிறது.
குகேஷ் சாம்பியனான போது இந்தியா முழுவதுமிருந்து எனக்கு நிறைய தொலைபேசி அழைப்புகள் வந்தது. காஷ்மீர், நாகலாந்து என எங்கிருந்தெல்லாமோ அழைத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். அவர் 140 கோடி இந்தியர்களையும் மகிழ்ச்சியடைய வைத்திருக்கிறார்.
மற்றவர்களுக்கு வாழ்க்கையென்றால் என்னவென்றே தெரியாத வயதில் நீங்கள் சாம்பியனாகி சாதனை படைத்திருக்கிறீர்கள். குகேஷிடம் தோற்றதைப் பற்றி நான் பெரிதாக கவலைக் கொள்ளவில்லை என டிங் லிரன் பேசியிருந்தார். அதிலிருந்தே குகேஷின் பண்பு என்னவென்பது அவர் என்ன மாதிரியான வீரர் என்னவென்பதை நம்மால் புரிந்துகொள்ள முடியும்.
அவர் நூறாண்டுகளுக்கு வாழ வேண்டும். அடுத்த தசாப்தங்களிலும் கூட அவர் இதே மாதிரி நிறைய வெற்றிகளை குவித்து பெருமை சேர்க்க வேண்டும். குகேஷின் பெற்றோர்களுக்கும் நான் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் வளர்ச்சியில் உங்களின் பங்கு அதிகமாக இருந்திருக்கிறது. எல்லா பெற்றோரும் தங்களின் பிள்ளைகளை டாக்டராக பொறியாளராக ஆக்க எண்ணும் போது நீங்கள் மட்டும் அவரின் திறமையை உணர்ந்து அவருக்கு உறுதுணையாக இருந்திருக்கிறீர்கள்.' என்று பாராட்டி பேசினார்.