முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `உங்களுக்கே தெரியாம இயக்கத்துல எவ்வளவோ நடக்குது!’ |அத்தியாயம் 5
தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவிய கேரக்டர்தான், 'விடுதலை பாகம் 1' மற்றும் 'பாகம் 2' திரைப்படங்களில் விஜய் சேதிபதி ஏற்றிருக்கும் பெருமாள் வாத்தியார் கேரக்டர். 1980'களில் வட தமிழ்நாட்டில் தமிழரசன் நிறைய இளைஞர்களை வசீகரித்து இந்த அமைப்புக்கு அழைத்து வந்தார். பிற்காலத்தில் இவர்களில் சிலர் சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் இணைந்தார்கள். இதைத் தொடர்ந்தே, கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சம்பவம் நிகழ்ந்தது. அந்த 2000-மாவது ஆண்டில் ஜூனியர் விகடனில் வெளியான தொடர் இது...
ராமசாமியை சுற்றி வளைத்த பத்து பேருமே அவரைவிடச் சின்ன வயசு பையன்கள். எல்லோருமே இயக்கத்தில் அவரால் சேர்த்து விடப்பட்டவர்கள். ரொம்பவே மரியாதை காட்டிவிட்டு, " என்ன தோழர்! எங்களுக்கெல்லாம் தெளிவான வழியைச் சொல்லிக் கொடுத்துவிட்டு, நீங்க விலகி எங்கேயோ போயிட்டீங்க? " என்று கேட்டார் அதில் ஒருவர்.
ராமசாமி பதில் பேசாமல் திரும்பி அவரை முறைத்தார். மையமாக ராமசாமி நிற்க, அவரைச் சுற்றி எல்லோரும் நிற்க, மௌனமாகச் சில நொடிகள் கரைந்தன.
" நான் போகலாமா? " - ராமசாமிதான் மௌனத்தை உடைத்தார்.
" இல்லை தோழர்! உங்களை ஒருத்தர் அவசரமா பார்க்க விரும்பறார். கூட்டிக் கிட்டு வரச் சொன்னார்... "
" நான் யாரையும் பார்க்கறதா இல்லை... பார்த்துப் பார்த்துப் பட்டது எல்லாம் போதும்... "
" அவர் பேரைச் சொன்னா, நீங்க கண்டிப்பா வருவீங்க! "
" யாராயிருந்தாலும் சரி... நான் வர்றதா இல்லை! "
" நிச்சயமா நீங்க வருவீங்க... தோழர் ' சு'தான் உங்களைக் கண்டிப்பா பார்க்கணும்னு சொன்னார்... ' '
ராமசாமியின் குரல் அப்படியே அடங்கிவிட்டது. ' சு ' என்கிற சுந்தரம், தமிழ்நாடு விடுதலைப்படை துவக்கப்பட்டபோதே அதில் இருந்த தலைவர். பலரும் செத்தும் பிடிபட்டும் போக, சுந்தரம் மட்டும் பதினைந்து வருடங்களாகச் சிக்காமல் தலைமறைவு வாழ்க்கையில் இருந்தவர். திடீரென வருவார். யாராவது சிலரைப் பார்ப்பார். ஆலோசனைகள் சொல்வார். சொல்லாமல் கொள்ளாமல் காணாமல் போய்விடுவார்.
இயக்கத்தில் அவர் சொல்வதுதான் வேதம். அதை யாரும் எதிர்க்க மாட்டார்கள் தமிழரசன் செத்துப்போன பிறகு ஒன்று மில்லாமல் போய்விட்ட இயக்கத்தை மீண்டும் செயல்பட வைத்தவர்.
ராமசாமி அவரைப் பார்த்தே வருடக் கணக்காகிறது. மீண்டும் ஒருமுறை அவரைப் பார்க்கப் போகிறோம் என்ற எண்ணமே எல்லாவற்றையும் மறந்து போக வைத்தது. தன் சைக்கிளைத் திருப்பினார் ராமசாமி. கூடவே, அவர் வாழ்க்கையும் திசைமாறிற்று.
இடையக்குறிச்சி கிராமத்தில் ஒதுக்குப்புறமாக ஒரு வீடு. வீட்டின் பின்கட்டில் இருந்த சின்ன ஆட்டுக் கொட்டகையில் ஒரு ஓலைப்பாய்மீது உட்கார்ந்திருந்தார் சுந்தரம். வறண்ட தலை... ஒழுங்குபடுத்தப்படாத மூன்று மாத தாடி.... கறுத்த மெலிந்த தேசம். ஒரு கையில் விரலிடுக்கில் புகையம் சிகரெட்... இன்னொரு கையில் குவளை ராமசாமி
பார்த்ததும் பரவசப்பட்டு ஏதும் பேசத்தோணாமல் அருகே போய் நின்றார்.
ஒரு படைத்தளபதி, தன் சிப்பாய்க்குக் கட்டளையிடுவது மாதிரி பேச ஆரம்பித்தார் சுந்தரம். " இங்கே பார் ராமசாமி! நான் சொல்றதைக் கவனமா கேட்டுக்கோ. ஏதோ சிலபேர் வாழ்க்கையைத் தியாகம் பண்றதுக்காகவும் பல பேர் அதை வெச்சு வசதியா வாழறதுக்காகவும் ஆரம்பிச்ச இயக்கம் இல்லை இது! தமிழ்நாட்டு விடுதலைப் போருக்குப் பணம் சேர்க்கப் போய்தான் தமிழரசன் செத்தார். அதன்பிறகு முன்னோடியா இருந்த லெனினும் செத்தார்.
இப்போ இயக்கத்தை முன்னோடியா இருந்து எடுத்துப் போறதுக்குச் சரியான ஆள் இல்லை. இளவரசன் போற பாதை சரியில்லை. அவன் சுயநலவாதி ஆயிட்டான். இயக்கத்துப் பேரைத் தப்பான வழிகளுக்குப் பயன்படுத்தறான். உன்னை மாதிரி ஒரு ஆள் தலைமையில இயக்கம் இருந்தாதான் இந்தக் கொள்கை விரோதிகளைக் களையெடுக்க முடியும்.
இதுக்காக நீ குடும்பத்தை விட்டுட்டு வரணுமேன்னு நினைக்க வேண்டாம். போலீஸ் இப்போ முன்ன மாதிரி இல்லை. கெடுபிடி ரொம்ப குறைஞ்சு இருக்கு. மூணு வருஷமா எந்த குண்டு வெடிப்போ, தாக்குதலோ பெரிய அளவில் இல்லை. அதனால இயக்கம் ஒண்ணுமில்லாம போயிட்டதா நினைக்கறாங்க.
நீ குடும்பத்தோட இரு. வேலைக்கும் பழைய மாதிரி போ. கூடவே, இயக்க வேலையையும் ரகசியமா வெச்சுக்கோ... "
கொம்புசீவி விடப்பட்ட ஜல்லிக்கட்டுக் காளை மாதிரி ஆனார் ராமசாமி. கொஞ்சம் கொஞ்சமாய் மீண்டும் பழைய நட்புகள் உயிர்த்து எழுந்தன. பகலில் ரேஷன் கடை வேலை... மாலையிலும் முன்னிரவிலும் இயக்க வேலை. தினமும் நேரம் கெட்ட நேரத்தில் வீட்டுக்கு வர, மீண்டும் வீட்டில் பூகம்பம்.
ஆனால், எல்லா தடைகளையும் மீறி இயக்கம் அவரை முழுமையாக ஆக்கிரமித்தது. புதிய ஆட்களைச் சேர்ப்பது, பிரசாரம், அவர்களுக்கு அரசியல் வகுப்பு எடுப்பது, அவர்களோடு ஊர் சுற்றுவது என்று வழக்கமாகிப் போக, ரேஷன் கடை வேலை பறிபோனது!
மீண்டும் குடும்பத்தை வறுமை இருள் சூழ்ந்தது. வீட்டு வருமானத்துக்காக, வாரியங்காவல் கிராமத்தில் ரோட்டு ஓர ஓட்டல் ஒன்றை ஆரம்பித்தார் ராமசாமி. ஆனால், தோழர்களுக்கு அதுவே இலவச அன்னசத்திரமாகிப் போனது. இளவரசனும் இன்னும் அவரோடு இருக்கும் ஆட்களுமே அடிக்கடி ஓட்டலுக்கு வருவார்கள்! புரட்சி இயக்கத்திலும் இருந்துகொண்டு, ஓட்டலும் நடத்தும் ராமசாமியை, ' பார்ட் டைம் புரட்சிக்காரன் ' என்று கிண்டலடிப்பார்கள். நன்றாகச் சாப்பிடுவார்கள். ஆனால், பில்லுக்குப் பணம் மட்டும் கண்டிப்பாகத் தரமாட்டார்கள். இவருக்கும் கேட்க வாய் வராது. விற்று முதலெடுத்த பணம், வாங்கின மளிகைக் கடனை அடைக்கவே போத வில்லை! ' ஓட்டலை மூடிவிட்டு வேறு தொழில் பார்க்கலாமா..? ' என்று ராமசாமி யோசித்துக் கொண்டிருந்த போதுதான், அவர் வாழ்க்கையில் மகத்தான அந்தத் திருப்பம் நிகழ்ந்தது.
அன்று ராமசாமி ஓய்வாக வீட்டில் படுத்திருந்தார். வாசலில் ஒரு கார் வந்து நின்றது. பரபரப்பாகி ராமசாமி எழுந்தபோது, காரிலிருந்து இறங்கியது அவரால் லேட்டஸ்ட்டாக இயக்கத்தில் சேர்த்து விடப்பட்ட பையன். ஒரு தட்டு நிறைய பழங்கள், ஸ்வீட் எடுத்து வந்து அவர் எதிரே வைத்துவிட்டு, " என்னை ஆசீர்வாதம் பண்ணுங்க அண்ணே! " என்றான் பணிவுடன்.
" என்ன விஷயம்? " ராமசாமி. " புதுசா முந்திரித்தோப்பு குத்தகைக்கு எடுத்திருக்கேன். நான் அதை வெச்சு நல்லா வரணும்னு ஆசீர்வாதம் பண்ணுங்க... "
" யாரோடது... "
" நம்ம ஊர் பிள்ளைமார் ஒருத்தர் பெண்ணாடம் போயி செட்டிலாகிட் டாரு. அவர் தோப்பு இவ்வளவு நாளா கொடுக்கூர் படையாச்சி ஒருத்தர்கிட்டே குத்தகைக்கு இருந்தது. அதை இப்போ பேருக்கு மாற்றியிருக்காரு. வருஷத்துக்கு ஒண்ணரை லட்ச ரூபாய் லாபம் வரும் அண்ணே... ' '
" எப்படி திடீர்னு உனக்குக் கிடைச்சது? "
" சொன்னா கோவிச்சுக்க மாட்டீங் களே? " இழுத்தான் அந்த இளைஞன். ராமசாமி அவன் முகத்தை ஊடுருவிப் பார்த்துவிட்டு, " சொல்லு... ' ' என்றார்.
" ரொம்ப நாளாவே அந்தத் தோப்பைக் குத்தகைக்கு எடுக்கணும்னு எனக்கு ஆசை. ஆனா, சொந்தக்காரர் தரலை. இந்தத் தடவை ' நான் உங்களோட சேர்ந்துட்டதைச் சொன்னேன். தோப்புக் காரர் மிரண்டுபோய் எனக்கே கொடுத் துட்டார். ஏற்கெனவே குத்தகைக்கு எடுத்தவரும் ஒதுங்கிட்டார்... "
ராமசாமிக்கு வந்த கோபத்தில், அவன் சட்டையை கொத்தாகப் பிடித்து முறுக்கினார். அவன் திமிறிக்கொண்டே நிதானமாகச் சொன்னான் : " அவசரப்படாம நான் சொல்ற நியாயத்தைக் கேளுங்க. உங்களுக்கே தெரியாம இயக்கத்துல எவ்வளவோ நடக்குது. இளவரசன் என்ன செய்யறார் தெரியுமா...? முழுக்கக் கட்டப் பஞ்சாயத்துதான். அதைத் தடுக்கத்தான் உங்களைத் தலைவர் ஆக்கினாங்க. ஆனா, உங்களுக்கும் தெரியாம அவர் பண்றது அதைத்தானே..?
பிரச்னைனு மோதிக்கிற ரெண்டு தரப்பையும் கூட்டிவெச்சுப் பேசறாரு. பிரச்னை எதுவானாலும் தீர்த்து வைக்கிறாரு. தீர்ப்பால யாருக்கு லாபமோ அவங்ககிட்ட பணம் வாங்கிக்கறாரு. எல்லா அரசியல்வாதியும் செய்யறதுதானே இது. இளவரசன் மாதிரியே நீங்களும் காசுக்காகச் செய்யணும்னு நான் சொல்லலை.
உங்களை நம்பி நான் வந்திருக்கேன். எனக்கு நல்லது செய்யலாம் இல்லையா...? என் குடும்பத்துக்கு நல்லது செய்யலாமில்லையா...? என்னை மாதிரி எத்தனை பேர் இருக்கோம்...?
உங்க பெயரைக் கேட்டாலே பெரிய ஆட்கள் நடுங்கறாங்க. இந்த மாவட்டம் பூராவும் இதுதான் நிலைமை. பெயருக்கே பயம் இருந்தா, நீங்க நேரா இறங்கிப் பிரச்னைகள்ல தலையிட்டா எப்படியிருக்கும்? நினைச்சுப் பாருங்க... நமக்குன்னு தனி கோர்ட்... தனி சட்டம்.... நாம சொல்றது தான் நியாயம்னு வெச்சுக்கோங்க. நிறைய பேர் பலனடை வாங்க. பலனடையறவங்க இயக்குத்துல சேருவாங்க.... ' '
அந்த இளைஞர் பேசிக்கொண்டே போக, ராமசாமியின் பிடி தளர்ந்துவிட்டது.
மேலும் சலசலக்கும்...!