அம்பேத்கரை வைத்து அரசியல் ஆதாயம் தேடுகிறதா பாஜக? - Decode | Amit shah | Ambedkar...
ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக இருக்க தகுதியற்றவர்! -பாஜக விமர்சனம்
ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக இருக்க தகுதியற்றவர் என்று பாஜக எம்பியும், மத்தியப் பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சௌகான் தெரிவித்துள்ளார்.
அம்பேத்கரை அவமதிப்பு செய்த மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்தும் அவர் பதவி விலகக்கோரியும், அம்பேத்கர் சிலையில் இருந்து மகர் திவார் வரை பேரணியாக வந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவை நடவடிக்கைகளில் பங்கேற்க உள்ளே செல்ல முயன்றனர். அப்போது, நுழைவு வாயிலில் அம்பேத்கரை காங்கிரஸ் தொடர்ந்து அவமதித்து வருவதற்கு கண்டனம் தெரிவித்து பாஜக எம்பிக்கள் போட்டி போராட்டம் நடத்தினர்.
இது தள்ளுமுள்ளாக மாறிய நிலையில், பாஜகவின் எம்பி பிரதாப் சந்திர சாரங்கி கீழே விழுந்ததில் தலையில் லேசான காயம் ஏற்பட்டது. அப்போது ராகுல் காந்தி தள்ளிய ஒரு எம்பி தன் மீது விழுந்ததால் தனக்கு காயம் ஏற்பட்டதாக பிரதார் சந்திர சாரங்கி தெரிவித்தார்.
பாஜகவின் தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக எம்பியும் மத்திய பிரதேசத்தின் முன்னாள் முதல்வருமாக சிவராஜ் சிங் சௌகான் பேசினார். அவருடன் மத்திய அமைச்சர்கள் பியூஸ் கோயல், அனுராக் தாக்குர், அனில் பலுனி ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதுபற்றி சிவராஜ் சிங் சௌகான் பேசுகையில், “பாஜக எம்பியைக் கீழே தள்ளிவிட்ட ராகுல்காந்தியின் அநாகரீகமான, வெட்கக்கேடான செயலால் அவர் மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக இருக்கவே தகுதியற்றவர்.
இதுபோன்ற செயல் இந்தியாவின் கலாசாரத்துக்கு எதிரானது. நாடாளுமன்றத்தில் உடல் வலிமையை காட்டக்கூடாது. ஜனநாயகத்தை காங்கிரஸ் எந்தத் திசையில் கொண்டு செல்கிறது என்று தெரியவில்லை.
நாகரீகமான சமுதாயத்தில் இதுபோன்ற நடத்தையை கற்பனை செய்துகூட பார்க்கமுடியாது. எங்களின் எம்பி பிரதாப் சாரங்கி கீழே விழுந்து தலையில் பலத்த காயம் அடைந்துள்ளார். அவர் அவசரச் சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். நான் அவரைப் பார்க்கச் சென்றபோது சுயநினைவின்றி இருந்தார்.
நாடாளுமன்ற வரலாற்றில் இது ஒரு கருப்பு நாள். ஜனநாயகம் அவமானப்படுத்தப்பட்டுள்ளது. ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியினரின் ரௌடி தனத்திற்கு வேறு உதாரணம் தேவையில்லை. இந்திய நாடாளுமன்ற வரலாற்றில் இது போன்ற செயலை பார்த்ததில்லை.
ஹரியாணா, மகாராஷ்டிரத்தில் தோல்வியடைந்ததால் அந்த விரக்தியை நாடாளுமன்றத்தில் காட்டக்கூடாது. இதனை நாங்கள் வன்மையாகக் கண்டிக்கிறோம்” என்றார்.