பழனி: சேதமடைந்த மின் கம்பம்; விகடன் சுட்டிக்காட்டிய மூன்றே நாளில் நடவடிக்கை எடுத்த அதிகாரிகள்!
விகடனில் செய்தி வெளிவந்த மூன்றே நாள்களில் சேதமடைந்த மின்கம்பம் சரி செய்யப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் பழனியில் உள்ள பொருந்தலாறு அணை பகுதியில், கூட்டுக் குடிநீர் திட்டத்திற்கு உட்பட்டது இந்த மின்கம்பம். பல கிராம மக்கள் வசித்து வரும் இந்தப் பகுதியில், கடந்த ஆறு மாத காலமாக படுமோசமாக சேதம் அடைந்த நிலையிலேயே இருந்தது இந்த மின்கம்பம். இதுகுறித்து அப்பகுதி மக்களிடம் விசாரித்த போது, ``இந்த மின்கம்பம் மிகவும் மோசமடைந்து விட்டது. சுற்றியுள்ள கான்கிரீட்டுகள் அனைத்தும் இடிந்து உள்ளே இருக்கும் இரும்பு கம்பிகள் வெளியே தெரியும் அளவுக்கு பழுதாகிக் காணப்படுகிறது.
எப்போது விழும் என்ற அச்சத்துடனே அருகாமையில் நாங்கள் வசிக்க வேண்டி இருக்கிறது. இது மழைக்காலம் என்பதால் மின்கம்பம் எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்பது மேலும் அச்சத்தைத் தருகிறது." என்று வேதனை தெரிவித்தனர். மேலும், ``இதனைச் சரி செய்யும்படி பலமுறைக் கேட்டோம். ஆனால், அதிகாரிகள் அலட்சியம் காட்டுகின்றனர். அருகிலுள்ள உள்ள வீட்டில் வசிப்பதற்கே பயமாக இருக்கின்றது. இதனால் எந்த ஒரு அசம்பாவிதமும் நடந்துவிடக் கூடாது. அதற்குள் அதிகாரிகள் கவனம் செலுத்தி, இதனை எங்களுக்கு சரி செய்து கொடுக்க வேண்டும்." என்று கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதுகுறித்து விகடனில் "சேதமடைந்த மின்கம்பம்.... அச்சத்தில் மக்கள் ... அலட்சியம் காட்டும் அதிகாரிகள்..." என்ற தலைப்பில் செய்தி ஒன்றினை டிசம்பர் 15-ம் தேதி வெளியிட்டிருந்தோம்.
இதனால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து, விகடனில் செய்தி வெளிவந்த மூன்று நாட்களில், (18.12.2024) சேதமடைந்த மின்கம்பத்தை அகற்றி புதிய மின்கம்பத்தை அமைத்துக் கொடுத்திருக்கின்றனர். இனிமேல் நாங்கள் அச்சத்தில் இருக்கத் தேவையில்லை என்று அப்பகுதி மக்கள் தங்களின் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.