அம்பேத்கர் குறித்த பாஜகவின் பேச்சு அதிர்ச்சி அளிக்கிறது: மமதா
அம்பேத்கரை அவமதிக்கும் வகையிலான பாஜகவின் பேச்சு அதிர்ச்சி அளிப்பதாக மேற்கு வங்க முதல்வர் மமதா பானர்ஜி தெரிவித்துள்ளார்.
மேலும், கிறிஸ்துமஸ் பண்டிகைக்கான விடுமுறையை ரத்து செய்த பாஜகவின் செயல் மிகவும் மோசமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
மேற்கு வங்க மாநிலம் ஆலன் பார்க் பகுதியில் கொல்கத்தா கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் மமதா பானர்ஜி கலந்துகொண்டார்.
அந்நிகழ்ச்சியில் மமதா பேசும்போது, பாபாசாகேப் அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பாஜக கருத்து கூறியுள்ளது அதிர்ச்சி அளிக்கும் வகையில் உள்ளது. மாநிலங்களவையில் பாஜகவின் இத்தகையப் பேச்சு சாதிய மற்றும் தலித் மக்களுக்கு எதிரான மனநிலையை காட்டுகிறது.
இதேபோன்று மற்றொரு விஷயமும் அதிர்ச்சி அளிக்கிறது. டிசம்பர் 25 ஆம் தேதி (கிறிஸ்துமஸ் பண்டிகை) விடுமுறை நாளாக இருந்தது. ஆனால், மத்திய அரசு அதனை ரத்து செய்துள்ளது. ஆனால், நாங்கள் அவ்வாறு செய்யமாட்டோம். எங்கள் மாநிலத்தில் டிச. 25 விடுமுறை நாளாகும். ஏனெனில் அனைவரும் அந்த நாளை மகிழ்ச்சியாகக் கொண்டாட வேண்டும் என நாங்கள் விரும்புகிறோம் எனக் குறிப்பிட்டார்.
அம்பேத்கர் குறித்த அமித் ஷாவின் பேச்சு மூலம் பாஜகவின் முகமூடி கிழிந்துள்ளதாக முதல்வர் மமதா பானர்ஜி ஏற்கெனவே தனது எக்ஸ் தளப் பக்கத்தில் விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.