ஆம்பூர் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்; நீதிமன்றத்தில் சரணடைந்த அதிமுக பிரமுகர் - நடந்தது என்ன?
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் அருகேயுள்ள வெங்கடசமுத்திரம் ஊராட்சி பகுதியைச் சேர்ந்தவர் விஜய் சீகன்பால். அ.தி.மு.க-வைச் சேர்ந்த இவர், மாதனூர் மேற்கு ஒன்றிய இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறையின் முன்னாள் நிர்வாகி. இவர் ஒரு நர்ஸிங் கல்லூரியையும் நடத்திவருகிறார். இந்த நிலையில், தன் கல்லூரியில் பயிலும் 17 வயது மாணவி ஒருவருக்குப் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக போக்சோ வழக்கில் சிக்கியுள்ளார் விஜய் சீகன்பால்.
பாதிக்கப்பட்ட மாணவி ஏழைக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரின் தந்தை ரைஸ்மில்லில் மூட்டை தூக்கும் கூலி வேலை செய்துவருகிறார். அவரின் தாய் வீட்டு வேலைக்குச் செல்கிறார். கடந்த டிசம்பர் மாதத்திலிருந்துதான் விஜய் சீகன்பால் நடத்தி வரும் நர்ஸிங் கல்லூரியில் சேர்ந்து லேப் டெக்னீஷியன் பயிற்சி பெற்றுவந்திருக்கிறார் மாணவி. இவருக்கு `வீஸிங்’ பிரச்னை இருக்கிறது. 11-1-2025 அன்று கல்லூரியில் இருந்தபோது, மாணவிக்குத் திடீரென வீஸிங் வந்திருக்கிறது.

இதையடுத்து, ஆம்பூர் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை எடுத்துக்கொண்டார். ஓரிரு நாள்கள் வீட்டிலேயே ஓய்வில் இருந்துவிட்டு உடல்நலம் ஓரளவு சீரான பிறகு, மீண்டும் கல்லூரிக்குச் செல்லத் தொடங்கினார் மாணவி. இந்த நிலையில், 20-01-2025 அன்று காலை 10 மணிக்கு, கல்லூரியில் தேர்வு நடந்திருக்கிறது. தேர்வு தொடங்கிய அரை மணி நேரத்துக்குள் மாணவிக்கு மீண்டும் குளிர் ஜுரம் வந்து மூச்சுத்திணறல் ஏற்பட்டிருக்கிறது. தேர்வறையில் இருந்த ஆசிரியை பெட்ஷீட் கொண்டுவந்து மாணவிக்குப் போர்த்தி விட்டிருக்கிறார். ஆனாலும், மாணவிக்கு நடுக்கம் குறையவில்லை.
இந்தச் சூழ்நிலையில், அங்கு வந்த கல்லூரி நிர்வாகி விஜய் சீகன்பால், தேர்வறைக்கு வெளியேயுள்ள மறைவான இன்னொரு தடுப்புப் பகுதியில் டேபிள் போடச் சொல்லியிருக்கிறார். பிறகு, மாணவியிடம் `அந்த டேபிளில் போய்ப் படுத்துக்கோ...’ என்று சொல்லியிருக்கிறார். `தேர்வு எழுதும் மற்ற மாணவிகளுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் இருப்பதற்காகத்தான் விஜய் சீகன்பால் அங்கே படுத்துக்கொள்ளச் சொல்கிறார்’ என்று நினைத்த மாணவியும், அந்த டேபிள்மீது போய்ப் படுத்துக்கொண்டிருக்கிறார்.
அடுத்த சில நிமிடங்களில், மாணவியின் உடல்நிலையைக் கேட்டுத் தெரிந்துகொள்வதைப் போல் விஜய் சீகன்பாலும் டேபிள் போடப்பட்ட பகுதிக்குச் சென்றிருக்கிறார். அங்கு குளிரில் நடுங்கிக்கிடந்த மாணவியின் சுடிதாரை வலுக்கட்டாயமாகக் களைந்து, பாலியல் வன்கொடுமையில் ஈடுபட முயன்றதாக பாதிக்கப்பட்ட மாணவியும் அவருடைய பெற்றோரும் ஆம்பூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்குச் சென்று விஜய் சீகன்பால் மீது எழுத்துபூர்வமாகப் புகார் கொடுத்தனர்.

சம்பவம் நடைபெற்றபோது அங்கு வந்த ஆசிரியை ஹேமா என்பவரும், இந்தக் கொடுமையைத் தடுக்காமல் விஜய் சீகன்பாலின் அத்துமீறலுக்கு உடந்தையாக இருந்ததாக மாணவி தனது புகாரில் சொல்லியிருந்தார். புகாரின் அடிப்படையில், உடனடியாக விஜய் சீகன்பால் மீது போக்சோ உள்ளிட்ட மூன்று பிரிவுகளின்கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதற்கிடையே, கைதுக்கு பயந்து விஜய் சீகன்பால் தலைமறைவாகிவிட்டார். உடந்தையாக இருந்த ஆசிரியை ஹேமா கைது செய்யப்பட்ட நிலையில், கடந்த ஒன்றரை மாதமாக தலைமறைவாக பதுங்கியிருந்த விஜய் சீகன்பால் நேற்றைய தினம் திருப்பத்தூர் நீதிமன்றத்தில் சரணடைந்தார். வரும் 25-ம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையிலடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து, விஜய் சீகன்பாலை போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
