``தேசிய விருது கிடைக்கும்னு நினைச்சாரு, ஆனா..." - கலை இயக்குநர் மறைவு பற்றி இயக்...
தஞ்சாவூர்: 10 வருட பகை; வெட்டிச் சாய்க்கப்பட்ட ரௌடி... கொலையாளியைப் பிடித்த பொதுமக்கள்!
தஞ்சாவூர் அருகே உள்ள ஏழுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் குறுந்தையன் (50). இவர் இன்று காலை தனக்கு சொந்தமான தோப்புக்கு, டூ வீலரில் சென்றார். அப்போது, பின்னால் வந்த கார் ஒன்று குறுந்தையன் சென்ற டூவீலர் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி குறுந்தையன் தடுமாறி கீழே விழுந்தார். இதையடுத்து, காரில் இருந்து அரிவாளுடன் இறங்கிய மர்ம நபர்கள் குறுந்தையனின் தலை, கை, கால் உள்ளிட்ட இடங்களில் சரமாரியாக வெட்டினர்.

தப்பித்து ஓட முடியாமல், குறுந்தையன் அலறியிருக்கிறார். அந்த சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் ஓடி வந்ததுடன் வெட்டிய மர்ம நபர்களை பொதுமக்கள் விரட்டிச் சென்றனர். இதில் வெட்டிய கும்பலில் ஒருவர் கீழே விழுந்துவிட அவரை பொதுமக்கள் பிடித்தனர். மற்றவர்கள் காரில் தப்பிச் சென்று விட்டனர். பட்டப்பகலில் சினிமாவை விஞ்சும் விதமாக கண்ணிமைக்கும் நேரத்தில் இந்தச் சம்பவம் நடந்து முடிந்தது. இந்நிலையில் குறுந்தையன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தக் கொலை குறித்து, தமிழ் பல்கலைக்கழக போலீஸார் விசாரணை மேற்கொண்டனர். இதில் பொதுமக்களால் பிடிக்கப்பட்டவர், புதுச்சேரி, ஆரோவில் பகுதியைச் சேர்ந்த வடிவேல் (38) என்பது தெரியவந்தது. இக்கொலைச் சம்பவத்தில், ராஜா மற்றும் அவரது நண்பர்களுக்குத் தொடர்பு இருப்பதாகவும், குறுந்தையன் நடவடிக்கைகளை வேவு பார்த்து கொலை செய்ததாகவும் வடிவேல் போலீஸிடம் தெரிவித்ததாகச் சொல்லப்படுகிறது. இதையடுத்து, கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவர்களைப் பிடிக்க 5 தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.
இது குறித்து போலீஸ் தரப்பில் விசாரித்தோம். நம்மிடம் பேசியவர்கள், ``குறுந்தையன் கடந்த 2013ம் ஆண்டில் உலகநாதன் என்பவரையும், 2014ல் உதயா என்பவரையும் தனது நண்பர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளார். தமிழ் பல்கலைக்கழக போலீஸாரின் ரௌடி பட்டியலில், குறுந்தையன் பெயர் இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், குறுந்தையன் செய்த கொலைக்குப் பழிக்குப் பழியாக காத்திருந்து பத்து வருடங்களுக்குப் பிறகு அவரைக் கொலைசெய்துள்ளனர். இது தொடர்பாக விசாரணை தொடர்ந்து வருகிறது. தப்பியவர்கள் பிடிப்பட்ட பிறகு முழு விபரம் தெரிய வரும்" என்றனர்.