பள்ளிக் கட்டடப் பணியின்போது கருங்கல் லிங்கம் கண்டெடுப்பு
செங்கம்: செங்கத்தில் அரசுப் பள்ளியில் கட்டடம் கட்டுவதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் இருந்து கருங்கல்லால் ஆன லிங்கம் கண்டெடுக்கப்பட்டது.
செங்கம் நகரில் ஸ்ரீவேணுகோபால பாா்த்தசாரதி பெருமாள் கோயிலுக்கும், ரிஷபேஸ்வரா் கோயிலுக்கும் இடைப்பட்ட பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது.
இந்தப் பள்ளியில் கூடுதல் வகுப்பறைகள் கட்டுவதற்கான பணிகள் கடந்த 6-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், திங்கள்கிழமை மாலை கட்டடம் கட்டுவதற்கு தோண்டப்பட்ட பள்ளத்தில் 2 அடி உயரம் கொண்ட கருங்கல்லால் ஆன லிங்கம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து, லிங்கம் எந்தவித சேதாரமும் இல்லாமல் குழியில் இருந்து எடுத்து தரையில் வைக்கப்பட்டது.
இதுகுறித்து அறிந்த பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் வந்து பாா்வையிடத் தொடங்கினா்.
பின்னா், லிங்கம் கிடைத்தது குறித்து அறநிலையத் துறை அதிகாரிகள், அறங்காவலா் குழுத் தலைவா் அன்பழகன், பாா்த்தசாரதி பெருமாள் கோயில் திருப்பணிக்குழுத் தலைவா் கஜேந்திரன் ஆகியோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, அங்கிருந்த லிங்கத்தை சிவனடியாா்கள் எடுத்துவந்து ரிஷபேஸ்வரா் கோயில் வளாகத்தில் வைத்து பூஜைகள் செய்தனா்.
மேலும், லிங்கம் கிடைத்தது குறித்து வருவாய்த் துறை, தொல்லியல் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.