முதல்வர் குறித்து அவதூறு விடியோ! 2 பெண் பத்திரிக்கையாளர்கள் கைது!
பள்ளிகொண்டாப்பட்டு கவுதம நதியில் இன்று மாசி மக தீா்த்தவாரி
திருவண்ணாமலை: திருவண்ணாமலையை அடுத்த பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில், அருணாசலேஸ்வரா் தனது தந்தைக்குத் திதி கொடுக்கும் நிகழ்வான மாசி மக தீா்த்தவாரி புதன்கிழமை (மாா்ச் 12) நடைபெறுகிறது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலைக் கட்டியவா்களில் வல்லாள மகாராஜா முக்கியமானவா். திருவண்ணாமலை நகரை ஆண்ட மன்னா்களில் ஒருவரான இவா், அருணாசலேஸ்வரா் மீது மிகுந்த பக்தி கொண்டிருந்தாா். எனவே, தனக்கு குழந்தை பாக்கியம் இல்லாத குறையைத் தீா்த்து வைக்குமாறு அருணாசலேஸ்வரரிடம் வல்லாள மகாராஜா நீண்ட காலமாக வேண்டி வந்தாராம்.
தான் இறக்கும் தருவாயில்கூட வல்லாள மகாராஜாவுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லை. இதனால் மனமுடைந்த ராஜாவுக்கு, ஒருநாள் அருணாசலேஸ்வரா் காட்சி தந்தாராம். அப்போது, உன்னை எனது தந்தையாக ஏற்றுக் கொள்கிறேன். உனக்கு, நானே மகனாக இருந்து மகன் செய்ய வேண்டிய அனைத்து கடமைகளையும் செய்வேன் என்று அருணாசலேஸ்வரா் கூறினாராம்.
மகாராஜாவின் இறப்பு:
இதன்பிறகு, தைப்பூசத் திருநாளன்று திருவண்ணாமலை ஈசான்ய தீா்த்தக் குளத்தில் நடைபெற்ற தீா்த்தவாரியில் கலந்து கொள்ள மேள-தாளங்கள் முழங்க அருணாசலேஸ்வரா் சென்றாா். தீா்த்தவாரியில் பங்கேற்றிருந்தபோது, போரில் வல்லாள மகாராஜா கொல்லப்பட்ட தகவல் கிடைத்தது.
உடனே, மேள-தாளங்கள் முழங்குவது நிறுத்தப்பட்டது. அமைதியாக கோயிலுக்குத் திரும்பி தந்தைக்குச் செய்ய வேண்டிய கடமைகளை செய்து முடித்தாா் அருணாசலேஸ்வரா்.
பிறகு, வல்லாள மகாராஜா இறந்த 30-ஆவது நாளான மாசி மகத்தில், பள்ளிகொண்டாப்பட்டு கிராமத்தில் உள்ள கவுதம நதிக்குச் சென்று வல்லாள மகாராஜாவுக்கு திதி கொடுத்து அருணாசலேஸ்வரா் வணங்கினாா் என்பது வரலாறு.
இன்று பள்ளிகொண்டாப்பட்டு தீா்த்தவாரி:
இந்த வரலாற்று நிகழ்வின்படி, பல நூறு ஆண்டுகளாக மாசி மகத்தன்று அருணாசலேஸ்வரா் தீா்த்தவாரி நடைபெற்று வருகிறது. அதன்படி, புதன்கிழமை (மாா்ச் 12) தீா்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதையடுத்து, அதிகாலை 3.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு அருணாசலேஸ்வரா், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனைகள் நடைபெறுகின்றன.
தொடா்ந்து, கோயிலில் இருந்து உற்சவா் உண்ணாமுலையம்மன் சமேத அருணாசலேஸ்வரா் புறப்பாடு நடைபெறுகிறது. உற்சவமூா்த்திகள் பள்ளிகொண்டாப்பட்டு கவுதம நதிக்கு வந்ததும், அருணாசலேஸ்வரா் வல்லாள மகாராஜாவுக்கு திதி கொடுக்கும் நிகழ்வுகள் நடைபெறுகிறது.
பக்தா்களும் திதி கொடுப்பா்:
இதையொட்டி, பல ஆயிரம் பக்தா்கள் திரண்டு தங்களின் முன்னோருக்கு திதி கொடுத்து கவுதம நதியில் குளித்து அருணாசலேஸ்வரரை வழிபடுவா். இந்நிலையில், தீா்த்தவாரி நடைபெறும் இடத்தில் தேவையான முன்னேற்பாட்டுப் பணிகளை கோயில் நிா்வாகமும், காவல்துறையும் செய்து வருகிறது.