US: ``ட்ரம்ப், ஜே.டி.வான்ஸ் இருவரும் புதினுக்காக செயல்படும் முட்டாள்கள்'' - சாடும் வான்ஸின் உறவினர்
உக்ரைன் கனிம வளங்களை அமெரிக்கா பயன்படுத்திக் கொள்ளும் ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா அதிபர் ட்ரம்ப்பை சந்திக்க உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்கா சென்றிருந்தார். அப்போது ட்ரம்புடன் அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் உடன் உருந்தார். வெள்ளை மாளிகையில் நடந்த இந்த சந்திப்பில், உக்ரைன் போர் அமைதி தொடர்பான பேச்சுவார்த்தையில் தொடங்கி பெரும் வாக்குவாதத்தில் முடிந்தது.
மூன்று வருடப் போரில் அமெரிக்காவின் உதவிக்கு உக்ரைன் நன்றி தெரிவிக்கவில்லை என்று குற்றம் சாட்டப்பட்டது. அதனால், கனிமவள ஒப்பந்தம் நிறைவேற்றாமலே இந்த சந்திப்பு முடிவடைந்தது. ட்ரம்ப், புதினின் குரலில் பேசுவதாக ஜெலன்ஸ்கி குற்றம்சாட்டியிருக்கிறார். இந்த நிலையில் இரு நாட்டின் அதிபர்களுக்கு மத்தியில் நடந்த இந்த விவாதம் உலகளவில் கவனம் பெற்றது.
இந்த நிலையில், உக்ரைன் அதிபரை அவமானப்படுத்தியதாக அமெரிக்காவின் துணை அதிபர் ஜே.டி.வான்ஸின் உறவினர் அமெரிக்க அதிபரையும், துணை அதிபரையும் விமர்சித்திருக்கிறார். ரஷ்யாவின் படையெடுப்பிற்குப் பிறகு உக்ரேனிய இராணுவத்துடன் மூன்று ஆண்டுகள் தன்னார்வத் தொண்டு செய்துவரும் நேட் வான்ஸ் - "அரசியல் தலைவர்களிடம், குறிப்பாக கேமராக்களுக்கு முன்னால் ஒரு குறிப்பிட்ட அலங்கார நிகழ்வுகள் இருக்கிறது. ஆனால், வெள்ளை மாளிகையில் என் உறவினரும், ட்ரம்பும், ஊடகங்களும் மற்றொரு நாட்டின் அதிபரை கையாண்ட விதம் எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை.

ட்ரம்ப்பும், ஜே.டி வான்ஸும் இருநாட்டு மோதலைக் கையாள்வதில் புதினுக்காக செயல்படும் பயனுள்ள முட்டாள்கள் போல் இருக்கிறார்கள். எனக்கு உக்ரைன் பிரச்னையில் ஒருவித ஈடுபாடு உண்டு. இது தீர்க்கப்படவேண்டியது. ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்கு நன்றி தெரிவிக்கவில்லை என்றக் குற்றச்சாட்டை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளமாட்டேன். தினமும் இரவில் மக்களிடம் உரையாற்றும் ஜெலன்ஸ்கி எங்களுடன் நிற்கும் நண்பர்களுக்கு நன்றி எனக் குறிப்பிடுகிறார்" எனத் தெரிவித்திருக்கிறார்.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
