Ambedkar : அமித் ஷா சர்ச்சைப் பேச்சு; கையிலெடுத்த எதிர்க்கட்சிகள் - பதறுகிறதா பாஜக?
`கற்பி... ஒன்றுசேர்... புரட்சி செய்..!' என்ற தாரக மந்திரத்தை முன்மொழிந்தது மட்டுமல்லாமல், அதன் வழி வாழ்ந்து காட்டியவர் சட்ட மாமேதை அம்பேத்கர். அவர் மறைந்து பல ஆண்டுகள் கடந்திருந்தாலும், இந்திய மக்கள் மனதில் அம்பேத்கர் பற்றவைத்த புரட்சித் தீ, அவர் இயற்றிய அரசியலமைப்பின் வழியாக இன்னும் எரிந்து கொண்டிருக்கிறது. அதுவும் கடந்த இரண்டு நாள்களாக அம்பேத்கரின் பெயர் இந்தியா முழுவதும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. நாடாளுமன்றத்தில் அமித் ஷா சொன்ன கருத்தும், அதற்கு எதிர்க்கட்சிகளும், தலித் அமைப்புகளும் பதிவிட்டு வரும் கண்டனங்களும் தேசிய அரசியலில் அனலைக் கிளப்பியிருக்கின்றன!
`அமித் ஷா பதவி விலக வேண்டும்!'
மாநிலங்களவையில் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ``இந்தக் காலத்தில் அம்பேத்கர், அம்பேத்கர், அம்பேத்கர்... என அவரின் பெயரைக் கோஷமிடுவது ஃபேஷனாகிவிட்டது. இத்தனை முறை அம்பேத்கர் பெயரைக் கூறியதற்குப் பதிலாகக் கடவுளின் பெயரைக் கூறியிருந்தால் அவர்களுக்கு (காங்கிரஸ்) சொர்க்கத்திலாவது இடம் கிடைத்திருக்கும்" என்று பேசியிருந்தார்.
இந்தக் கருத்து பெரும் சர்ச்சையைக் கிளப்ப, அமித் ஷாவுக்கு எதிராகக் கொந்தளித்தன இந்தியா கூட்டணிக் கட்சிகள். மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, ``அம்பேத்கரின் கருத்தியலையும், அரசியலமைப்பையும் ஒழிக்க நினைப்பவர்கள் இப்படித்தான் பேசுவார்கள். மனுதர்மத்தின்மீது நம்பிக்கை கொண்டவர்கள் அம்பேத்கர் பிரச்னையாகத்தான் தெரிவார்'' என்றிருந்தார்.
மாநிலங்களவையின் எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, `` அம்பேத்கர் அனைவருக்குமானவர். அமித் ஷா மன்னிப்புக் கேட்க வேண்டும். மோடிக்கு அரசியல் சாசனத்தின்மீது மரியாதை இருந்தால், நள்ளிரவு 12 மணிக்குள் அமித் ஷாவை பதவி நீக்கம் செய்ய வேண்டும். அப்போதுதான், மக்கள் அமைதியாக இருப்பார்கள்... இல்லையெனில், அம்பேத்கருக்காக உயிரைக் கொடுக்கத் தயாராக இருப்பவர்கள் ஏராளம் என்பதை பாஜக புரிந்துகொள்ள வேண்டும்'' என்று பேசியிருந்தார்.
தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின், ``அதிக பாவங்கள் செய்பவர்கள்தான் புண்ணியத்தைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். நாட்டைப் பற்றியும் மக்களைப் பற்றியும் அரசியல் சட்டத்தின் பாதுகாப்பு பற்றியும் கவலைப்படுவோர் புரட்சியாளர் அம்பேத்கர் பெயரைத்தான் சொல்வார்கள்! சொல்ல வேண்டும்!'' என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையாவோ, ``டாக்டர் அம்பேத்கர் பிறந்திருக்காவிட்டால், நான் முதலமைச்சர் ஆகியிருக்க முடியாது. மாடு மேய்த்திருப்பேன். மல்லிகார்ஜுன கார்கே, காங்கிரஸ் தலைவர் ஆகியிருக்க முடியாது. ஆலையில் வேலை பார்த்துக் கொண்டிருப்பார். நீங்கள்கூட உள்துறை அமைச்சர் ஆகியிருக்க முடியாது. ஊரில் காயலான் கடை நடத்தி இருப்பீர்கள். மோடி இன்னும் ரயில் நிலையத்தில் டீ விற்றுக் கொண்டிருந்திருப்பார்'' என்று குறிப்பிட்டிருக்கிறார். ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் லாலு பிரசாத் யாதவ், ``அமித் ஷாவுக்கு மன நலம் பாதித்துவிட்டது. அவர் உடனடியாக அரசியலிலிருந்து விலக வேண்டும்'' என்றிருக்கிறார்.
திரிணாமுல் காங்கிரஸ், உத்தவ் சிவசேனா, சமாஜ்வாடி உள்ளிட்ட கட்சிகளும் பா.ஜ.க-வுக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்திருக்கின்றன. காங்கிரஸ், தி.மு.க, வி.சி.க உள்ளிட்ட கட்சிகள் அமித் ஷா பதவி விலகக் கோரிப் போராட்டத்தை அறிவித்திருக்கின்றன. நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள், `அமித் ஷா பதவி விலக வேண்டும்' என்று போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
இந்தப் போராட்டத்தில், ஆளுங்கட்சி எம்.பிக்கள், எதிர்க்கட்சி எம்.பிக்கள் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதில், `இரண்டு பா.ஜ.க எம்.பிக்களை ராகுல் காந்தி தள்ளிவிட்டதில் காயம் ஏற்பட்டிருக்கிறது' என பா.ஜ.க குற்றம்சாட்டியிருக்கிறது. அதேபோல, ``என்னைத் தாக்கிய பா.ஜ.க எம்.பிக்கள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று மக்களவை சபாநாயகரிடம் புகாரளித்திருக்கிறார் மல்லிகார்ஜூன கார்கே.
விளக்கமளித்த அமித் ஷா
இதுவரை நாடாளுமன்றத்திலோ, பொதுவெளியிலோ தாங்கள் பேசிய கருத்துகள் சர்ச்சையாகும் பட்சத்திலோ, தங்களுக்கு எதிராக வரும் பெரும் குற்றச்சாட்டுகள் குறித்தோ பிரதமரோ, உள்துறை அமைச்சரோ அதற்கு வருத்தமோ, விளக்கமோ தெரிவித்ததில்லை. ஆனால் இம்முறை, சர்ச்சையைக் கிளப்பிய அமித் ஷாவுக்கு முன்பாக பதறியடித்துக் கொண்டு விளக்கமளித்திருந்தார் பிரதமர் மோடி.
``டாக்டர் அம்பேத்கரை நாங்கள் முழுமையாக மதிக்கிறோம். நாங்கள் இந்த நிலையில் இருப்பதற்கு அவர்தான் காரணம். அம்பேத்கரின் கனவுகளை நிறைவேற்றக் கடந்த 10 ஆண்டுகளாக பா.ஜ.க பணியாற்றி வருகிறது. ஆனால், அம்பேத்கரைக் காங்கிரஸ் கட்சி அவமதித்ததை நாட்டு மக்கள் நன்றாக உணர்ந்திருக்கிறார்கள். அதை மறைக்கவே காங்கிரஸ் தற்போது முயற்சி செய்கிறது. அம்பேத்கரை இரண்டு முறை தேர்தலில் தோற்கடித்தது காங்கிரஸ்தான். அவருக்குப் பாரத ரத்னா விருது வழங்காததும் காங்கிரஸ் அரசுதான்'' என்று எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார் மோடி.
அமித் ஷாவோ, ``காங்கிரஸ் உண்மையைத் திரித்து வெளியிட்டுவருவதைக் கடுமையாகக் கண்டிக்கிறேன். அம்பேத்கரை எதிர்த்து வந்தது காங்கிரஸ் கட்சிதான். தேர்தல் சமயத்தில் எனது கருத்தை ஏ.ஐ. மூலம் திரித்து வெளியிட்டனர். இன்று நான் பேசியதன் ஒரு பகுதியை மட்டும் வைத்துக்கொண்டு திரித்து வெளியிடுகின்றனர். கார்கே என்னை ராஜினாமா செய்யச் சொல்கிறார். அதுதான் அவருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தும் என்றால் நான் ராஜினாமா செய்யக்கூடத் தயார். ஆனால், அது அவரின் பிரச்னைகளைத் தீர்க்காது'' என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.
குழப்பத்தில் கூட்டணிக் கட்சிகள்?
அமித் ஷாவின் சர்ச்சைக் கருத்து விவகாரத்தில் கடும் எதிர்ப்புகளைப் பதிவு செய்த அரவிந்த் கெஜ்ரிவால், பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்திருக்கும் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, பீகார் முதல்வர் நிதிஷ் குமார் ஆகியோருக்கு கடிதம் எழுதியிருக்கிறார். அதில், ``பாபாசாகேப் அம்பேத்கர் ஒரு தலைவர் மட்டுமல்ல... அவர் நமது நாட்டின் ஆன்மா. அம்பேத்கரை வணங்குபவர்களால் இனி பாஜகவை ஆதரிக்க முடியாது. பாபாசாகேப் அம்பேத்கரை அவமதித்த அமித்ஷாவை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? பா.ஜ.க-வின் இந்த அவமதிப்புக்குப் பிறகு, நீங்கள் ஆழமாகச் சிந்திப்பீர்கள் என்று மக்கள் எதிர்பார்க்கிறார்கள்'' என்று தெரிவித்திருக்கிறார்.
இது குறித்துப் பேசும் அரசியல் பார்வையாளர்கள் சிலர், ``அம்பேத்கர் அனைவருக்குமான தலைவர் என்றாலும், சில அரசியல் கட்சிகள், அவரை முன்னிறுத்தி தலித் மக்களின் வாக்குகளை அறுவடை செய்ய முயல்கின்றன. அந்த வகையில், டெல்லி சட்டமன்றத் தேர்தலில் தலித் மக்களின் வாக்குகளை அறுவடை செய்யும் முயற்சியில் இறங்கியிருக்கிறது பா.ஜ.க. அங்கு, காங்கிரஸ், பகுஜன் சமாஜ் கட்சிகளின் வசமிருக்கும் தலித் வாக்குகளை தங்கள் பக்கம் திருப்ப, குழுக்கள் அமைத்து தலித் மக்கள் வசிக்கும் பகுதிகளில் தீவிரப் பிரசாரம் மேற்கொள்கிறது பா.ஜ.க. அரசியல் சாசன தினமான நவம்பர் 26-ம் தேதி இரவு முழுவதும் டெல்லியில் தலித் மக்கள் வசிக்கும் குடிசைப் பகுதிகளில் தங்கியிருந்து, அந்த மக்களுடன் உணவருந்தி, அவர்களின் குறைகளைக் கேட்டிருக்கிறார்கள் பா.ஜ.க நிர்வாகிகள்.
வேறு சில மாநிலங்களிலும் காங்கிரஸ் வசமிருந்த தலித் மக்களின் வாக்குகளில் கணிசமான அளவு பா.ஜ.க பக்கம் திரும்பியிருக்கின்றன. பா.ஜ.க-வுடன் கூட்டணியிலிருக்கும் தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம், லோக் ஜன் சக்தி (ராம்விலாஸ்), இந்தியக் குடியரசுக் கட்சி (அத்வாலே) ஆகிய கட்சிகளுக்கும் கணிசமான தலித் வாக்கு வங்கி இருக்கிறது. அமித் ஷாவின் இந்தச் சர்ச்சைக் கருத்து, அம்பேத்கரின் பற்றாளர்களிடம் பெரும் கோபத்தை உண்டாக்கியிருப்பதால், என்.டி.ஏ கூட்டணியின் வாக்கு வங்கிக்கு ஆபத்து வந்துவிடுமோ என்ற பதற்றம் பா.ஜ.க-விடம் தென்படுகிறது. அதனால்தான் பிரதமரும், உள்துறை அமைச்சரும் உடனடியாக விளக்கம் கொடுத்திருக்கிறார்கள். இது தேசிய அளவில் பா.ஜ.க-வுக்கு ஒரு பின்னடைவு ஏற்படுத்தியுள்ளது.'' என்கிறார்கள்.