பிக் பாஸ் 8: இந்த வாரத்தில் 4 குறும்படங்கள்?
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சியின் இந்த வாரத்தில் 4 குறும்படங்கள் வர வாய்ப்புள்ளதாக ரசிகர்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இந்த வாரத்தில் கோட்டை கட்டும் போட்டியின்போது தன்னிலை மீறி நடந்துகொண்ட ஜெஃப்ரி, தீபக், அன்ஷிதா, ராணவ் ஆகியோரின் குறும்படம் இந்த வாரம் வெளியாக வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.
போட்டியில் மோதல்
பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி 73வது நாளை எட்டியுள்ளது. இந்த வாரத்துக்கு வி.ஜே. விஷால் கேப்டனாக செயல்பட்டு வருகிறார்.
இந்த வாரத்துக்கான டாஸ்க்கில் கோட்டை கட்டும் போட்டி வைக்கப்பட்டுள்ளது. இதற்காக கற்களும் பிக் பாஸ் சார்பில் அனுப்பப்படுகிறது.
இந்தப் போட்டியில் வீட்டில் உள்ள 13 போட்டியாளர்கள் 3 பேர் கொண்ட அணிகளாகப் பிரிந்து விளையாடி வருகின்றனர். மூன்று நாள்களுக்கு நடைபெறும் இப்போட்டி இரண்டு நாள்களைக் கடந்துள்ளது. கடந்த இரு நாள்களுமே மோதலும் சச்சரவுமாகவே முடிந்தது.
மஞ்சரியுடன் அணிசேர்ந்து விளையாடிய ராணவ்வுக்கு ஜெஃப்ரியுடன் ஏற்பட்ட மோதலில் தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. அவரை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதால் பிக் பாஸ் போட்டியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். கையில் கட்டுடன் பிக் பாஸ் வீட்டிற்கு வந்த ராணவ் ஓய்வில் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளார். இதனால் போட்டியில் இருந்து விலக்கப்பட்டுள்ளார்.
நேற்றைய போட்டியில் தீபக்கை கீழே தள்ளிவிட்டார் ஜெஃப்ரி. ஆனால், அது தெரியாமல் நடந்ததாக ஜெஃப்ரி மன்னிப்பு கோரினார். இதேபோன்று ரஞ்சித், கற்களை தூக்கி வீசியதில், அருண் பிரசாத்துக்கு கையில் காயம் ஏற்பட்டது.
4 குறும்படங்களுக்கு வாய்ப்பு
பிக் பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய போட்டியில் அன்ஷிதா - ஜாக்குலின் உடனான மோதல் உச்சத்தை எட்டியது. இதில் யார் மீது தவறு உள்ளது என்பதை வார இறுதி நிகழ்ச்சியின்போது விஜய் சேதுபதி விசாரிப்பார்.
பிக் பாஸ் நிகழ்ச்சியில் ஒரு சம்பவத்தின் அடிப்படையில் நடக்கும் விசாரணையின்போது உண்மை என்ன என்பதை அறிய குறும்படம் ஒளிபரப்பப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த வாரம் 4 குறும்படங்கள் வரை வெளியிடப்படலாம் என ரசிகர்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.
இந்த வாரம் முழுவதுமே போட்டியாளர்களிடையே மோதல் போக்கு நீடித்து வந்ததால், ரசிகர்கள் இவ்வாறு குறிப்பிட்டுள்ளனர்.
இதையும் படிக்க | விஜய் சேதுபதியின் அறிவுரைப்படி விளையாடும் ரஞ்சித்! ரசிகர்கள் கிண்டல்!