டேய் தகப்பா.. என்னடா இதெல்லாம்... அஸ்வின் நகைச்சுவைப் பதிவு!
முந்திரிக்காடு டு சந்தனக்காடு : கீழ்குவாகம் ராமசாமி... விதி சொடக்குப் போட்டு அழைத்தது | அத்தியாயம் 2
தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவிய கேரக்டர்தான், 'விடுதலை பாகம் 1' மற்றும் 'பாகம் 2' திரைப்படங்களில் விஜய் சேதிபதி ஏற்றிருக்கும் பெருமாள் வாத்தியார் கேரக்டர். 1980'களில் வட தமிழ்நாட்டில் தமிழரசன் நிறைய இளைஞர்களை வசீகரித்து இந்த அமைப்புக்கு அழைத்து வந்தார். பிற்காலத்தில் இவர்களில் சிலர் சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் இணைந்தார்கள். இதைத் தொடர்ந்தே, கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சம்பவம் நிகழ்ந்தது. அந்த 2000-மாவது ஆண்டில் ஜூனியர் விகடனில் வெளியான தொடர் இது...
அரியலூர் மாவட்டம்... ஜெயங்கொண்டத்திலிருந்து செந்துறை போகிற ரோட்டில் வடக்கால் வெட்டித் திரும்பும் பாதை. பாதையின் இருமருங்கிலும், நம்பி நுழைகிற ஆட்களை விசுவாசமாகப் பாதுகாக்கும் முந்திரிக் காடுகள். பகலில்கூட மனித சஞ்சாரமே இல்லாத நடுக்கமூட்டும் சூழல். அதில், பதினோரு கிலோமீட்டர் பயணித்தால், கீழ்குவாகம் கிராமம். ஊரின் முகப்பிலேயே இருக்கும் அரசமரத்தைத் தாண்டி இடதுகை பக்கம் திரும்பினால், அங்கு சின்னதாக ஒரு ஓட்டுவீடு. நான்கு பேர் தாராளமாகப் படுக்கக்கூடிய ஒரு அறை. முன்புறம் ஒரு வராண்டா. அதில், நைந்துபோன ஒரு கயிற்றுக் கட்டில். சாயம் போன புடவையும் வெற்றுக் கழுத்து மாக உட்கார்ந்திருந்தார் அந்தப் பெண்மணி. கீழ்குவாகம் ராமசாமியின் மனைவி ராணி.
" என் மாமனுக்கு நேர்ந்த மாதிரி கோரமான சாவும், அதை ரெண்டு கண்ணால பார்க்கிற துர்ப்பாக்கியமான நிலைமையும் எந்தப் பொம்பளைக்கும் வரக்கூடாது. அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை. 97 - ம் வருஷம், ஜூன் மாசம், எட்டாம் தேதி. அவருக்கு அன்றைக்கு இருபத்தெட்டாவது பிறந்த நாள். என்கிட்டேயும் குழந்தைகள்கிட்டேயும் ரொம்ப சந்தோஷமா சிரிச்சுப் பேசிட்டுக் கிளம்பிப்போனார்.
' பக்கத்துல வல்லம் கிராமத்துல ஒரு கல்யாணம். போயிட்டு வரும்போது பிள்ளைகளுக்கு மிட்டாயும் ஸ்வீட்டும் வாங்கிட்டு வர்றேன்'னு சொல்லிட்டுப் போனார். அரைமணி நேரத்துல சாவு சேதி வருது. பதறி அடிச்சுக்கிட்டு, மூணு மைல் தூரம் ஓட்டமாக ஓடிப்போய்ப் பார்க்கிறேன். ' பைக்'ல ராஜா மாதிரி போன என் மாமன், ரோட்டுல சரிஞ்சு கிடக்கிறார்.
வல்லம் போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூப்பிடு தூரத்துல அவரைக் கொன்னு போட்டுட்டாங்க. காலையில எட்டரை மணி வெளிச்சத்துல, ஊருக்கு நடுவுல, போற - வர்றவங்க விக்கித்து வேடிக்கை பார்க்க... ஏழு பேர் சேர்ந்து வெட்டிக் கொன்னுருக்காங்க. காலிலேருந்து கழுத்து வரைக்கும் உடம்பு பூராவும் வெட்டுக் காயம்... அரிவாளால குத்திக் குதறியிருந்தாங்க. அந்த ரோடே ரத்தக்குளமாகியிருந்தது.
கொலைவெறி பிடிச்ச பாவிங்க..... தலையைத் தனியா வெட்டி, நசுக்கித் தூர வீசியிருந்தாங்க. ரெண்டும் நிலைகுத்திப் போய், என்னையே பார்க்கிற மாதிரி பிரமை. அப்படியே மயக்கமாகிச் சரிஞ்சுட்டேன். மாமன் என்னைவிட்டுப் போயி மூணு வருஷத்துக்கும் மேலே ஆயிடுச்சு. இன்னிக்கு அதை நினைச்சாலும் உடம்பு வெடவெடங்குது... " கணவரின் படுகொலை குறித்து நம்மிடம் சொன்ன ராணியின் குரலில் நடுக்கம்.
தமிழகத்தின் வடமாவட்டங்களில் 1989 - லிருந்து 97 வரை போலீஸாரை நடுநடுங்க வைத்த பெயர்தான் கீழ்குவாகம் ராமசாமி என்கிற குணசேகரன். தமிழ்நாடு விடுதலைப் படையின் முக்கியத் தலைவர்களில் ஒருவர். கெச்சலான உடல்வாகு, பென்சிலால் கோடு போட்ட மாதிரி மெல்லிய மீசை, கிராமத்து அப்பாவி விவசாய இளைஞனுக்கே உரித்தான முகத்தோற்றம். ஆளைப் பார்த்தால், ' இவரா தீவிரவாதி...? ' என்று திகைப்பில் மூச்சடைத்துப் போகும். பேச்சிலேயே எல்லோரையும் வசியப்படுத்துகிற சாமர்த்திய தன்மை இருந்தது. அதுதான் அவரைத் தலைவராக்கியது.
1987 - ம் ஆண்டு, மார்ச் மாதம் பதினைந்தாம் தேதி அதிகாலை..... அரியலூர் அருகே மருதையாற்றுப் பாலம் குண்டு வைத்துத் தகர்க்கப்பட்டதால், திருச்சி வந்து கொண்டிருந்த மலைக்கோட்டை எக்ஸ்பிரஸ், சரிந்து விழுந்தது. இந்த விபத்தில் இறந்தது இருபத்தேழு பேர். இந்தக் குண்டுவெடிப்பை நிகழ்த்தியது, தமிழ்நாடு விடுதலைப் படை. குண்டு வெடித்த அன்று முன்னிரவில், அரியலூர் நகரில் அரசை எதிர்த்து போஸ்டர் ஒட்ட இரண்டு பேர் போனார்கள். அவர்களோடு பசைவாளியைத் தூக்கிக்கொண்டு இரண்டு விடலைப் பையன்கள் போனார்கள். அந்த விடலைப் பையன்கள்தான் ராமசாமியும் இளவரசனும். அன்றிருந்த தலைவர்களில் சிலர், பிறகு வெவ்வேறு சூழல்களில் செத்துப் போனார்கள். சிலர் தலைமறைவானார்கள்.
இந்தச் சூழல் ராமசாமியையும் இளவரசனையும் சீக்கிரமே தலைவர்களாக்கிவிட்டது. கீழ்குவாகத்திலிருந்து மூன்றே கிலோமீட்டரில் இருக்கும் வல்லம், இளவரசனுக்கு சொந்த ஊர். அந்தக் காலகட்டத்தில், தமிழகத்தின் வடமாவட்டங்களில் உள்ள நேரு, காந்தி சிலைகள் திடீர் திடீரெனக் குண்டு வைத்துத் தகர்க்கப்படும்.
நள்ளிரவு நேரங்களில் திடீரெனத் தண்டவாளத்தில் குண்டு வெடிக்கும். ரயில்வே ஸ்டேஷன், தொலைக்காட்சி, அஞ்சல் நிலையம் என்று மத்திய அரசு அலுவலகங் களில் குண்டு வெடித்துப் பெரும் சேதமாகும். உள்ளே ஆட்கள் இருக்கும் போதே, போலீஸ் ஸ்டேஷன்கள் மீது குண்டு வீசப்படும். எல்லா இடங்களிலும் சொல்லிவைத்த மாதிரி சிவப்பு மையால், கிறுக்கலாகக் கையால் எழுதிய சில போஸ்டர்களை வீசி விட்டுப் போவார்கள். ' தமிழ்நாடு விடுதலைப் படை ' என்று பெயர் இருக்கும் அதில்!
இப்படி எந்த ஊரில் குண்டு வெடித்து, என்ன சேதம் என்றாலும் அதில் முக்கியக் குற்றவாளிகளாக ராமசாமி, இளவரசன் பெயர்கள் இருக்கும்! தலைகீழாக நின்றாலும் போலீஸ் இவர்களைப் பிடிக்க முடியவில்லை. காரணம், இவர்களுக்கு அடைக்கலம் கொடுத்த முந்திரிக்காடு. தரைவரை படர்ந்து கிளைத்துப் புதராக இருக்கும் முந்திரிச் செடி. செடிக்கு அடியில், தரையில் படுத்துக் கொண்டால்கூட ஆள் இருப்பது தெரியாது. உறுதியான செடியின் உச்சியில் பார்த்தால், வெகு தூரத்தில் வெளியாட்கள் யாராவது வந்தாலும் தெரிந்துவிடும்.
முந்திரித் தோப்பைக் குத்தகை எடுத்தவர்கள் சின்னதாக ஒரு கொட்டகை போட்டிருப்பார்கள். முந்திரிக் கொட்டை பறிக்கும் பிஸியான நான்கு மாத சீஸன் தவிர, மற்ற நேரங்களில் அந்தப் பக்கம் ஆள் வராது. இந்தக் கொட்டகைகள் தீவிரவாதிகளின் கூடாரங்கள் ஆகிவிடும்.
தோப்பைக் குத்தகை எடுத்தவரேகூட, அந்தக் காலங்களில் காட்டுக்குள் கால்வைக்கப் பயப்படுவார். அவ்வளவு ஏன்...? போலீஸேகூடக் காட்டுக்குள் போக யோசிக்கும். ஆனால், இவர்களுக்குச் சாப்பாடு கொண்டு போகிறவர்கள், இவர்களைப் பார்க்கப் போகிற இயக்கத்து ஆட்கள் எல்லோருக்கும் வழி, ' வருக வருக ' வென திறந்திருக்கும்.
வாழ்க்கை இப்படியே போனாலும், ராமசாமியை உச்சாணிக் கொம்புக்கு அழைத்துப் போனது ஒரு சம்பவம். ஆண்டிமடம் அருகேயுள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பாதிரியாரைத் திடீரென முந்திரிக் காட்டுக்குள் கடத்திச் சென்றனர். பஞ்சமி நில மீட்பு போராட்டத்தின் ஒருகட்டமாக அந்தப் பாதிரியாரைக் கடத்தினர். நாலு நாட்கள் தஞ்சை, கடலூர், பெரம்பலூர் மாவட்ட போலீஸ் பட்டாளங்கள் முந்திரிக் காட்டுக்குள் சல்லடை போட்டுத் தேடியும் பாதிரியாரை மீட்க முடியவில்லை.
பிறகு, பாதிரியாரிடம் தங்களுக்குச் சாதகமாக எழுதி வாங்கிக்கொண்டு விடுவித்தனர். இந்தச் சம்பவம் பெரிய அளவில் தமிழ்நாடு விடுதலைப் படையினருக்கு பப்ளிசிட்டீயை உருவாக்கித் தந்தது. இப்படியிருக்க... ராமசாமி ஒரு நாள் போலீஸில் மாட்டிக் கொண்டார். அது, திருச்சி தேசியப் பள்ளி வளாகத்தில் இருந்த நேரு சிலையை இந்த இயக்கத்தினர் குண்டு வைத்துத் தகர்த்திருந்த நேரம்..... வலிமையான அந்த வெண்கலச் சிலையே கலகலத்துப் போகுமளவு சக்திவாய்ந்த வெடிகுண்டு!
குண்டு வெடித்த அடுத்த சில நாட்களுக்கு போலீஸ் கெடுபிடி அதிகம். விஷயம் தெரியாமல் அரியலூருக்கு பைக்கில் ஒரு நண்பரைப் பார்க்கப்போன ராமசாமி அப்போதுதான் போலீஸிடம் மாட்டிக்கொண்டார். திருச்சியில் சிறைவாசம்.
' தோழரே ' என்று வாஞ்சையாக அழைக்கும் இயக்கத்தினர் அருகில் இல்லை... ' எங்க பிரச்னையை நீங்கதான் தீர்த்து வைக்கணும் ' என்று வந்து கெஞ்சும் மக்கள் கூட்டம் இல்லை.... தனிமைச் சிறைவாகம் ராமராமிற சிறைவாசம் ராமசாமியை ரொம்பவே மாற்றியது.
வாரம் ஒரு முறை கீழ்குவாகத்திலிருந்து அப்பாவும் அம்மாவும் பார்க்க வருவார்கள். கம்பி வலைக்கு அந்தப் பக்கமாக நின்று கண்ணீர் சிந்துவார்கள். வறண்ட தேகமும் வற்றிய வயிறுமாக அந்தத் தள்ளாத வயதில் அவர்கள் சிறை தேடி வருவது, ராமசாமிக்கு வலித்தது.
குடும்ப வறுமைச் சூழலும் உறைத்தது. குடும்பப் பாசத்திலும் குழந்தைகளைப் பிரிந்த ஏக்கத்திலும் இரவுநேரங்களில் விம்மி விம்மி அழும் பக்கத்து அறைக் கைதிகள், ராமசாமியை யும் அழவைத்தார்கள். ராமசாமியின் மன வலி, அதிகாரிகளுக்குப் புரிந்தது.
இந்த மாதிரி தீவிரவாதிகளை ' டீல் ' செய்வதே முழுநேர வேலையாக இருக்கும் ' க்யூ ' பிராஞ்ச் உயர் அதிகாரி ஒருவரை அணுகித் தகவல் சொன்னார்கள். அடுத்த நாளே சிறைக்கு வந்தார் அவர். ராமசாமியைக் கூப்பிட்டுப் பரிவோடு தட்டிக் கொடுத்தார். ராமசாமிக்குக் கண்களில் நீர் முட்டியது.
" என்ன ராமசாமி... எதுக்கு அழறே... ' '
" அப்பாவும் அம்மாவும் இந்த வயசுல கஷ்டப்படறதைப் பார்க்க வேதனையா இருக்கு... "
“ சரி... என்ன செய்யலாம், சொல்லு... "
“ என்னை விட்டுடச் சொல்லுங்கய்யா... எனக்கு எதுவும் வேணாம். இயக்கம் வேணாம், வெடிகுண்டு வேணாம்... என் அப்பா, அம்மா குடும்பத்தைப் பார்த்தா போதும். அவங்களுக்குப் பொங்கிப் போட ஒரு பொண்ணைப் பார்த்துக் கல்யாணம் பண்ணிக்கிறேன். காட்டுவேலை செய்தாவது குடும்பத்தைக் காப்பாத்தறேன்... "
ராமசாமி கதறி அழுதுவிட்டார். சாமர்த்தியமாக அந்த போலீஸ் அதிகாரி, ராமசாமியிடம் ஜாமீன் அப்படியே எழுதி வாங்கிவிட்டார்! ' இதே மனநிலையோடு வெளியில் போனால், ராமசாமியை அப்புறம் எல்லா பழைய வழக்குகளிலும் அரசுத் தரப்பு சாட்சியாக்கிவிடலாம் ' என்பது அந்த அதிகாரியின் எதிர்பார்ப்பு.
ராமசாமி இதேபோல் ஒரு விலகல் கடிதத்தைத் தன் உறவினர் ஒருவர் மூலமாகத் தமிழ்நாடு விடுதலைப் படைக்கும் கொடுத்தனுப்பிவிட்டார். சிறைவாசத்துக்குப் பிறகு, 91 - ம் ஆண்டு துவக்கத்தில் ராமசாமிக்கு ஜாமீன் கிடைத்தது.
அவர் திருந்தி விட்டதாகக் கருதி போலீஸும் அவரது ஜாமீனை எதிர்க்கவில்லை. வீட்டுக்குத் திரும்பியதும் அவசரமாகக் கல்யாண ஏற்பாடு. வல்லம் கிராமத்திலிருந்த மாமன் மகள் ராணியையே நிச்சயித்தார்கள். ராணிக்கு வறுமைச் சூழல். அப்பா, வாய்பேச முடியாதவர். கூடப்பிறந்தவர்கள் என்று அண்ணன், தம்பிகள் யாரும் இல்லை. அம்மா எந்நேரமும் நோய்ப் படுக்கையில். மாமன்மேல் இருக்கும் வழக்குகள் தெரிந்தேதான் இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதித்தார்.
91 - ம் வருஷம், மே மாதம் பத்தொன்பதாம் தேதி திருமணம் நிச்சயமானது. நண்பர்களுக்கும் தோழர்களுக்கும் பத்திரிகை கொடுத்து ராமசாமி சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தபோது, இயக்கத் தலைவர்களிடமிருந்து அழைப்பு வந்தது. ' ஏதோ முக்கியமான பிரச்னை பற்றிப் பேசவேண்டுமாம்.... தோழர்கள் சிலம்பூர் முந்திரிக் காட்டுக்குள் வரச்சொன்னார்கள் ' மட்டும் தகவல் சொல்லிவிட்டுப் போனார் வந்தவர்.
' போகலாமா, வேண்டாமா... ' என்ற குழப்பம் ஒரு பக்கம்..... பழைய தோழர்கள் ஏன் அழைக்கிறார்கள் என்று தெரிந்து கொள்ளும் ஆர்வம் மறுபக்கம்... ராமசாமி தடுமாறினார். அதே சமயம், ' போனால் எல்லோரும் இருப்பார்கள். அப்படியே ஒரே மூச்சில் எல்லோரிடமும் கல்யாணப் பத்திரிகை கொடுத்துவிடலாமே... ' என்ற எண்ணமும் எழ... ராமசாமியின் பைக் சிலம்பூர் நோக்கிப் புறப்பட்டது.
விதி அவரை சொடக்குப் போட்டு தன்னருகில் அழைத்தது....
மேலும் சலசலக்கும்...