செய்திகள் :

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `பஞ்சாயத்து... கொள்ளை... கொலை’ |அத்தியாயம் 6 & 7

post image
தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவிய கேரக்டர்தான், 'விடுதலை பாகம் 1' மற்றும் 'பாகம் 2' திரைப்படங்களில் விஜய் சேதிபதி ஏற்றிருக்கும் பெருமாள் வாத்தியார் கேரக்டர். 1980'களில் வட தமிழ்நாட்டில் தமிழரசன் நிறைய இளைஞர்களை வசீகரித்து இந்த அமைப்புக்கு அழைத்து வந்தார். பிற்காலத்தில் இவர்களில் சிலர் சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் இணைந்தார்கள். இதைத் தொடர்ந்தே, கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சம்பவம் நிகழ்ந்தது. அந்த 2000-மாவது ஆண்டில் ஜூனியர் விகடனில் வெளியான தொடர் இது...

வாரியங்காவலில் ஒரு பிரபல திருமண மண்டபம். வாசலின் ' க்ரில் ' கதவு ஒரு ஆள் மட்டுமே நுழைகிற சைஸில் திறந்திருக்க அதன் அருகே நின்றிருந்த இளைஞன் தன் கையால் அந்த வழியை மறித்திருந்தான். வாசலில் இருபது பேர் கொண்ட கும்பல் ஒன்று ரொம்ப அடக்கமாக நின்றிருந்தது.

" உங்க பிரச்னை எதுவானாலும் சரி.... அதை அண்ணனதான் தீர்த்து வைக்கணுமனு ஏற்கெனவே நீங்க சொல்லியிருந்தீங்க. அதுக்காகத்தான் அண்ணன் இப்போ பஞ்சாயத்துக்கு ஏற்பாடு பண்ணியிருக்காரு. உங்க எதிர்த்தரப்பையும் அண்ணன் கூப்பிட்டிருக்காரு. ரெண்டு பேரையும் வெச்சுப் பேசுவாரு. உங்க நியாயத்தை நீங்க சொல்லுங்க. அவங்க பதில் சொல்லட்டும். ஆனா, அண்ணன் எல்லாத்தையும் கேட்டுட்டு என்ன சொல்றாரோ அதான் தீர்ப்பு. அதை ஏத்துக்காம இப்போவோ, அப்புறமாவோ ஸ்டேஷன், கோர்ட்டுனு ஏறி இறங்கக்கூடாது. இப்போ நீங்க உள்ளே போகலாம். அது சரியில்லை.... இது சரியில்லை'னு உள்ளே போனப் புறம் குறை சொன்னா பத்திரமா வெளியே வரமுடியாது... " வழியை மறித்திருந்த கையை எடுத்துக்கொண்டு அவர்களை உள்ளே அனுப்புகிறான்.


பின்னாடியே வந்த இன்னொரு கும்பலிடம், "உங்க மேலே ஒரு பிராது வந்திருக்கு... ' ' என்று ஆரம்பித்து எல்லா நிபந்தனைகளும் அவர்களிடம் சொல்லப்பட்டு உள்ளே போக, பஞ்சாயத்து ஆரம்பிக்கிறது.

நடுநாயகமாக ராமசாமி உட்கார்ந்திருக்க, அவர் பின்னால் பத்து இளைஞர்கள். எதிரே இருபுறமும் இருதரட்டா ஆட்கள்.

ராமசாமி விரல் சுட்டும் எதிர்த்திசையில் விசாரணை. திரும்பவும் இந்தப் பக்கம் சில விளக்கங்கள். ஒரு மணி நேரம் போகிறது.

ராமசாமி தொண்டையைச் செருமிக் கொண்டு இறுதியாக தீர்ப்பு சொல்லிட்டு எழுந்தார். மனசுக்குள் லேசாக அதிருப்தி எழுந்தாலும், அதை வெளிக்காட்டிக் கொள்ளாமல், பெரிய கும்பிடு போட்டுவிட்டு மற்றவர்கள் கிளம்பினர். ராமசாமி தன் பின்னால் ஒரு சேரில் நின்றஇளைஞனுக்கு கண்ணால் சைகை காட்ட, அவன் நொடியில் புரிந்து கொண்டு வேக நடை நடந்து, ஒரு தரப்பு ஆளின் தோளைத் தொட்டுக் கூப்பிட்டான்.

திரும்பிப் பார்த்ததும் ராமசாமி ' சொடக்கு ' போட்டு, அவரைத் தன்னருகே கூப்பிட்டார்.

அவர் அருகில் வந்ததும் ராமசாமி ஒரு ஏளனச் சிரிப்போடு கேட்டார். " இன்னிக்கு ஒரு லட்சம் உனக்கு லாபம் கிடைச்சுதுல்ல.. அதுல ஐம்பதாயிரம் எங்க இயக்கத்துக்கு கொடுத்திடு.. போ " சொன்னபடி தோளி லிருந்த சிவப்புத் துண்டைச் சரிசெய்து கொண்டு தன் 'பைக்'கை நோக்கிப் போனார் ராமசாமி.

இதே ஸ்டைல் பஞ்சாயத்துக்கள்... ஏகப்பட்ட ஆயிரங்கள் கையில் புரண்டன... புதுசு புதுசாக இளைஞர்கள் வந்து ராமசாமியோடு சேர்ந்தார்கள். அவர்களுக்கு புதுசாய் பைக்... எந்த நேரமும் சிகரெட், தண்ணி, முனியாண்டி விலாஸ் பிரியாணி என்று செலவு ரகங்களும் அதிகரித்தன. ராமசாமி எங்கே போனாலும் கூடவே, ஐந்தாறு பைக்குகளில் இளைஞர் கூட்டம் போனது.

இதே மாதிரியே இளவரசனும் வளர்ந்தார். அவரோடும் ஒரு இளைஞர் பட்டாளம். அரியலூர், பெரம்பலூர் மாவட்டங்கள் மட்டு மல்லாது கடலூர் மாவட்டத்துக்கும் இவர்கள் பஞ்சாயத்து எல்லை விரிந்தது. அதுவரை கட்டப்பஞ்சாயத்தில் கொடி நாட்டியிருந்த அரசியல் கட்சிகள் ஒடுங்கி ஒதுங்கவேண்டிய கட்டாயம் வந்தது. போலீஸுக்கு எல்லாம் தெரிந்தது என்றாலும்கூட, அமைதியாக வேடிக்கை பார்த்தது. இப்படியாவது இவர்கள் மனம் திருந்தி, தீவிரவாதம், வெடிகுண்டு எல்லாவற்றையும் கைவிட்டு விடமாட்டார்களா என்ற எதிர்பார்ப்பு அவர்களுக்கு!

இன்னொருபுறம் இந்த பஞ்சாயத்து விவகாரங்களால் இளவரசனுக்கும் ராமசாமிக்குமே மோதல் வராதா என்றும் நினைத்தது போலீஸ்.

ஆனால், அப்படி உரசும் சந்தர்ப்பங்கள் வந்தும் கூட இருவருமே அனுசரித்துப் போனார்கள். ஆனால், மோதல் வேறு விதமாக வந்தது.

கட்சிகள், இயக்கங்களில் கூட்டம் நடத்துவதற்கு என்று சில வழிமுறைகள் உண்டு! ஒரு கட்சி அல்லது இயக்கத்தின் செயல் வீரர் கூட்டமோ, செயற்குழு கூட்டமோ நடந்தால் அச்சடித்த நோட்டீஸ் மூலமோ கலந்து கொள்ள வேண்டிய எல்லோருக்கும் அழைப்பு அனுப்புவார்கள்.

தலைமறைவு இயக்கங்களில் இத்தகைய நடமுறை கிடையாது. பல தலைமறைவு இயக்கங்கள் உயர்மட்ட கமிட்டி, அரசியல் தீர்மான கமிட்டி என்று ஏதாவது ஒரு அமைப்பை வைத்திருக்கும். இயக்கத்தின் எந்தவொரு நடவடிக்கையையும் இந்த கமிட்டிதான் முடிவு செய்யும். வெறும் ஏழெட்டு பேர்தான் இந்தவகை கமிட்டியின் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

தமிழ்நாடு விடுலைப்படையினர் கூரியர் சர்வீஸ் போல ஒரு ஆளை வைத்திருப்பார்கள். கமிட்டிக் கூட்டம் நடக்கிறது என்றால் இவர் நேராகவே போய் எல்லா கமிட்டி உறுப்பினர்களுக்கும் தகவல் சொல்லிவிட்டு வருவார். ஆளை நேராகப் பார்க்க முடியா விட்டாலும் வேறொரு வழி இருக்கிறது. தலைமறைவாக இருக்கும் தீவிரவாதிகள் எல்லோருக்குமே அவர்கள் பதுங்கி வாழும் பகுதியில் ஏதாவது ஆதரவாளர்கள் வீடு இருக்கும். வாரம் ஒரு முறை நள்ளிரவில் இந்த வீடுகளுக்குப் போய், அந்த வாரம் முழுக்க தங்களுக்கு வந்திருக்கும் தகவல்களை சேகரித்துக் கொண்டு திரும்பிவிடுவார்கள்.


அவ்வளவாக போலீஸ் கெடுபிடி இல்லாத நேரங்களில், தலைமறைவு வாழ்க்கையும் குடும்ப வாழ்க்கையும் மாறி மாறித் தொடரும். ராமசாமி இப்படி இருந்த ஒரு காலத்தில்தான் கூரியர் மூலம் அந்த தகவல் வந்தது. " இந்த ஞாயிற்றுக் கிழமை வழக்கமான இடத்தில் கமிட்டிக் கூட்டம் நடக்குது. வந்திடுங்க. "


' எந்த பிரச்னையும் இல்லாத ஒரு சூழலில் எதற்கு கூட்டம்? ' - யோசித்த ராமசாமி அதை வெளிப்படையாக கேட்டும் விட்டார்.


" ஏதோ பண நடவடிக்கை தொடர் பாகப் பேசப் போறாங்களாம். சீனியர் தோழர் ஒருத்தரும் கூட்டத்துக்கு வர்றார்! ” ' பண நடவடிக்கை ' என்ற வெளிப்படையான வார்த்தைகளுக்கு ' கொள்ளையடித்தல் ' என்ற மறைமுக அர்த்தம் உண்டு. கிராமங்களில் வாழும் பெரும் பணக்காரர்களின் வீடுகளில் புகுந்து கொள்ளையடிப் பதைத்தான் தமிழ்நாடு விடுதலைப் படையினரும் ஆரம்பத்தில் செய்து வந்தார்கள். ஆனால், அதில் ரிஸ்க் இருந்தது. ஊருக்கு நடுவே, வீடுகளின் மத்தியில் இருக்கும் ஒரு பங்களாவுக்குள் புகுந்து கொள்ளை அடிப்பது அவ்வளவு சாதாரண விஷயமில்லை.


அதனால் ஊருக்கு ஒதுக்குப்புறமாகத் தனிக் கட்டடத்தில், மக்கள் நடமாட்டமில்லாத இடத்தில் இருக்கும் வங்கிகளைத் தேர்ந்தெடுத்து கொள்ளைய டிக்க முடிவு செய்தார்கள்.

இதற்கு இன்னொரு ' லாஜிக்'கையும் சொன னார்கள். ' வங்கியில் இருக்கும் பணம் மக்கள் பணம். ஆனாலும் அது இன்ஷ்யூர் செய்யப்படுகிறது. அதனால் பணம் கொள்ளை போனாலும் டெபாசிட செய்தவர்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. அரசுக் குத்தான் பாதிப்பு. அரசுப் பணத்தை கொள்ளை அடிப்பதில் என்ன தப்பு? ' இப்படி ஒரு லாஜிக்.


பலவிதமான சிந்தனையோட்டங்களுடன் குழப்பமாகத்தான் ராமசாமி கூட்டத்துக்கு போனார். இயக்கத்துக்கு பணத்தேவை இல்லாத ஒரு சட்டத்தில் பண நடவடிக்கை எதற்கு? ' என்ற கேள்வியை மட்டும் எழுப்ப வேண்டும் என்ற முடிவு மட்டும் அவர் மனதில் இருந்தது.


வல்லம் கிராமத்தில் ஒதுக்குப்புறமான ஒரு வீட்டில் கூட்டம் நடந்தது. சீனியர் தோழர்தான் எடுத்த எடுப்பிலேயே பேசினார். " ஒரு புதுத் தேவைக்காக நாம இப்போ திட்டமிடப் போறோம். வீச் வாளும், வெடிகுண்டுகளும் மட்டும்தான் ஆயுதம்னு இருந்த நமக்கு துப்பாக்கிகளைக் கொடுத்தது தமிழரசன். ஆனா அவரோடவே அவர் கொண்டுவந்த இரண்டு துப்பாக்கிகளும் நம்மை விட்டுப் போயிடுச்சி. இப்போ திரும்பவும் நமக்கு வாய்ப்புக் கிடைச்சிருக்கு.... இலங்கைத் தோழர் ஒருத்தர் ஏ.கே. 47 துப்பாக்கிகள் வெச்சிருக்கார். நமக்கு அதை விற்கவும் சம்மதிச்சிருக்கார். அதை வாங்க நமக்குப் பணம் தேவைப்படுது.

பணத்துக்கு நாம எங்கே போறது? கொள்ளையடிக் கத்தான் வேணும். ஒரு திட்டமும் தயாராக இருக்கு. கமிட்டி அதுக்கு ஒப்புதல் தரணும்.

பக்கத்துல வயலூர் கிராமத்துல தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கி இருக்கு. ஊருக்கு ஒதுக்குப்புறமா வாகான இடத்துல இருக்கு. ராத்திரியில போறோம். அடிச்சித்தூக்கிட்டு வந்துட றோம்... எப்படியும் பத்து, பதினைந்து லட்சத்துக்கு நகைங்களே இருக்கும் அங்கே! பணம் பெரும்பாலும் அங்கே வெச்சுக்கறதில்லை. இருந்தா நம்மோட அதிர்ஷ்டம்! "

பேசியபடியே தரையில் ஒரு பேப்பரை வைத்து, அதில் வயலூரின் வரைப்படத்தைப் போட்டு, தன் திட்டத்தை விவரித்தார். விளக்கி முடித்ததும் அந்த பேப்பரை மடித்தார். ஒரு சிகரெட் பற்ற வைத்துக் கொண்டார். அந்த தீக்குச்சியில் மிச்சமிருந்த நெருப்பில் அந்த வரைபட பேப்பரை அப்படியே பொசுக்கிவிட்டார்.


எல்லா கமிட்டி உறுப்பினர்களும் அமைதியாக இருக்க, ராமசாமி மட்டும்தான் வாய் திறந்தார். " இப்போ போலீஸ் கெடுபிடி எதுவுமில்லாம, நாம பிரச்னையில்லாம இருக்கோம் தோழர். இப்போ நம்ம ஏரியாவுலேயே இப்படி பண்ணினா நமக்கும் சரி, நம்ம ஆதரவாளர்களுக்கும் சரி... ஏகப்பட்ட தொந்தரவுகள் வருமே...? அதோட இப்போ நமக்கு எதற்கு துப்பாக்கி? "


சீனியர் தோழர் சில நொடிகள் கண்களை மூடி யோசித்துவிட்டு சொன்னார் : " இப்படியே அமைதியா போய்க்கிட்டு இருந்தா அடுத்த கட்டத்தை நோக்கி நாம எப்ப நகர்றது? அப்படி போகும் போது இந்த பிரச்னைகளை தாங்கிக்கிற சக்தி வேணும். அதோட துப்பாக்கிகளும் அவசியம் வேணும். எதிரி ( போலீஸ் ) கையில நவீன ஆயுதங்கள் வந்துட்ட பிறகு, நாம அரிவாளோட அலையறது பைத்தியக்காரத்தனம். "


திட்டமிட்ட நாளில், முடிவு செய்த நேரத்தில் பதினைந்து பேர் பைக்குகளில் வயலூர் வந்தார்கள். வங்கியின் இரும்பு ஷட்டர் கதவு அருகே போனார்கள். கையோடு கேஸ் வெல்டிங் மெஷினும், அதற்கான சிலிண்டரும் கொண்டு வந்திருந்தார்கள். சிலிண்டரைத் திறந்து விட்டு, வெல்டரைப் பற்ற வைத்ததும், அது நெருப்புக் கற்றையை பாய்ச்சியது.

ஷட்டர் கதவின் கீழ்ப்பக்க பூட்டுகள் இந்த நெருப்புக்கு கொடுக்க முடியாமல் அறுபட்டு விழுந்தன. ஷட்டரைத் தூக்கிவிட்டு உள்ளே புகுந்தார்கள்.

உள்ளேயிருந்த லாக்கர் பூட்டுக்கும் இதே நிலை. 

சின்னச் சின்னத் துணி சுருக்குப்பைகளில் சீல் செய்து வைத்திருந்த தங்க நகைகளை அள்ளினார்கள். இரண்டு லெதர் பைகளில், எல்லாம் கச்சிதமாக ' பேக் ' செய்யப்பட்டன.


அரை மணி நேரத்தில் எல்லாம் முடிந்துவிட, ஷட்டர் கதவை பழையபடி இழுத்து சும்மா மூடிவிட்டு வெளியே வந்தார்கள். தற்செயலாக யாராவது வந்துவிட்டால் பயமுறுத்துவதற்காக என்று வெடிகுண்டுகளை வைத்துக்கொண்டு வாசலில் நின்றிருந்த நான்கு பேர் குண்டுகளை பைக்குள் போட்டு ' ஜிப்பை மூடிவிட்டு, தங்கள் ' பைக்'குகளை நோக்கிப் போனார்கள்.


ஆபரேஷன் சக்ஸஸ் ' என்று எல்லா பைக்குகளும் திரும்பின... யாரும் பார்க்கவில்லை... யாருக்கும் தெரியாது என்ற மிதப்பில் இவர்கள் போய்க்கொண்டிருக்க.. ஒரு கருவேல மரத்துக்கு பின்னால் ஒளிந்து கொண்டு இவர்களை நீண்ட நேரமாக நோட்டமிட்ட அந்த உருவம், இருட்டிலிருந்து முன்னேறி வந்தது.

குறிச்சிகுளம் நடராஜனுக்கு அன்று ஜாக்பாட் அடித்த மாதிரி மிதப்பு வந்துவிட்டது. கூலிவேலையும் ஆடு, மாடு வாங்கி விற்கும் தரகுத் தொழிலும் பார்த்துப் பிழைப்பு நடத்திவந்த நடராஜன், அந்த இரவில் வயலூர் கிராமத்திலிருந்த தனது உறவினர் ஒருத்தரின் வீட்டுக்கு வந்திருந்தார். இரவு சாப்பாட்டுக்குப் பிறகு, வயிற்றுக்குள் ஏதோ ' கடமுடா ' சத்தம் கேட்க... இயற்கை உபாதைக்காக அவர் ஒதுங்கியது - வயலூர் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு வங்கிக்குப் பின்பக்கமாக ருந்த கருவேலம் புதரில்!

நிம்மதியாகக் காரியத்தை முடித்துவிட்டுப் புதரிலிருந்து வெளியே வரும்போதுதான், ஏதோ இரும்பு உடைபடும் சத்தம் கேட்டது. கூடவே, சன்னமான ஓசையில் பேச்சுக் குரல்கள்... ஏதாவது ' காத்து கறுப்பு ' தனியாக மாட்டிய தன்னிடம் ஆட்டம் காட்டுகிறதோ என்ற பயத்தில் உறைந்து நின்றார் நடராஜன்.

ஆனால், வெல்டிங் மெஷின் பூட்டைக் கத்தரிக்கும் போது ஏற்பட்ட வெளிச்சம், வங்கியின் வாசலில் ஆறு பைக்குகள் இருப்பதைக் காட்டிக் கொடுத்துவிட்டது. நடராஜன் கொஞ்சம் முன்னேறி வந்து, வங்கியின் வாசல் தன் பார்வையில் படும் தூரத்தில், மீண்டும் ஒரு மரத்தின் பின்னால் மறைந்துகொண்டார்.

இப்போது முழுக் காட்சியும் அவர் கண்ணுக்குப் புலப்பட்டது. கண்ணெதிரே ஒரு கொள்ளை... இதோ, பைகளில் எதையோ தூக்கிக்கொண்டு வருகிறார்கள். ஆட்களை எங்கோ பார்த்த மாதிரி இருக்கிறதே...?

அட... முன்னால் வருவது செட்டிக் குழிப்பள்ளம் ஆறுமுகம்.... கொஞ்சம் இடைவெளி விட்டு ராமசாமி, செல்வம், இளவரசன்... நடராஜனுக்கு எல்லாம் புரிந்து போனது. தீவிரவாத பக்கத்து ஆட்களோட வேலைதானா இது!

தன் தொழில் நிமித்தமாக ஊர் ஊராகப் போகிற ஆள் என்பதால், நடராஜனுக்கு எல்லோரையும் அடையாளம் தெரியும். அதிலும் ராமசாமியின் நெருக்கமான நண்பரான செட்டிக்குழிப்பள்ளம் ஆறுமுகத் தைக் கொஞ்சம் பர்சனலாகவே தெரியும். இவர்கள் ஏதோ குண்டு வைப்பார்கள்... கட்டப்பஞ்சாயத்து பண்ணுவார்கள் என்ற அளவு மட்டுமே கேள்விப்பட்டிருந்த நடராஜனுக்குக் கண்ணெதிரே அவர்கள் கொள்ளையடிப்பதைப் பார்த்ததும் உடல் நடுங்கிவிட்டது.

ஆனாலும் அவரது மூளை நிமிடங்களில் கணக்குப் போட்டது. ' நாளைக் காலையிலேயே போலீஸ் பரபரப்பாகி வந்துவிடும். கொள்ளையடித்தது யார் என்று தடயங்களைத் தேடிக் குழம்பும். பார்த்த ஒரே சாட்சி நான்தான். நாளையே போலீஸில் சொல்லிவிட்டால் பாராட்டுக் கிடைக்கும். ஆனால் அந்தப் பயங்கரக் கும்பலிடமிருந்து அப்புறம் நமக்கென்ன பாதுகாப்பு...?

போலீஸையே கொல்லத் துணிகிற இவர்களுக்கு, நான் எம்மாத்திரம்...?

அதைவிட, அவர்களோடு பேரம் பேசிச் சமாதானமாகப் போய்விடலாம். ஏதோ கொஞ்சம் பணம் கிடைக்கும். அலைச்சல், ஒழிச்சலின்றி நிம்மதியாக வாழ்க்கையை ஓட்டலாம் ' என்ற நினைப்புதான் திரும்பத் திரும்பக் குறுக்கே வந்து மறித்தது. அதே நினைப்போடு மறுநாள் ஆறுமுகத்தைத் தேடிப்போனார் நடராஜன்.

.' ஒரு முக்கியமான ரகசியம் பேசணும் ' என்று சொல்லி, யாரும் அருகில் இல்லாத ஒதுக்குப்புறமான இடத்துக்குக் கூட்டி வந்தார்.

நேற்றைய சம்பவங்களை விவரித்ததோடு, வெளியே சொல்லாமல் இருக்க வேண்டுமென்றால் குறிப்பிட்ட பங்குத் தொகை தனக்கு வேண்டுமென்றும் கோரிக்கை வைத்தார். திக்பிரமை பிடித்து நின்றிருந்த ஆறுமுகத்திடம், ' போயிட்டு வரேன் ' என்றுகூடச் சொல்லாமல் நடையைக்கட்டினார் நடராஜன்.

" எவ்வளவோ கஷ்டப்பட்டுத் திட்டம் போட்டு இந்த நடவடிக்கையைச் செய்தோம். எவனோ ஒரு புறம்போக்கு நம்மகிட்டேயே பங்கு கேட்டு மிரட்டறானே... ' ' ' - ஆவேசப்பட்டார் இளவரசன்.

பதட்டத்தில் என்ன செய்வது என்று தெரியாமல் ஆறுமுகம் எல்லோரிடமும் விஷயத்தைச் சொல்லிவிட,

' அடுத்த கட்டம் ' பற்றி ஒரு மினி ஆலோசனைக் கூட்டம் நடந்தது. கொள்ளையில் பங்குபெற்றவர்கள் மட்டும் இந்தக் கூட்டத்துக்கு வந்திருந்தார்கள். நடராஜன் பிளாக்மெயில் செய்ததில் ரொம்பவே கோபமாகிவிட்டது இளவரசன்தான்.

“ வேற வழியில்லை தோழர்.... அவன் கதையை முடிச்சிட வேண்டியதுதான்... ' இப்படிச் சொல்லி இளவரசனின் கோபத்தை மேலும் கிளறிவிட்டார் இன்னொருத்தர்.

இன்னொரு கொலையா..? " பதறிவிட்டார் ராமசாமி. “ விஷயம் புரியாம அவன் ஏதேதோ பேசிட்டான். அவன்கிட்டே யாரையாவது அனுப்பி, ' எங்கேயாவது சும்மா உளறிக்கிட்டிருந்தே அருவாதான் பேசும்'னு மிரட்டிட்டு வரச் சொல்லலாம். அதோட அவன் அடங்கிடுவான்... ' ' சொன்னார் அவர்.

ஆனால், ஆறுமுகம் இதற்கு ஒப்புக் கொள்ள வில்லை. ' அப்படியெல்லாம் அவனை அலட்சியமா விடமுடியாது தோழர். அசட்டுத் துணிச்சல்காரன். சொன்ன மாதிரியே போலீஸ்கிட்டேயும் போயிடு வான். அப்புறம் வீண் சிக்கல் தான்.

கஷ்டப்பட்டுக் கொள்ளையடிச்சதை நம்மளைப் பிடிச்சு போலீஸ் பறிமுதல் செய்துடும். நம்மோட நடவடிக்கைகள், நடமாட்டம், எங்கெங்கே தங்குவோம்னு எல்லாத்தைப் பற்றியும் நடராஜனுக்குத் தெரிஞ்சிருக்கு. பங்கு தராத கடுப்பில், நம்ம எல்லோரையும் தேடறதுக்குக்கூட போலீஸுக்கு உதவி பண்ணுவான். எதிரிகளைக்கூட நாம நடமாட விட்டுட்டு அலட்சியமா இருந்திடலாம். ஆனா, காட்டிக் கொடுக்கிற துரோகிகளைச் சும்மா விடக்கூடாது. அவனைத் தீர்த்துக் கட்டிடறதுதான் நமக்கு நல்லது... ' '

ஆறுமுகமும் மற்றவர்களும் என்ன சொல்லியும் ராமசாமி அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. " திரும்பத் திரும்ப இதே ஏரியாவுல கொலையும் கொள்ளையுமா பண்ணிக்கிட்டிருந்தா, நாம எங்கேதான் பதுங்கி வாழறது..?

நமக்கு யார்தான் சப்போர்ட்...? " என்று கேட்ட வாறே எழுந்து கிளம்ப ஆயத்தமானார்.

' அடையாளம் தெரிஞ்சாதானே வம்பு...? வெளியே தெரியாம காலி பண்ணிட்டா...? "

ஆறுமுகம் கேட்க, ராமசாமி யோசித்தவாறு நின்றார். “ அது எப்படி.... "

" அதுக்கெல்லாம் திட்டம் இருக்கு தோழர். நீங்க வந்து பாருங்க... " என்று சொல்லி விட்டுத் திட்டத்தை விளக்கினார் ஆறுமுகம்.

நான்கு நாட்கள் கழித்து நடராஜனைத் தேடிப்போனார் ஆறுமுகம். “ எல்லார்கிட்டேயும் பேசிட்டேன். ஒப்புக்கிட்டாங்க. நகைகளை உருக்கி எடுத்துப் போய் கும்பகோணத்துல வித்துட்டுப் பணமாக்கி வரணும். உன் பங்குக்கு மூணு லட்ச ரூபாய் வரும். இன்னும் வாரம் கழிச்சு நான் வந்து திரும்பவும் தகவல் சொல்றேன்... ' ' சொல்லிவிட்டுப் போனார்.

அந்த ஒரு வாரம் முழுக்கவே பகலிலும் இரவிலும் நடராஜன் கனவில் ஒரே கரன்ஸி மழைதான்! கட்டுக்கட்டாக அச்சுவாசனை மாறாத புத்தம்புது நோட்டுகளைக் கைகளில் அள்ளி, தூக்கிப் போட்டுப் பிடிப்பது மாதிரியும் அந்த நோட்டுகளையே ஒரு தலையணையாக்கி, அதை தலைமாட்டில் வைத்துத் தூங்குவது மாதிரியெல்லாம்கூடக் கனவுகள்.... அவரது செய்கைகள் எல்லாம் புதிராக இருந்தன. தனக்குத்தானே பேசிக்கொண்டார்.

தன்னைத் தேடிவந்த கடன்காரர்களிடம், " இன்னும் ஒரு வாரம் பொறுத்துக்கோ... வட்டியும் முதலுமா சேர்த்துத் தர்றேன்... ' ' என்று சொல்லி அசரவைத்தார். அரியலூர் மார்க்கெட்டுக்குப் போய் கலர் டி.வி. விலை விசாரித்தார். தன்னைத் தேடி ஆறுமுகம் வரும் அந்த நிமிடத்தையே எதிர்நோக்கியிருந்தார்.

சரியாக ஒரு வாரம் கழித்து, ஆறுமுகம் வந்தார். உடையார்பாளையம் மார்க்கெட்டில் இருக்கும் ஒரு மெடிக்கல் ஷாப்பின் பெயரைச் சொல்லி, ' ராத்திரி ஏழு மணிக்கு அங்கே வந்து உன்னைக் கூட்டிக்கிட்டுப் போறேன். மறந்துடாம கரெக்ட்டா வந்துடு! " என்று ஆறுமுகம் சொல்ல... " இதுகூட மறக்குமா...? " என்று கேட்டுச் சத்தமாகச் சிரித்தார் நடராஜன். பதிலுக்கு ஆறுமுகம் சிரிக்கவில்லை.

ராத்திரி ஏழு மணி... பைக்கில் வேகமாக வந்த ஆறுமுகம், மெடிக்கல் ஷாப் வாசலில் பிரேக் போட்டு, காத்திருந்த நடராஜனைப் பின்னால் உட்கார வைத்துக் கொண்டார். பெரம்பலூர் ரோட்டில் சீறிக்கொண்டு போனது பைக்.

எங்கெங்கோ சுற்றி, ராத்திரி பதினோரு மணிக்கு ரஞ்சன் கோட்டைக்கு வந்தார்கள்.

சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் தொழுதூரைத் தாண்டி மங்களமேடு போலீஸ் ஸ்டேஷனுக்கு எதிர்ப்புறம் ரஞ்சன்குடி கிராமம். இந்தக் கிராமத்து முகப் பில் இருக்கிறது ரஞ்சன் கோட்டை திருச்சியை நாயக்கர்கள் காலத்தில் ஒரு மலை மீது பாறைக்கற்களால் பெரும் சுவர்களாகக் உருவான கோட்டை. கொஞ்சம் சிதிலமடைந்து, புதர்முளைத் துப் பகலிலேயே பயமுறுத்தும் கோட்டை. இரவில் இன்னும் திகிலூட்டியது!

ஊருக்குள் போகும் நேர் ரோடு வழியாகப் போகாமல், வண்டிப் பாதையில் சுற்றிக்கொண்டு கோட்டை அடிவாரம் வந்தார்கள். வறண்ட வயற்காடெங்கும் விளைந்த கம்பை அறுத்த பிறகு எஞ்சி நிற்கும் அடிக்கட்டைதான் மிச்சமிருந்தது. காலில் குத்தியது. தட்டுத் தடுமாறிக் கொஞ்சம் முன்னேறினார்கள்.

தூரத்தில் ஒரு டார்ச் லைட் மூன்று முறை நின்று நின்று எரிந்தது. சிக்னல் கிடைத்து விட்டது!

ஒரு டயரில் கும்பலாக அங்கு எட்டுப்பேர் இருந்தார்கள். நடராஜன் அருகே போனதும் யோசிக்கக்கூட அவகாசம் தரவில்லை. " வா பங்காளி! பங்கு தர்றோம், வாங்கிக்கோ... " என்றவாறு ஒரு உருவம் அவர் பின்புறமாகப் பாய்ந்து கழுத்தை வெட்ட, இன்னொரு உருவம் நடராஜனைக் கத்தக்கூட விடாமல் வாயைப் பொத்திக் கொண்டது.

சரிந்து கீழே விழுந்த நடராஜனை நான்கு பேர் அழுத்திப் பிடித்து மேலே உட்கார்ந்தார்கள். கையைக் காலை உதறித் துடிக்காமல், வாயைத் திறந்து அலற முடியாமல், கழுத்து வெட்டுக் காயத்தின் வழியே தன் ஏராள ரத்தத்தை இழந்து அப்படியே செத்துப்போனார் நடராஜன்.

அவர்கள் எல்லாவற்றையும் தயாராக எடுத்து வந்திருந்தார்கள். நடராஜன் உடலை டயரில் நுழைத்தார்கள். ஒரு தீக்குச்சியை உரசித் தூக்கிப் போட்டதும் ' குப்'பென்று பற்றிக்கொண்டது டயர். நாற்றத்தைக்கூடப் பொறுத்துக் கொண்டு எல்லோரும் ஒரு ஓரமாகக் காத்து நின்றார்கள்.

ஒரு மணி நேரம்... சுத்தமாக எரிந்து அணைந்து கரும்புகை வந்தது. டார்ச் அடித்துச் சோதித்தார்கள். எரிந்தது யார் என்று அடையாளம் காட்டும் விதமாக எதுவும் இல்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டார்கள். பிறகு அங்கிருந்து அவசரமாகப் புறப்பட்டுப் போனார்கள் ( பின்னால் இதை எப்படியோ போலீஸ் துப்பறிந்து, அடையாளம் கண்டுபிடித்தது தனிக்கதை. ).

தமிழகம் தேர்தலைச் சந்தித்த 1996, ஏப்ரல் மே மாதங்கள்... பிஸியாகிவிட்டிருந்த நேரம்... தமிழ்நாடு விடுதலைப் படையினரும் தங்கள் அடுத்த தாக்குதலுக்காக பிஸியாக இருந்தார்கள். அந்தக் கொடூரத் தாக்குதல்...

- மேலும் சலசலக்கும்...

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `உங்களுக்கே தெரியாம இயக்கத்துல எவ்வளவோ நடக்குது!’ |அத்தியாயம் 5

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `புத்தூர் போலீஸ் ஸ்டேஷன் சம்பவம்’ |அத்தியாயம் 4

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `போலீஸா, இயக்கமா...’ - கீழ்குவாகம் ராமசாமி யார் பக்கம்?|அத்தியாயம் 3

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : கீழ்குவாகம் ராமசாமி... விதி சொடக்குப் போட்டு அழைத்தது | அத்தியாயம் 2

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க

முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `தமிழ்நாடு விடுதலைப்படை... விடை தேடும் பயணம்’ | பாகம் 1

தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவி... மேலும் பார்க்க