முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `புத்தூர் போலீஸ் ஸ்டேஷன் சம்பவம்’ |அத்தியாயம் 4
தமிழ்நாடு விடுதலைப்படை... அரியலூர், பெரம்பலூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் இயங்கிய அமைப்பு. இதன் தலைவராக இருந்தவர் தமிழரசன். இவருக்கு வழிகாட்டியாக இருந்தவர், புலவர் கலியபெருமாள். இவரது வாழ்வைத் தழுவிய கேரக்டர்தான், 'விடுதலை பாகம் 1' மற்றும் 'பாகம் 2' திரைப்படங்களில் விஜய் சேதிபதி ஏற்றிருக்கும் பெருமாள் வாத்தியார் கேரக்டர். 1980'களில் வட தமிழ்நாட்டில் தமிழரசன் நிறைய இளைஞர்களை வசீகரித்து இந்த அமைப்புக்கு அழைத்து வந்தார். பிற்காலத்தில் இவர்களில் சிலர் சந்தனக் கடத்தல் வீரப்பனுடன் இணைந்தார்கள். இதைத் தொடர்ந்தே, கன்னட நடிகர் ராஜ்குமாரை வீரப்பன் கடத்திய சம்பவம் நிகழ்ந்தது. அந்த 2000-மாவது ஆண்டில் ஜூனியர் விகடனில் வெளியான தொடர் இது...
கடலூர் மாவட்டம் புத்தூர் போலீஸ் ஸ்டேஷன். ஏப்ரல் 7, 1991. ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இரண்டரை மணி.
பூட்டியிருந்த ஸ்டேஷன் வெளிக்கதவை இரண்டு பேர் படபட'வெனத் தட்டினார்கள். " ஐயோ.... வலி தாங்க முடியலையே! " என்று ஒரு அலறல். " ஐயா, கதவைத் திறங்கய்யா... டிராக்டர் ஒண்ணு ஆக்ஸிடெண்ட் ஆகி நிறைய பேர். அடிபட்டுட்டாங்க.... " என்று இன்னொருவர் சத்தமான குரலில் சொன்னார்.
பாரா கான்ஸ்டபிள் சண்முகம் ' கிரில் கேட் ' வழியே வெளியில் பார்த்தார். ஒரு ஆசாமி உட்கார்ந்து காலைப் பிடித்தவாறு அழுது கொண்டிருக்க, இன்னொருவன் பரிதாபமான முகத்தோடு சண்முகத்தையே பார்த்தான் கொட்டாவி விட்டவாறு சாவியை எடுத்து வந்து கதவைத் திறந்த சண்முகம், " எங்கேய்யா ஆக்ஸிடெண்ட்..? " என்று கேட்டார். ஆனால், பதில் இல்லை.
தனித்தனியாக ஆளுக்கொரு சைக்கிள் எடுத்துக் கொண்டு வந்த பதினைந்து பேர் கும்பலில், இரண்டு பேர்தான் கதவைத் தட்டியது. மீதி பதின்மூன்று பேர் ஸ்டேஷன் சுவரோரமாகப் பதுங்கியிருந்தனர் சண்முகம் கதவைத் திறந்ததும் கும்பலாக உள்ளே பாய்ந்தவர்கள், அவரை அடித்துச் சாய்த்துவிட்டு முதல் வேலையாக எல்லா விளக்குகளையும் அணைத்துவிட்டனர்.
அடிதாங்காமல் சண்முகம் அலற, ரைட்டர் அறையில் படுத்திருந்த ராஜேந்திரன் என்கிற இன்னொரு கான்ஸ்டபிள் விழித்துக்கொண்டார். தூக்கத்திலிருந்து எழுந்த அவருக்கு, இருட்டில் ஒன்றும் புரியவில்லை. ஆனால், யாரோ சிலர் உள்ளே புகுந்து ஸ்டேஷனை துவம்சம் செய்கிறார்கள் என்பது மட்டும் தெரிந்தது. இளரத்தம் சூடானது.... எதிரிகள் கையில் ஆயுதம் இருக்கிறதா என்பதைக்கூடக் கவனிக்கவில்லை.
' டேய்! யார்டா அது? " என்று அதட்டிய வாறே போன ராஜேந்திரன், இருட்டில் எதிர்ப்பட்டவன் முகத்தில்குத்தினார். அவன் வலி தாங்காமல் அலற, ராஜேந்திரன் அடுத்தவனை நோக்கி முன்னேறினார். கும்பலில் ஒருவன் ராஜேந்திரன் மீது டார்ச் வெளிச்சத்தை அடிக்க, நான்கைந்து பேர் சூழ்ந்து கொண்டனர் அவரை ஒருவன் அரிவாளை அவர் வயிற்றில் பாய்ச்சிய போதுதான் ராஜேந்திரனுக்கு விபரீதம் புரிந்தது. எல்லோரையும் தள்ளி விட்டு வெளியே ஓடிப்போய் ஊரைக் கூட்ட முயன்றார்.
ஆனால், எல்லா அரிவாள்களும் அவர் வயிற்றிலேயே பாய, வாசலிலேயே சரிந்து விழுந்தார். ரத்தம் குடக்கென்று பாய்ந்துவர, அவர் குடலே வெளியில் வந்துவிட்டது. நான்கு பேர் சேர்ந்து அவரைத் தூக்கி ஸ்டேஷனுக்குப் பக்கத்திலிருந்த புதரில் போட்டார்கள். அந்த சமயத்திலேயே அவர் செத்துப்போனார்.
இந்த களேபரம் ஒருபுறமிருக்க, ஸ்டேஷனுக்குள் இருந்த மிச்சம் பத்துப் பேர் சண்முகத்தை அடித்ததில் அவர் மயங்கி விழுந்தார். அதன்பின் டார்ச் வெளிச்சத்திலேயே ஆயுதங்கள் எங்கிருக்கின்றன என்று துழாவியது கும்பல். சத்தமாக இவர்கள் தங்களுக்குள் பேசிக்கொள்ள, அந்த நேரத்தில் சப் - இன்ஸ்பெக்டர் அறையில் திடீரென ' லைட் எரிந்தது. அந்த அறையில் இருந்த எஸ்.ஐ. சுந்தரவதனமும், ஏட்டு சுந்தரமூர்த்தியும் அப்போதுதான் சத்தம் கேட்டு எழுந்தார்கள். அந்த அறைக்குள்தான் எல்லா துப்பாக்கிகளும் இருந்தன.
வெளியில் சத்தமாகப் பேசிக்கொண்டிருந்த கும்பல் அமைதியாகி, எஸ்.ஐ. எப்போது கதவைத் திறப்பார் என்று காத்திருந்தது. சுந்தரவதனம் கதவைத் திறந்தார். அந்த இருட்டிலும் அரிவாளோடு மங்கலாக உருவங்கள் தெரிய, என்ன நினைத்தாரோ ' சரேலென கதவை மூடமுயன்றார் சுந்தரவதனம். ஆனால், கும்பலிலிருந்து இரண்டு பேர் கதவின் சந்து வழியே நுழைய முயன்றார்கள் அவர் மூட இவர்கள் திறக்க... கதவு ஆடியது. தன் முழுப் பலத்தையும் காலில் கொண்டுவந்து அவர்களை உதைத்துத் தள்ளிவிட்டு கதவை மூடினார் சுந்தர வதனம். கதவிடுக்கில் அவர் கைமாட்டிக்கொண் டது. அந்தக் கையை அரிவாளால் வெட்டினால் துடிதுடித்து கதவிலிருந்து சரிந்து விடுவார் என்று கையை வெட்டினார்கள். ஆனால், வெட்டுபட்ட கையை உள்ளே இழுத்துக்கொண்டு கதவை மூடிக்கொண்டார் சுந்தரவதனம்.
கொஞ்சம் யோசித்து அந்தக் கதவின்மீது ஒரு வெடிகுண்டை வீசியெறிந்தது கும்பல். ஆனால், அது வெடிக்காமல் அப்படியே தரையில் விழுந்தது. சில நிமிடங்கள் காத்திருந்து விட்டு வெறுங்கையோடு வெளியே வந்து சைக்கிள்களில் ஏறி மறைந்துவிட் டது கும்பல்.
அதே ஞாயிற்றுக் கிழமை காலை பதினோரு மணி.... ராமசாமியின் வீட்டுக்கு வந்த போலீஸ் வாகனம் ஒன்று, அவரை அந்த ' க்யூ ' பிராஞ்ச் அதிகாரியிடம் கூட்டிப் போனது. ராமசாமியைத் தன் அறையில் தரையில் குத்துக்காலிட்டு உட்கார வைத்து விட்டு, அருகே போய் நின்று தன் மீசையை முறுக்கியவாறே அந்த அதிகாரி கேட்டார். ' ' என்ன கண்ணெல்லாம் சிவந்திருக்கு... ராத்திரி தூக்கமில்லையோ..? "
' அதெல்லாம் இல்லையே... நல்லாத் தானே தூங்கினேன்! "
' ' மறைச்சதெல்லாம் போதும்... சொல்லு! யார் யார் போனீங்க...? "
" எங்கே ஐயா? " ராமசாமிக்கு ஒன்றும் புரியவில்லை. டேய்! சும்மா நடிக்காதே. காலையில ரெண்டரை மணிக்கு புத்தூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு கும்பல் சைக்கிள்ல போய், ஒரு கான்ஸ்டபிளைக் கொன்னுட்டு துப்பாக்கிகளைக் கொள்ளையடிக்க முயற்சி பண்ணியிருக்கு. பார்த்தவங்க சொன்ன அடையாளங்கள் எல்லாம் உங்க கும்பலோடதான் ஒத்துப்போகுது. சொல்லு... யார் யார் போனீங்க? லெனின், சுந்தரம், இளவரசன், வெங்கடேசன், நீ.... இன்னும் யாரு? "
" ஐயையோ... சத்தியமா நான் போகலைங்க! "
" சரி! நீ போகலை... ஒத்துக்கறேன்! ஆனால், போனவங்க யார் யாருன்னு உனக்குத் தெரியாம இருக்காது... சொல்லு! ' '
" சத்தியமா எனக்குத் தெரியாதுங்க! ' '
" நான் நம்ப மாட்டேன்! " இரண்டு மணிநேர தொடர் விசாரணை... அடுக்கடுக்காகக் கேள்விகள்... அதன்பின் ராமசாமியை வீட்டுக்கு அனுப்பினார்கள்.
இரண்டு வாரங்கள் போலீஸ் வரவில்லை. அதன்பின் ஒரு இரவில் கதவு தட்டப்பட்டது. திறந்தால் வாசலில் தோழர்கள். “ உனக்குத் தொடர்பில்லைனு சொன்னாககூட போலீஸ் நம்பலை பாரு.... இப்போ புத்தூர் கேஸ்ல உன்னையும் சேர்க்கப் போறாங்க... பேசாம எங்ககூட வந்துடு. அப்போதான் பிரச்னை இருக்காது... '
எதையும் விசாரிக்காமல், மனைவியிடம் தகவல் மட்டும் சொல்லிவிட்டு, அவர்கள் பின்னால் போனார் ராமசாமி. திரும்பவும் முந்திரிக்காடுகளில் தலைமறைவு வாழ்க்கை! இரண்டு மாதங்கள் போயிருக்கும்... கீழ்குவாகத்திலிந்து ஒரு ஆள் மூலம் தகவல் வந்தது. " உன் மனைவி கர்ப்பமாயிருக்கா! "
ராமசாமிக்கு சந்தோஷம் தாங்க முடியவில்லை அந்த இரவிலேயே ரகசியமாக வீட்டுக்குப் போய் மனைவியைப் பார்த்தார். ராணிக்கு அழுகை முட்டிக்கொண்டது. “ கட்சி, இயக்கம், தீவிரவாதம் எல்லாத்தையும் விட்டுட்டு வந்துடு மாமா. அப்போதான் நானும் குழந்தையும் நல்லாயிருக்க முடியும். இல்லாட்டி, போலீஸ் கேட்கற கேள்விகளோட கொடுமை தாங்காமலே நாங்க செத்துடுவோம்... ' '
மனப்போராட்டத்திலேயே மாதங்கள் ஓடின... திடீர் திடீரென ராத்திரிகளில் வந்து ராமசாமி தன் மனைவியைப் பார்த்துவிட்டுப் போவார். சில நாட்களில் ராமசாமியின் வருகையை எதிர் பார்த்து போலீஸ் இருளில் மறைந்து காத்திருக்கும். ஆனால், எப்படியோ போலீஸை மோப்பம் பிடித்துவிட்டு ராமசாமி திரும்பிவிடுவார்.
கடைசியில் பிறந்தது, ஆண் குழந்தை. தமிழ்மறவன் என்று பெயர் வைத்துக் கொஞ்சி னார் ராமசாமி. அந்தப் பிஞ்சுக் குழந்தையின் அசைவு களும் களங்கமில்லா சிரிப்பும் ராமசாமியை குடும்பத்தை நோக்கி மீண்டும் இழுத்தது.
இந்த முறை ராணியே போய் அந்த ' க்யூ ' பிராஞ்ச் அதிகாரியைப் பார்த்தார். ராமசாமி திருந்தி வாழ விரும்புவதாகச் சொல்லி அழுதார். ' பழைய வழக்குகள் தொடர்பாக விசாரணைக்கு அழைக்கும்போது வரவேண்டும் ' என்ற நிபந்தனை யோடு ராமசாமி மீண்டும் குடும்பத்தோடு சேர்ந்து வாழ அனுமதிக்கப்பட்டார்.
பைக், முரட்டு வாழ்க்கை, தோழர்கள் என்று எல்லாவற்றையும் விட்டுவிட்டு வீட்டுக்குள் திரும்பவும் முடங்கினார் ராமசாமி. குழந்தையைக் கொஞ்சுவதிலேயே பொழுது போனது ராமசாமிக்கு! இருந்த கொஞ்சம் நிலத்தையும் சீர்திருத்தி, தேக்கு கன்றுகளை நட்டார். ஆனால், அன்றாட வயிற்றுப்பாட்டுக்கு...?
ஏதாவது வேலைக்குப் போனால் தேவலை என்றிருந்தது ராமசாமிக்கு. தெரிந்தவர்களைப் போய்ப் பார்த்தார்... அமராவதி கூட்டுறவு சிறப்பங்காடியின் ரேஷன் கடையில் சேல்ஸ்மேன் வேலை கிடைத்தது. ராங்கியம் கிராமத்தில் வேலை.
தினசரி சைக்கிளை மிதித்துக்கொண்டு காலையில் போனால், பொழுதுபோக வீடு திரும்பி விடுவார். இடையிடையே வழக்குகளுக்காக அரியலூர், திருச்சி கோர்ட்டுக்குப் போவார். இரண்டு வருடங்கள் பொழுது இப்படியே போனது. இரண்டாவது குழந்தை இளந்தமிழன் பிறந்தான்.
அன்றும் அப்படித்தான்... ரேஷன் கடையில்ருந்து சைக்கிளில் வேலை முடித்துவிட்டு திரும்பி வந்தார் ராமசாமி.
முந்திரித் தோப்புகளுக்குள் ஒருபாதை வளைவில் அவர் திரும்பும்போது, ரோட்டை மறித்துக்கொண்டு ஐந்து பைக்குகள். அவற்றில் பத்து தோழர்கள். அருகில் வந்ததும் ராமசாமியைச் சுற்றிவளைத்துக் கொண்டார்கள்.
மேலும் சலசலக்கும்..!