``கிரவுண்ட் இருந்தா நிறைய சாதிப்போம்!" -மாநில கால்பந்து கோப்பை வென்ற அரசுப் பள்ளி மாணவிகள் கோரிக்கை
தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறையின் சார்பில் சமீபத்தில் மாநில அளவில் நடத்தப்பட்ட 40-வது பாரதியார் தின விளையாட்டுப் போட்டிகளில், 40 அணிகள் பங்கேற்ற 19 வயதுக்குட்பட்டோருக்கான மகளிர் கால்பந்து போட்டியில், திருவாரூர் மாவட்ட சவளக்காரன் அரசு மேல்நிலைப்பள்ளி (ஆதிதிராவிட நலம்) முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றது. தொடர்ந்து மாநில அளவில், தேசிய அளவில் இப்பள்ளியின் மாணவிகள் விளையாடிவரும் நிலையில், 10 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது முயற்சியால் சாதனையாளர்களை உருவாக்கி வரும் பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர் மற்றும் இன்னும் பல சாதனைகளைப் படைக்கவிருக்கும் மாணவர்களிடம் கலந்துரையாடப் பள்ளிக்கு நேரில் சென்றோம்.
மதியம் உணவு இடைவேளையில் மாணவர்களைத் தனது தனித்த விசில் சத்தத்துடன் ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்த உடற்கல்வி ஆசிரியர் அருகில் சென்றோம். அப்போது, `பள்ளியின் மைதானம் எங்கு இருக்கிறது?' என்று கேட்டவாறே பேசத்தொடங்கியபோது, சிரித்துக் கொண்டே ``பள்ளிக்கு நிரந்தர மைதானம் என்பது கிடையாது. ஊர் பொது இடம் தான் மைதானம்." என்று பேச ஆரம்பித்தவர், `` என் பெயர் முத்துக்குமார். இந்த பள்ளியில் 2012 முதல் உடற்கல்வி பகுதி நேர ஆசிரியராக வேலை செய்து வருகிறேன். இந்த பள்ளியில் நிரந்தர உடற்கல்வி ஆசிரியர் கிடையாது. நான் பணிக்கு சேர்ந்த நாள் முதல் மாணவர்களை விளையாட்டின் பக்கம் கொண்டு வர வேண்டும் என முயற்சி எடுத்தேன்.
ஆனாலும், இந்தப் பள்ளிக்கென்று மைதானம் இல்லாதது பெருங்குறையாக இருந்தது. இருப்பினும், ஒரு ஆசிரியர் என்பவர் தான் பெற்ற கல்வியையும், கற்றுக் கொண்ட அனுபவத்தையும் மாணவர்களுக்கு கடத்த வேண்டும் என்ற நோக்கத்தில், எனக்குத் தெரிந்த கால்பந்து விளையாட்டை, மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க விரும்பினேன். அதற்கான முயற்சிகளிலும் இறங்கினேன். ஆண், பெண் எனத் தனித்தனி அணியாக தயார்ப்படுத்தினேன். குறுகிய காலத்திலேயே பெண்கள் அணி நல்ல முன்னேற்றம் கண்டது. கடந்த 12 ஆண்டுகளில் பள்ளிக்கல்வித்துறையின் மாநில அளவிலான போட்டிகளில், இரண்டு முறை தங்கப் பதக்கம், ஒருமுறை வெள்ளிப் பதக்கம், இரண்டு முறை வெண்கல பதக்கம் வென்றிருக்கிறோம்.
மணிப்பூர், பெங்களூருவில் நடைபெறவிருக்கிற தேசிய அளவிலான போட்டியில் 19 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 3 மாணவிகளும், 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் 3 மாணவிகளும் தேர்வாகியிருக்கின்றனர். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடந்து முடிந்த தேசிய அளவிலான சப் ஜூனியர் நேஷனல் கால்பந்து போட்டியில், இப்பள்ளியிலிருந்து ஒரு பெண் விளையாடினார். ஆந்திராவில் நடந்து முடிந்த சப் ஜூனியர் நேஷனல் கால்பந்து போட்டியில் 5 மாணவிகள் தேர்வாகி விளையாடினர். இது மட்டுமல்லாமல் ஜூனியர் நேஷனல், சீனியர் நேஷனல், கேலோ இண்டியா, SGFI SCHOOL GAME FEDERATION OF INDIA போன்ற தேசிய அளவிலான போட்டிகளிலும் எங்கள் மாணவிகள் பங்கேற்றிருக்கின்றனர்.
இந்த விளையாட்டின் மூலம் இப்பள்ளியில் படித்த ஆறு பேர் தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரிந்து வருகின்றனர். சமீபத்தில் கூட ஒரு பெண், துணை ஆய்வாளர் (SI) தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்கிறார். இன்னும் சில மாணவிகள் பள்ளி, கல்லூரிகளில் உடற்கல்வி ஆசிரியையாகப் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களைப் பார்க்கையில் ஒரு ஆசிரியராக நான் பெருமகிழ்ச்சியடைகிறேன். அதேசமயம், இப்பள்ளிக்கு நிரந்தர மைதானம் இல்லாததால் நிறைய மாணவிகளை அவர்களின் பெற்றோர்கள் வெளியில் அனுப்ப அஞ்சுகிறார்கள். பள்ளிக்கென்று தனி மைதானம் இருந்தால்தான் விளையாட்டு குறித்து விழிப்புணர்வு அவர்களிடம் இன்னும் வெகுவாக சேரும்.
எனது சொற்ப வருமானம், இப்பள்ளியில் படித்து வேலைக்குச் சென்ற மாணவிகளின் பங்களிப்பு, முதலமைச்சர் கோப்பை நிதி போன்றவற்றைக் கொண்டு மாணவ, மாணவிகளுக்கான உணவு, உடை, விளையாட்டு உபகரணங்கள், போக்குவரத்து செலவு போன்றவற்றைச் சமாளித்து வருகிறேன். மைதான வசதி இல்லாமலே இவ்வளவு சாதனைகளை எம் மாணவ, மாணவிகள் எட்டிவரும் நிலையில், தனி மைதானம் இருந்தால் இன்னும் பல சாதனை மைல்கல்லை இவர்கள் எட்டுவார்கள்." என்று பெருமிதத்தோடு தனது கோரிக்கையை அழுத்தமாக முன்வைத்தவர், ``தற்போதைய சூழலில் காலை, மாலை என விளையாட்டின் மீது ஆர்வமாக இருந்தாலே, இளம் தலைமுறையினர் போதைப் பழக்கம் போன்ற தவறான வழியில் செல்வது தவிர்க்கப்படும்." என்று தனது அக்கறையையும் வெளிப்படுத்தினார்.
அவரைத்தொடர்ந்து அங்கிருந்த மாணவிகளிடம் பேசினோம். அப்போது, ``என் பேரு ஆஷிகா நான் சிக்ஸ்த்துலேருந்து ஃபுட் பால் விளையாடுறேன்." என்ற அறிமுகத்துடன் பேசத்தொடங்கிய மாணவியொருவர், ``நான் அஞ்சாவது படிக்கிறப்ப ஃபுட்பால் விளையாண்ட அக்காங்க போட்டாவ ரோட்ல இருந்த பேனர்ல பாத்து, எனக்கும் ஃபுட்பால் மேல இன்ட்ரஸ்ட் வந்துட்டு. இப்போ நானும், என் டீம்மேட்ஸும் டிஸ்ட்ரிக்ட், ஸ்டேட், நேஷனல் கேம்ப் மற்றும் ஜூனியர் செலக்சன் எல்லாம் அட்டெண்ட் பண்ணிருக்கோம். எங்க அப்பா, அம்மா விவசாய வேல பாத்துட்டு இருக்காங்க. இந்த ஸ்கூலுக்குனு பர்மனென்ட் கிரவுண்ட் கிடையாது. வயலுக்கு நடுவுல உள்ள டெம்ப்ரவரி கிரவுண்ட்ல தான் விளையாடுவோம்.
அதுவும் மழை பெஞ்சா விளையாட முடியாது. அதனால காலைல நாலு மணிக்கு முழிச்சி மன்னார்குடி ஃபின்லே ஸ்கூல் கிரவுண்டுக்கும், திருவாரூர் கிரவுண்டுக்கும் பஸ்ல போவோம். இதனால ஒரு நாளைக்கு 50 ரூபாய் செலவாகும். அப்றோம் ஒன்பதரை மணிக்கெல்லாம் ஸ்கூலுக்கு வந்துடுவோம். எங்களுக்கு வீட்ல நல்ல ஹெல்தியான சாப்பாடு இல்ல. எங்க சீனியர் அக்காங்க, அவங்க பட்ட கஷ்டத்தை நாங்க படக்கூடாதுனு எங்களுக்கு ஹெல்ப் பண்றாங்க. நாங்க மேல வரணும்னு சார் அடிக்கடி சொல்லிட்டு இருப்பாரு. விளையாட்டுல தோத்து போய் உட்காரப்பெல்லாம், அடுத்த தடவ பாத்துக்கலாம் தங்கம்-னு தேத்தவாங்க. நாங்க இவங்கள சாரா மட்டும் பார்க்கல, எங்க அப்பாவ தான் பாக்குறோம்.
நாங்க சாப்டாம கிரவுண்டுக்கு வர்றப்ப எல்லாம் சாப்பாடு வாங்கி தர்றது, பஸ் டிக்கெட் எடுக்கிறதுனு எங்கள கண்ணும் கருத்துமாக பாத்துபாங்க. ஒரு மாசத்துக்கு எப்படியும் ரெண்டு பால் கிளிஞ்சுடும். அடுத்த நாளே சாரு புது பாலோடு வருவாரு அதெல்லாம் சாரோட காசுதான்னு எங்களுக்கு தெரியும். சார் பெருசா சம்பாதிக்கல, இருந்தாலும் அவருடைய கனவு எங்களை இந்தியாவுக்கு விளையாட வச்சு பாக்கணும். எங்களோட கனவாவும் அதான் இருக்கு! எங்களுக்கு பக்கத்திலேயே கிரவுண்டு இருந்தா நல்லா பிராக்டிஸ் செய்ய முடியும்." என்று மைதான ஏக்கத்துடன் அரசுக்கு வேண்டுகோள் விடுத்தார் நாளைய இந்திய கால்பந்தாட்ட வீராங்கனை.
கடந்த ஆண்டே ஒருமுறை, முதல்வர் ஸ்டாலினிடம் இப்பள்ளி மாணவிகள் மைதானம் கோரி நேரில் மனு அளித்தும் ஓராண்டாக மைதானம் அமைக்கப்படாததால், தமிழ்நாடு அரசும், ஆதிதிராவிடர் நலத்துறையும், மாவட்ட நிர்வாகமும் தனி கவனம் எடுத்து உடற்கல்வி ஆசிரியர், மாணவ, மாணவிகளின் கோரிக்கையை ஏற்று ஒரு நிரந்தர மைதானத்தை அமைத்துக்கொடுத்து, பல சாதனையாளர்கள் உருவாக அடித்தளமிட வேண்டும்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...