Pushpa 2: ``Peelings பாடல்ல வர்றது நெடுநல்வாடை வரிகள் கிடையாது!'' - பாடலாசிரியர் விவேகா சொல்வதென்ன?
`புஷ்பா 2' படத்தின் பாடல்கள் பலரின் கவனத்தையும் ஈர்த்திருக்கிறது.
இத்திரைப்படத்தின் பாடல்கள் அனைத்தையும் தமிழில் பாடலாசிரியர் விவேகா எழுதியிருக்கிறார். `புஷ்பா 1' படத்தின் பாடல்கள் அனைத்தும் மெகா ஹிட் அடித்ததற்கு முக்கிய காரணமானவர் விவேகா. `புஷ்பா 2' படத்தில் இடம்பெற்றிருக்கும் `ஃபீலிங்க்ஸ்' பாடலின் தொடக்கத்தில் வரும் , `மல்லிகா பாணத்தே அம்புகளோ கண்முன தும்புகளோ' என்ற வரிகள் பத்துப்பாட்டு நூல்களில் ஒன்றான நெடுநல்வாடையின் வரிகளென சமூக வலைதளப் பக்கங்களில் பலரும் பதிவிட்டு வருகின்றனர். சிலரோ அது நெடுநல்வாடை வரிகள் அல்ல எனவும் பதிவிட்டு வந்தனர். இந்த வரிகள் தொடர்பாகவும் , `புஷ்பா 2' திரைப்படத்தின் பாடல்கள் தொடர்பாகவும் பாடலாசிரியர் விவேகாவிடம் பேசினோம்.
இது தொடர்பாக பேசிய பாடலாசிரியர் விவேகா, `` `ஃபீலிங்க்ஸ்' பாடல்ல வர்றது நெடுநல்வாடை வரிகளே கிடையாது. தவறாக சமூக வலைதளப் பக்கங்கள்ல போடுறாங்க. சமூக வலைதளங்கள்ல இது மாதிரி நிறைய விஷயங்கள் போடுறாங்க. நான் இதுக்கு முன்னாடி `கங்குவா' திரைப்படத்துல `மண் தோன்றா காலத்தில் முன்தோன்றிய மூத்தகுடியான்'னு ஆதி நெருப்பே பாடல்ல எழுதியிருந்தேன். இது இலக்கிய வரிகள். இந்த பாடலும் பேசப்பட்டது.
அந்த மாதிரி `ஃபீலிங்க்ஸ்' பாடல்ல அந்த இலக்கிய தொடர்பு இருக்கும்னு என்பதுதான் பதிவிடுபவர்களின் யூகமாக இருக்கும்னு நான் நினைக்கிறேன். அந்த பாடலின் தொடக்கத்துல வர்றது மலையாளம் வரிகள்." என்றவர் `புஷ்பா 2' பாடல்கள் தொடர்பாகவும் நம்மிடையே பேசினார்.
அவர், `` கடந்த 18 வருடங்களாக டி.எஸ்.பி சாரோட எல்லா படங்களுக்கும் நான் பாடல் எழுதுறேன். என்னுடைய வொர்க்கிங் ஸ்டைல் அவருக்குப் பிடிச்சிருக்கு. அதுமட்டுமல்ல, எங்களுடைய கூட்டணில வந்த எல்லா பாடல்களும் தொடர்ந்து வெற்றியை அடைஞ்சிருக்கு. அவர் இசையமைக்கிற நேரடி படங்களுக்கும் , பிற மொழி படங்களுக்கும் நான்தான் பாடல்கள் எழுதுறேன். இப்போ பேன் - இந்தியா படங்கள் அதிகமாக வர்றதுனால, அந்த படங்களிலும் தொடர்ந்து நான் எழுதுறேன்.
`புஷ்பா 1' பாடல்கள் மீது எதிர்பார்ப்பு இல்ல. ஆனால், அந்தப் படத்தின் பாடல்களெல்லாம் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக இருந்தது. உலகளவுல பெரிய வெற்றியடைஞ்சது. நான் வெளிநாடுகளுக்கும், வெளிமாநிலங்களுக்கு போகும்போது `புஷ்பா' படத்தின் பாடல்களை கொண்டாடுறதைப் பார்த்திருக்கிறேன். `புஷ்பா 1' பாடல்கள் புஷ்பாங்கிற பெயரை பிராண்ட்டாக உருவாக்குச்சு. புஷ்பா முதல் பாகம் மாதிரியான பாடல்கள் இரண்டாம் பாகத்துலையும் வரணும்னு எதிர்பார்த்தால் சப்ரைஸ் இல்லாமல் போயிடும். கம்போஸிங்ல உட்காரும்போதே பாடல்கள் அனைத்து பாடல்களும் வேற மாதிரிதான் இருக்கணும்னு டி.எஸ்.பி சார் சொன்னார்.
இந்த இரண்டாம் பாகத்தின் பாடல்கள் அனைத்தும் படத்தில் வரும் சூழ்நிலைகளை மையப்படுத்தி இருக்கு. `புஷ்பா - 2'- வின் பாடல்கள் விஷுவலாக பெரிய வெற்றியை இப்போது பெற்றிருக்கு. படத்தின் 1000 கோடி மைலேஜுக்கு பாடல்கள் மிகப்பெரிய காரணமாகவும் அமைஞ்சிருக்கு. தேவி ஸ்ரீ பிரசாத் சாரின் உழைப்பு படத்துக்கு மிகப்பெரிய சக்தியையும் கொடுத்திருக்கு. பாடல்களுக்கு நேர்மறையான விமர்சனங்களும், எதிர்மறையான விமர்சனமும் வருது. எல்லா பாடல்களுக்கும் இந்த இரண்டு விமர்சனங்களும் வரும். இன்ஸ்டாகிராம்ல `புஷ்பா 2' பாடல்கள் இன்னைக்கு வரைக்கும் டிரெண்ட்ல இருக்கு. படம் ரிலீஸானதுல இருந்து `ஃபீலிங்க்ஸ்' பாடல் டிரெண்டிங்ல முதல் இடத்துல இருக்கு. " எனக் கூறி முடித்துக் கொண்டார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...