423 ரன்கள் வித்தியாசத்தில் நியூஸி. இமாலய வெற்றி: விடைபெற்றார் டிம் சௌதி!
Chess: வேண்டுமென்றே தோற்றாரா சீன வீரர்...? - தோல்வி குறித்து டிங் லிரென் விளக்கம்!
சிங்கப்பூரில் நடந்த உலக செஸ் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் தோல்வியடைந்தது குறித்து வெளிப்படையாகப் பேசியுள்ளார் சீனாவின் கிராண்ட் மாஸ்டர் டிங் லிரன்.
செஸ் இறுதிப்போட்டியின் 14வது சுற்றில் வெற்றி பெறுபவரே சாம்பியன் என்ற நிலை இருந்ததால் பரபரப்பாகப் போட்டி நடைபெற்றது. போட்டியின் இறுதி தருணத்தில் மிகப் பெரிய தவற்றைச் செய்தார் டிங் லிரன் அது குகேஷ் வெற்றி பெற உதவியது.
இறுதிப்போட்டி குறித்து எழுந்த விமர்சனங்கள்!
இந்த போட்டி உலக சாம்பியன் இறுதிப்போட்டிக்கான சுவாரஸ்யத்தைக் கொண்டிருக்கவில்லை என விமர்சனங்கள் எழுந்தன. தற்போது ரஷ்ய செஸ் ஃபெடரேஷன் தலைவர் ஆண்ட்ரி ஃபிலடோவ் நடப்பு சாம்பியன் டிங் லிரென் வேண்டுமென்றே தோற்றதுபோலத் தெரிவதாகக் கூறியுள்ளார். ஃபிலடோவ் சர்வதேச செஸ் கூட்டமைப்பு இறுதிப்போட்டியை ஆராய்ந்து விசாரணை நடத்த வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
முன்னாள் உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சன் மற்றும் விளாதிமிர் க்ராம்னிக் ஆகியோரும் இறுதிப்போட்டியில் தரமான விளையாட்டு இல்லை என்பதைச் சுட்டிக்காட்டி கேள்வி எழுப்பியிருந்தனர்.
Ding Liren விளக்கம்!
இந்த நிலையில் செஸ் பேஸ் இந்தியா தளத்தில் பேசிய டிங், "என்னுடைய சிறப்பான விளையாட்டையே முயன்றேன், நீங்கள் நான் எவ்வளவு நேரம் எடுத்துக்கொண்டேன் எனக் காணலாம். நான் ஆரம்பகட்டத்தில், ஆட்டத்தின் நிலை தெரியும் முன்னரே அதிக நேரத்தைப் பயன்படுத்தினேன்... சில நேரங்களில் நான் சிறப்பாகச் செயல்பட்டேன் சில நேரங்களில் டெவலப் செய்வதற்கான சரியான பாதையைக் கண்டறிய முடியவில்லை."
மேலும், "எல்லா போட்டியிலும் அவர் நீண்ட சிந்தனையில் இருக்கும்போது அவரது நேரம் என்னுடைய நேரத்துக்கு இணையாக வந்துவிடும். நான் அதிக நேரம் செலவழிக்கும்போது தரமான ஆட்டத்தை வெளிப்படுத்த முடியும். இந்த போட்டியின் தரம் மிகவும் தாழ்வாக இல்லை. நான் குறைந்த நேரமே இருந்தபோதும் சில சிறந்த நகர்வுகளைச் செய்திருந்தேன்." என்றார்.
இறுதிப்போட்டியானது சமன் செய்யப்படுவதற்கான வாய்ப்புகளே அதிகம் இருந்தது. டிங் செய்த ஒரு பிழையால் குகேஷ் வெற்றி பெற்று மிகச் சிறிய வயதில் உலக சாம்பியன் ஆனவர் என்ற வரலாற்றைப் படைத்துள்ளார்.