கோவை MyV3Ads பாணியில் கிளம்பிய மற்றொரு நிறுவனம் - அதிரவைக்கும் மோசடி
‘விளம்பரம் பார்த்தால் பணம்’ என்று நூதன மோசடியில் ஈடுபட்ட கோவை ‘MyV3Ads’ என்ற நிறுவனம் மீது பல்வேறு புகார்கள் எழுந்தன. அந்த நிறுவனத்தின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, உரிமையாளர்கள் விஜயராகவன், சக்தி ஆனந்தன் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
“MyV3Ads நிறுவனத்தில் முதலீடு செய்யலாம் என்று தகவல் வந்தால், அது சட்டவிரோதமானது. மோசடியானது. பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்.” என்று காவல்துறை கூறியது. இருப்பினும் அதே கோவையில் அதே பாணியில் மற்றொரு மோசடி சம்பவம் நடந்துள்ளது.
கோவை மாவட்டம், பொள்ளாச்சி சூலேஸ்வரன்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் சதாம் உசைன். இவர் டூ வீலர் ஓர்க் ஷாப் நடத்தி வருகிறார். இவரது நண்பர் சிக்கந்தர் பாஷா என்பவர் மூலமாக மதன்குமார் என்பவர் அறிமுகமாகியுள்ளார். மதன்குமார் ‘GBY’ என்ற டிரேடிங் நிறுவனத்தின் மொபைல் ஆப் மூலம் முதலீடு செய்தால் நல்ல லாபம் கிடைக்கும் என்று ஆசையை தூண்டியுள்ளார்.
இதற்காக ஒரு தனியார் திருமணம் மண்டபத்தில் ஆலோசனை கூட்டத்தையும் நடத்தியுள்ளனர். மதன்குமாரின் வார்த்தைகளை நம்பி சதாம் உசைன் தன் நண்பர்கள், உறவினர்கள் ஆகியோர் இணைந்து ரூ.1.30 லட்சம் முதலீடு செய்தனர்.
ஆனால் அவர்கள் கூறிய ஆப் சரியாக வேலை செய்யவில்லை. இதையடுத்து சதாம் உசைன் மதனை தொடர்பு கொண்டுள்ளார். அதற்கு உரிய பதில் அளிக்காமல் இருந்த மதன் ஒரு கட்டத்தில் தலைமறைவாகியுள்ளார். இதுகுறித்து சதாம் உசைன் மகாலிங்கபுரம் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதனடிப்படையில் காவல்துறையினர் பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த மதன்குமாரை கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன.
மதன் பெயின்டிங் கான்ட்ராக்டராக உள்ளார். அவர் மட்டுமல்லாமல் இந்த மோசடியின் பின்னணியில் மேலும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் இதேபோல ஏராளமான மக்களிடம் ஆசையை தூண்டிவிட்டு பணம் வாங்கி மோசடியில் ஈடுபட்டுள்ளனர். மணிவண்ணன் என்ற ஆடிட்டர், மணிவண்ணனின் மனைவி மீரா மற்றும் குணசுந்தரி, கணேஷ், மணி, கதிர்வேல், கார்த்திகேயன், விக்னேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“இதில் தொடர்புடைய மேலும் சிலரை தேடி வருகிறோம். பாதிக்கப்பட்ட மக்கள் புகாரளிக்கலாம். மக்கள் இது போன்ற எம்.எல்.எம் நிறுவனங்களை நம்ப வேண்டாம்.” என்று காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.