Tata Punch: மாருதியின் 40 ஆண்டுக்கால சாதனையை முறியடித்த 'Punch' - சொல்லாமல் அடித...
`பல கோடி ரூபாய் முறைகேடு' - மதுரை மத்திய சிறையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் சோதனை
மதுரை மத்திய சிறையில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்துவரும் நிலையில், பல கோடி ரூபாய் மோசடிப்புகாரில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை நடத்தியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மத்திய சிறையில், கடந்த 2016 முதல் 2021 -ம் ஆண்டுவரை சிறைக் கைதிகள் மூலம் பொருள்கள் தயாரிக்கவும், அதற்கான மூலப்பொருள்களை வாங்கியதிலும், விற்பனை செய்ததன் மூலம் கிடைத்த வருவாயிலும் பல கோடி ரூபாய் மோசடி நடந்ததாக புகார் எழுந்தது.
இதுகுறித்து ஏற்கெனவே வழக்கறிஞர் புகழேந்தி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்த நிலையில், அதைத் தொடர்ந்து அப்போதைய சிறைத்துறை டி.ஜி.பி-யால் மதுரை மத்திய சிறையில் பணியாற்றிய 9 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். மேலும், இந்த மோசடிப் புகார் தொடர்பாக, மத்திய கணக்கு தணிக்கைத்துறை அதிகாரிகள் மதுரை மத்திய சிறையில் உள்ள ஆவணங்களையும், மூலப்பொருள்களை கொள்முதல் செய்யப்பட்ட நிறுவனங்களில் விற்பனை செய்யப்பட ரசீதுகளையும் ஆய்வு செய்ததில் ரூ 1.51 கோடி மோசடி நடந்துள்ளது தெரிய வந்தது.
இதுமட்டுமின்றி தமிழகத்தில் உள்ள 3 மத்திய சிறைகளிலும் சிறைவாசிகள் தயாரித்த பொருள்களை விற்பனை செய்ததில் 14.5 கோடி ரூபாய் வரை முறைகேடு நடந்ததாக தணிக்கைத்துறை தெரிவித்துள்ளது. ஊழல் தடுப்பு இயக்குநரகம் விசாரணை நடத்தி முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.
இதனை தொடர்ந்து, மதுரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி அதன் அடிப்படையில் முறைகேடு நடைபெற்ற காலத்தில் மதுரை சிறையில் எஸ்.பி-யாக பணியாற்றிய ஊர்மிளா (தற்போது கடலூர் மத்திய சிறை எஸ்.பி) சிறை அதிகாரி வசந்தகண்ணன் (தற்போது பாளையங்கோட்டை சிறை ஏ.டி.எஸ்.பி) தியாகராஜன் (தற்போது வேலூர் சிறை நிர்வாக அதிகாரி) உள்பட மதுரையைச் சேர்ந்த ஜாபருல்லாகான், முகமது அன்சாரி, முகமது அலி, சென்னையைச் சேர்ந்த சீனிவாசன், சாந்தி, வெங்கடேஷ்வரி, நெல்லையைச் சேர்ந்த சங்கரசுப்பு, தனலட்சுமி உள்ளிட்ட 11 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர்.
இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், மதுரை மத்திய சிறையில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அங்கிருந்த ஆவணங்களை ஆய்வு செய்து சிறை அதிகாரிகள் சிலரிடம் விசாரணை நடத்தியுள்ளார்கள். இந்த சோதனை மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.