OYO: திருமணமாகாத ஜோடிகளுக்கு இனி அனுமதி இல்லை; 'ஓயோ'-வின் திடீர் நடவடிக்கைக்குக் காரணம் இதுதான்!
இந்தியா முழுவதும் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆன்லைன் மூலம் பல தங்கும் விடுதிகளை நடத்தி வருகிறது பிரபல 'OYO' நிறுவனம்.
திருமணமாகாதவர்கள், நண்பர்கள், காதலர்கள் என எல்லோருக்கும் அனுமதி வழங்கி வந்தது 'OYO' நிறுவனம். தற்போது இந்த நடைமுறைகளை மாற்றி, புதிய கட்டுப்பாடுகளைக் கொண்டுவரவிருக்கிறது அந்நிறுவனம். குறிப்பாக, திருமணமாகாத ஜோடிகளுக்கு அனுமதி வழங்கப்படாது என்ற கட்டுப்பாட்டைக் கொண்டுவந்திருக்கிறது.
இதற்குக் காரணம் உத்தரப்பிரதேசம் மீரட்டில் நடந்த சம்பவம் ஒன்றுதான் காரணம் என்று கூறப்படுகிறது. திருமணமாகாதவர்கள் பலரும் 'OYO' ஹோட்டலைத் தவறாகப் பயன்படுத்துவதால், குடும்பத்தினர் 'OYO' வில் தங்குவதைத் தவிர்க்கின்றனர். இதனால் மீரட்டில் இருக்கும் பலர், 'திருமணமாகாதவர்களை 'OYO'வில் அனுமதிக்கக் கூடாது, இல்லையென்றால் நாங்கள் 'OYO' வை புறக்கணிப்போம்' என்று 'OYO' நிறுவனத்திற்கு இ-மெயில் மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும், அப்பகுதியில் இருக்கும் மக்கள் அமைப்புகள், குழுவினர் பல புகார்களை இது தொடர்பாகத் தெரிவித்திருக்கின்றனர்.
இப்படியான கடும் எதிர்ப்புகள் வந்ததால், 'OYO' நிறுவனம் மீரட்டில் இருக்கும் தங்களின் ஹோட்டலில் திருமணமாகாத ஜோடிகளுக்கு அனுமதியில்லை என்ற புதிய கட்டுப்பாட்டைக் கொண்டுவந்துள்ளது. இந்தக் கட்டுப்பாடு இந்தியா முழுவதும் இருக்கும் பிற மாநிலங்களிலும் படிப்படியாக நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது.
இது தொடர்பாகப் பேசியிருக்கும் 'OYO' நிறுவனத்தின் துணைத் தலைவர் பவாஸ் ஷர்மா, "நாங்கள் எங்கள் விடுதியில் தங்கும் மக்களின் பாதுகாப்பிற்கும், சுதந்திரத்திற்கும் எப்போதும் முக்கியத்துவம் அளித்து வருகிறோம். அதேபோல மக்களின் தனிப்பட்ட விஷயங்களுக்கும், தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் மதிப்பளிக்கிறோம். அதன் அடிப்படையிலேயே நிறுவனத்தை நடத்தி வருகிறோம். அதேசமயம் சமூகப் பொறுப்பும் எங்களுக்கு இருக்கிறது. சமீபத்தில் சில அமைப்புகள், குழுக்கள் அந்தச் சமூகப் பொறுப்புடன் சில கோரிக்கைகளை எங்களிடம் முன்வைத்தன. அதை ஏற்றுக்கொண்டு புதியக் கட்டுப்பாடுகளைக் கொண்டு வருகிறோம்" என்றார்.
'OYO'வின் இந்தப் புதியக் கட்டுப்பாடுகளைப் பலரும் பாராட்டி, வரவேற்று வருகின்றனர். மற்றொரு தரப்பினர், 'மக்களின் தனிப்பட்ட சுதந்திரத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். OYO- வின் இந்தக் கட்டுப்பாடுகள் வரவேற்க்கத்தக்கது அல்ல' என்று சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
'OYO'வின் இந்தப் புதியக் கட்டுப்பாடுகள் குறித்த உங்கள் கருத்தை கமென்ட்டில் பதிவிடவும்.