பிப்ரவரியில் தேர்தலா? தில்லி பேரவை தேர்தல் தேதி இன்று வெளியாகிறது!
GST: ரூ.40 லட்சம் வருமானம்... பானிபூரி விற்பவருக்கு வந்த ஜி.எஸ்.டி நோட்டீஸ்! - என்ன நடந்தது?
தமிழ்நாட்டைச் சேர்ந்த பானிபூரி விற்பனையாளர் ஒருவருக்கு ஜி.எஸ்.டி (GST) நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2023-ம் ஆண்டு முதல் 2024-ம் ஆண்டு வரை பானிபூரி விற்றதின் மூலம் அந்தப் பானிபூரி விற்பனையாளரின் ஆண்டு வருமானம் ரூபாய் 40 லட்சத்தைத் தாண்டி உள்ளது. இதனால், அவருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. இந்த நோட்டீஸ் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு தற்போது பேசுபொருளாக மாறி உள்ளது.
வரி செலுத்தாமல் தப்பிக்கும் நபர்களுக்காக வருமான வரித்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதனடிப்படையில் அதிகமான பண பரிமாற்றம் கொண்டுள்ள நபர்களின் விவரங்களை வங்கிகள் வருமான வரித்துறைக்கு சமர்ப்பிக்கின்றன. யுபிஐ செயலியின் (UPI Apps) மூலம் மேற்கொள்ளப்படும் பண பரிமாற்றமும் வருமான வரித்துறைக்கு சமர்ப்பிக்கப்படுகின்றன. இதன் அடிப்படையில் அதிக பண பரிமாற்றம் கொண்டுள்ள நபர்களின் விவரங்கள் வருமான வரித்துறையால் சரிபார்க்கப்பட்டு நோட்டீஸ் அனுப்பப்படுகிறது.
அதன் அடிப்படையில் தமிழ்நாட்டை சேர்ந்த பானிபூரி விற்பனையாளரின் 2023 முதல் 2024 வரை அவரது வருமானம் 40 லட்சத்தை கடந்துள்ளதை கண்டறிந்து ஜி.எஸ்.டி நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. 2024-ஆம் ஆண்டின் டிசம்பர் 17-ஆம் தேதியை குறிப்பிட்டு தமிழ்நாடு சரக்கு மற்றும் சேவை வரி சட்டம் மற்றும் மத்திய ஜிஎஸ்டி சட்டத்தின் பிரிவு 70 படி, அந்த பானிபூரி விற்பனையாளர் நேரில் ஆஜராக வேண்டும் என்றும், அனைத்து ஆவணங்களையும் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் அந்த நோட்டீஸில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்தப் பானி பூரி விற்பனையாளர் ரேசர்பே (Razorpay), போன்பே (Phonepe) மூலம் 40 லட்சம் வருமானம் பெற்று உள்ளார் என்று கண்டறிந்து இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.
ஜிஎஸ்டி பதிவு செய்யாமல் சேவைகளை வழங்குவது என்பது குற்றம் என்று வருமான வரித்துறை நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த நோட்டீஸ் சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு, அதற்கு பல்வேறு தரப்பினர் தங்களுடைய கருத்துகளை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.