M K Stalin: `சிந்துவெளி எழுத்து முறை; ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு' - மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
சென்னை எழும்பூர் அரசு அருங்காட்சியகத்தில் சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
இதையடுத்துப் பேசிய ஸ்டாலின், "சிந்துவெளி நாகரிகத்தை கடந்த 1924ல் ஜான் ஹீபர்ட் மார்ஷல் உலகிற்கு அறிவித்தார்; இது கடந்தகாலம் குறித்த புரிதலை மாற்றியது. சிந்துவெளி நாகரிகம் தமிழர்களின் பாரம்பரியத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது; மார்ஷலுக்கு சிலை அமைத்து சிறப்பிப்பது தமிழக அரசுக்கு பெருமை.
சிந்துவெளி புதிருக்கு உரிய விடையைக் கண்டறிந்து, சிந்துவெளி எழுத்து முறையை தெளிவாகப் புரிந்துகொள்ள வழிவகை செய்யும் அமைப்பு அல்லது நபருக்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் பரிசு வழங்கப்படும்.
சிந்துவெளி ஆராய்ச்சியை மேற்கொள்ளும் வகையில், ஐராவதம் மகாதேவன் பெயரில் ஆய்வறிக்கை அமைக்க ரூ.2 கோடி நிதி உதவி வழங்கப்படும். தமிழ்ப் பண்பாட்டை உலகறியச் செய்வதற்காக உழைப்பவர்களில், ஆண்டுதோறும் 2 அறிஞர்களுக்கு விருதுகள் வழங்கப்படும்" என்று பேசியிருக்கிறார்.