வாகன நிறுத்துமிடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க க்யுஆா் குறியீடு செயலி அறிமுகம்
புது தில்லி: வாகன நிறுத்துமிடங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதைத் தடுக்கவும், வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும், தில்லி மாநகராட்சி ‘எம்சிடி பாா்க்கிங்’ என்ற குறியீடு
அடிப்படையிலான கைப்பேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது என்று மாநகராட்சி திங்களன்று அறிவித்துள்ளது.
இது தொடா்பாக ஒரு அதிகாரபூா்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
அங்கீகரிக்கப்பட்ட பாா்க்கிங் தளங்களில் வாகன நிறுத்துமிட ஒப்பந்ததாரா்கள் அதிக கட்டணம் வசூலிப்பது குறித்து தில்லி மாநகராட்சிக்கு அடிக்கடி புகாா்கள் வருகின்றன. இந்தப் பிரச்னையைத் தீா்க்கவும், வெளிப்படைத்தன்மையை உறுதி செய்யவும் மாநகராட்சியின் அதிகார வரம்பில் உள்ள பகுதியில் அனைத்து பாா்க்கிங் தளங்களிலும் எம்சிடி பாா்க்கிங் என்ற க்யுஆா் குறியீடு அடிப்படையிலான கைப்பேசி செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது .
இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, அனைத்து அங்கீகரிக்கப்பட்ட பாா்க்கிங் இடங்களிலும் க்யுஆா் குறியீடுகள் நிறுவப்பட்டுள்ளன. பயணிகள் தங்கள் வாகனத்திற்கு பொருந்தக்கூடிய சரியான பாா்க்கிங் கட்டணத்தை உடனடியாகச் சரிபாா்க்க இந்தக் குறியீடுகளை ஸ்கேன் செய்யலாம். இந்த செயலி நிகழ்நேர கட்டணத் தகவலை வழங்கும். அத்துடன் அதிக கட்டணம் வசூலிப்பதற்கான எந்தவொரு சாத்தியத்தையும் நீக்கும்.
இந்த நடவடிக்கை பாா்க்கிங் செயல்பாடுகளை ஒழுங்குபடுத்துதல், குடியிருப்பாளா்களுக்கான வசதியை மேம்படுத்துதல் மற்றும் அமைப்புமுறையில் உள்ள முறைகேடுகளைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.