மலப்புரம்: தும்பிக்கையால் தூக்கி வீசிய யானை; மிரண்டு ஓடிய 21 பேர் காயம்!
கேரளத்தின் மலப்புரத்தில் திருவிழாவின் போது, அழைத்து வரப்பட்ட யானைக்கு மதம் பிடித்தது. அதைக்கண்டு மிரண்டு ஓடியதில் 21 பேர் காயமடைந்தனர்.
கேரளத்தின் மலப்புரம் மாவட்டத்தில் திரூர் பகுதியில் உள்ள பிபி அங்காடி, புதிய அங்காடி நேர்ச்சா விழாவுக்கு அழைத்து வரப்பட்ட யானைக்கு இரவு 12.30 மணியளவில் மதம் பிடித்துள்ளது.
பாக்கத் ஸ்ரீகுட்டன் என்ற அந்த யானை, கூட்டத்தில் இருந்த அனைவரையும் தும்பிக்கையால் தாக்கியதுடன் ஒருவரது காலைப் பிடித்து இழுத்து தூக்கி வீசியது. இதில், அவர் பலத்த காயமடைந்தார். அவரை யானை தாக்கும் விடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
படுகாயமடைந்தவரை மீட்ட அங்கிருந்தவர்கள் அவரை கொட்டக்கல்லில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் தற்போது ஆபத்தான நிலையில் சிகிச்சையில் உள்ளதாக தெரிவித்தனர்.
மேலும், யானை மிரண்டு ஓடியதைக்கண்டு அச்சமுற்ற பொதுமக்களும் தப்பிக்க முயன்று தடுமாறி விழுந்ததில் 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.
பின்னர், மதம் பிடித்த யானை பாகன்களால் கட்டுப்படுத்தப்பட்டு அதிகாலை 2.15 மணியளவில் சங்கிலியால் பிணைக்கப்பட்டது.