லெபனான்: ஐ.நா. படையில் உள்ள இந்திய ராணுவத்தினருக்கு உள்நாட்டு வாகனங்கள்
மகளிர் உரிமைத் தொகை: விடுபட்டவர்களுக்கு 3 மாதங்களில் வழங்கப்படும் -உதயநிதி
மகளிர் உரிமைத் தொகை விண்ணப்பித்து விடுபட்டவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு 3 மாதங்களில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் 2025ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றது. மூன்றாவது நாளான இன்றைய கூட்டத்துக்கு, அண்ணா பல்கலை. விவகாரத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அதிமுக எம்எல்ஏக்கள் கருப்பு சட்டை அணிந்து வந்துள்ளனர்.
இந்த நிலையில், கேள்வி நேரத்தின்போது கலைஞர் மகளிர் உரிமைத் தொகை குறித்து உறுப்பினர்கள் கேள்வி எழுப்பினர்.
இதனைத் தொடர்ந்து, மகளிர் உரிமைத் தொகையை செயல்படுத்தும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சரும் துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பதிலளித்தார்.
அப்போது அவர் பேசியதாவது:
மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை அமல்படுத்துவதற்காக சிறப்பு முகாம்கள் அமைக்கப்பட்டு, தமிழகம் முழுவதும் 1.63 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
அவற்றை ஆய்வு செய்ததன் அடிப்படையில் கிட்டத்திட்ட 70 சதவிகித விண்ணப்பங்கள் முதல்கட்டமாக ஏற்கப்பட்டன. மேலும், முதல்முறை விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்டவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, கூடுதலாக 9 லட்சம் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
கடந்த டிசம்பர் மாதம் 1.14 லட்சம் மகளிருக்கு ரூ. 1,000 உரிமைத் தொகை வழங்கப்பட்டுள்ளது. தற்போது விடுபட்டவர்களில் தகுதியுள்ளவர்களுக்கு மகளிர் உரிமைத் தொகை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
தகுதியுள்ள அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்குவது தொடர்பான கோரிக்கைகள் முதல்வருக்கு கொண்டு சென்றுள்ளோம். 3 மாதங்களில் நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்தார்.