Mental Health: ``கூச்சப்படாதீங்க.. மனம் விட்டு அழுதிடுங்க" - மருத்துவர்கள் சொல்வதென்ன?
உடல் வலி மற்றும் மனவலியை வெளிப்படுத்தும் முக்கியமான வடிகால் கண்ணீர்; அதை ஒருபோதும் அடக்கிவைக்காதீர்கள் என்கிறது மருத்துவ உலகம்.
சென்னை கண் மருத்துவர் அருள்மொழிவர்மன் சொல்கிறார். ''கண்களின் மேல் இமைகளுக்கு கீழ் அமைந்திருக்கும் கண்ணீர் சுரப்பிகள்தான் (Tear glands) கண்ணீர் உற்பத்தியாகும் இடம். அங்கிருந்து மிகச் சிறிய 'கண்ணீர் நாளங்கள்’ (Tear ducts) வழியாக கண்களுக்குச் செல்லும். கண்களுக்குச் செல்லும் இந்த நீரானது, கரு விழியின் மீது ஒரு மெல்லிய படலமாக பரவி நிற்கும். ஒவ்வொரு தடவை நாம் கண் சிமிட்டும்போதும் அது நம் கண் முழுவதும் ஒரு மெல்லிய படலமாகப் பரவி, கண்ணைக் குளிர்ச்சியாக வைத்து அதேசமயம் தூசிகளில் இருந்தும் மற்ற வெளிப்பாதிப்புகளில் இருந்தும் காக்கும். இந்தச் செயல் நீங்கள் விழித்து இருந்தாலோ அல்லது தூங்கினாலோ, மகிழ்ச்சியாக இருந்தாலோ அல்லது சோகமாக இருந்தாலோ எது எப்படி இருந்தாலும் தவறாமல் நடக்கும் ஒரு செயல். ஆனால், கண்ணீர் சுரப்பிகளில் இருந்து சுரக்கும் கண்ணீர், கண்களில் எரிச்சல் ஏற்படும்போது மட்டும் வழக்கத்தைவிட சற்றே அதிகமாக சுரக்கும். இந்த அதிகப்படியான கண்ணீருக்கு எதிர்வினைக் கண்ணீர் (Reflex tears) என்று பெயர். சற்று அதிக சோகமான மனநிலையில் இருந்தாலோ அல்லது மகிழ்ச்சியாக இருந்தாலோ சுரக்கும் அதிகப்படியான கண்ணீருக்கு 'உணர்வுசார் கண்ணீர்’ (Emotional tears) என்று பெயர். இதைத்தான் நாம் எல்லோரும் கண்ணீர் என்று சொல்கிறோம்.
இப்படிக் கண்ணீர் சுரப்பியில் இருந்து வெளிவரும் அனைத்து வகை கண்ணீரும், இரண்டு நுண்ணிய நாளங்கள் வழியாக மேல் மற்றும் கீழ் இமைகளின் உள்பகுதிக்கு வந்து அங்கிருந்து 'நேசோலாக்ரிமல்’ (Nasolacrimal) எனும் குழாய்கள் வழியாக மூக்குப்பாலத்திற்குச் செல்லும். அங்கிருந்து அவை, நாசிக் குழிக்குள் திருப்பிவிடப்பட்டு, அங்கிருந்து வாய்வழியாக விழுங்கப்பட்டோ அல்லது மூக்கில் இருந்து ஒழுகும் திரவமாகவோ வெளியேறும். இதுதான் கண்களில் வழக்கமாக நடப்பவை. சிலநேரங்களில் கண்ணீர் அதிகமாக உற்பத்தியாகி, பயன்படுத்தப்பட்ட கண்ணீர் ஆனது நாளங்களின் வழியாக சரியாக வெளியேற்றப்படாதபோதே, கண்களில் இருந்து வெளியேறி கன்னங்களில் ஒழுகுகிறது" என்றார் அருள்மொழிவர்மன்.
தஞ்சையைச் சேர்ந்த மூத்த மன நல மருத்துவர் கே.தியாகராஜன் சொல்கிறார். ''எப்படி ஒரு பிரஷர் குக்கரில், பிரஷர் அதிகமாகி குக்கர் வெடித்துவிடாமல் இருக்க ஒரு 'வால்வு’ ஒன்று அமைக்கப்பட்டுள்ளதோ அதேபோலதான் மனிதனுக்கு அழுகை. மனிதனின் மனதில் தோன்றும் எண்ணற்ற உணர்ச்சிகளால் மனம் வெடித்துவிடாமல் இருக்க, ஒரு பாதுகாப்பான வடிகாலே அழுகை. அதனால்தான் மனம் விட்டு அழ வேண்டும் என்று சொல்கிறோம்.
இன்றைய காலகட்டத்தில் ஆண்களும் சரி, பெண்களும் சரி, நாகரீகம் கருதி அழ மறுக்கிறார்கள். இதனால் மன அழுத்தம் அதிகமாகி உடலிலும் மனதிலும் ஒரு சேர பாதிப்புகள் ஏற்பட்டு 'சைக்கோசொமாடிக் டிஸ் ஆர்டர்ஸ்’ வகை நோய்களை ஏற்படுத்தும். குடல் இரைப்பைப் புண், சர்க்கரை நோய், ஆஸ்துமா, பெண்களுக்கு மாதவிடாய் காலங்களில் அதிக ரத்தப்போக்கு, முதுகுவலி, உயர் ரத்த அழுத்தம்... இப்படி உடல் சார்ந்தும் எவ்வளவோ பிரச்னைகளை உருவாக்கும் மன அழுத்தம். இதற்கு எல்லாம் ஒரே தீர்வு, கூச்சப்படாமல், பந்தா பார்க்காமல் அழுகை வரும்போது அழுதுவிடுவதுதான்'' என்றார் தியாகராஜன்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...