Chhattisgarh: முறைகேடுகளை அம்பலப்படுத்திய பத்திரிகையாளர் சடலமாக கண்டெடுப்பு - என்ன நடந்தது?
சத்தீஸ்கர் மாநிலத்தில், உள்ளூர் செய்தி நிறுவனத்தில் பணியாற்றிய முகேஷ் சந்திரகர் என்ற பத்திரிகையாளர் ஜனவரி 3-ம் தேதி பிஜபூர் மாவட்டத்தில் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
அவரது உடல் சுரேஷ் சந்திரகர் என்பவருக்கு சொந்தமான தண்ணீர் தொட்டியில் கிடைக்கப்பட்டுள்ளது. ஜனவரி 1ம் தேதி முகேஷ் காணாமல் போவதற்கு முன்னர் அங்கேதான் கடைசியாக இருந்தார் எனக் கூறப்படுகிறது.
பழிவாங்கலா?
முகேஷ் பாஸ்தர் மாவட்டத்தில் ரூ.120 கோடி மதிப்பிலான கட்டுமான திட்டத்தில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறப்படுவதை விசாரித்திருக்கிறார். அந்த பகுதியில் ஒப்பந்ததாரர் லாபிக்குள் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் நடைபெறுவதை முகேஷ் வெளிச்சத்திற்கு கொண்டுவந்துள்ளார். அதன் விளைவாக அரசு விசாரணை மேற்கொண்டு வருகிறது.
சுரேஷ் சந்திரகரின் சகோதரர் ரிதேஷ் என்பவர் அழைப்பின் பெயரில் சுரேஷின் இடத்துக்குச் சென்றிருக்கிறார் முகேஷ்.
நீண்ட நேரம் முகேஷ் வீடு திரும்பவில்லை. அவரது தொலைபேசி அணைந்தததால் காவல்துறையில் புகார் அளித்துள்ளார் முகேஷின் அண்ணன் யுகேஷ் சந்திரகர். உடனடியாக அதிகாரிகள் தேடுதலை தொடங்க வேண்டும் என யுகேஷ் அழுத்தம் கொடுத்ததால் சிசிடிவியை ஆராய்ந்து அவர் கடைசியாக இருந்த இடத்தைக் கண்டறிந்துள்ளனர்.
முகேஷின் உடல் கண்டெடுக்கப்பட்ட இடத்துக்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, தகவல்களை சேகரித்து, காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
முகேஷ் அம்பலப்படுத்திய ஒப்பந்ததாரருக்கு தொடர்புடைய நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. காவல்துறையினர் ரிதேஷை காவலில் வைத்திருக்கின்றனர். மற்ற குடும்பத்தினர் லாட்ஜில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
பஸ்தரில் ஒப்பந்ததாரர்கள் அரசு ஒப்பந்தங்களைப் பெறுவதற்காக பெருமளவில் லஞ்சம் கொடுத்து வருகின்றனர் என்றும் சில நேரங்கள் எதிர்குரல் கொடுப்பவர்களை மிரட்டவும், வன்முறையை பிதயோகிக்கவும் செய்கின்றனர் என தகவல்கள் தெரிவிக்கப்படுகின்றன. காவலர்கள் இந்த வழக்கில் முழுமையான விசாரணை நடத்தப்படும் எனக் கூறியுள்ளனர்.
முகேஷ் சந்திரகர்
முகேஷ் சந்திரகர் 10 ஆண்டுகளுக்கும் மேலாகா பத்திரிகையாளராக செயல்பட்டு வருகிறார். 2021-ம் ஆண்டு மாவோயிஸ்டுகள் சிஆர்பிஎஃப் காவலர் ஒருவரை கடத்தில் வைத்திருந்த போது அவரை மீட்பதில் பணியாற்றி, காவல்துறையின் பாராட்டைப் பெற்றுள்ளார்.
பாஸ்தர் ஜன்க்ஷன் என்ற யூடியூப் சேனலை நடத்தி வரும் இவர், பழங்குடி மக்கள் எதிர்கொள்ளும் சிக்கல்கள் குறித்தும், நக்ஸல்கள் குறித்தும் செய்திகளை வெளியிட்டு வந்தார்.