Explained: ' முற்றிலும் புதியதா இந்த HMP வைரஸ்... இது ஏன் குழந்தைகளை பாதிக்கிறது?' | HMPV
'மறுபடியும் முதல்ல இருந்தா?' என்பது மாதிரி, மீண்டும் ஒரு வைரஸ் தொற்று பரவத் தொடங்கியுள்ளது.
கடந்த மாதத்தில் வந்த, 'HMP வைரஸ் சீனாவில் பரவத் தொடங்கியுள்ளது' என்ற தகவல் உலக நாடுகளை சற்று பீதியடைய வைத்தது. உடனடியாக, இந்தியா உள்ளிட்ட நாடுகள் தங்களது நாடுகளில் தீவிர கண்காணிப்புகளை முடுக்கிவிட்டது.
இருந்தும், இப்போது வரை வந்த தகவல்களின் படி, இந்தியாவில் கர்நாடகாவில் 3 மாதக் குழந்தை ஒன்றும், 8 மாதக் குழந்தை ஒன்றும், குஜராத்தில் 2 மாதக் குழந்தை ஒன்றும் HMP வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் அறிவித்துள்ளது.
இந்த வைரஸ் குறித்து நமக்கு விரிவாக விளக்குகிறார் பொது மருத்துவர் ஃபரூக் அப்துல்லா...
Human Metapneumovirus என்பதன் சுருக்கமே HMP வைரஸ். இது ஒரு சுவாசப்பாதையைத் தாக்கும் தொற்று நோயாகும்.
புதிது அல்ல...
இந்த வைரஸ் உலகிற்கு புதிது அல்ல. இது கிட்டதட்ட 50 - 60 ஆண்டுகளாகவே உலகத்தில் இருந்து வருகிறது.
2001-ம் ஆண்டு, மருத்துவ ஆராய்ச்சியில் நெதர்லாந்தில் இந்த வைரஸ் முதன்முதலாக அடையாளம் காணப்பட்டது.
குளிர் காலங்களில்...
பொதுவாகவே, இந்த வைரஸ் குளிர்காலங்களில் அதிகம் பரவும் தன்மையுடையது.
இது ஏனைய குளிர்கால வைரஸ்களான இன்ஃபளூயன்சா, ஆர்.எஸ் வி ஆகியவற்றுடன் சேர்ந்து பரவும் தன்மை கொண்டது.
யார் யார் பாதிக்கப்படுவார்கள்?
பொதுவாக அனைவருக்கும் சாதாரண தொற்றாகவே கடந்து செல்லும். எனினும் 5 வயதுக்கு கீழ் இருக்கும் குழந்தைகள், அதிலும், குறிப்பாக ஒரு வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகள், உடல் எடை குறைவான குழந்தைகள், பிறவிக் குறைபாடுள்ள குழந்தைகளுக்களுக்கு இந்த நோய் சற்று தீவிரத்துடன் வெளிப்படலாம். இவர்களுக்கு சரியான நேரத்தில், சரியான சிகிச்சை கொடுத்தாலே சரி செய்துவிடலாம்.
அபாய அறிகுறிகளான மூச்சுத் திணறல், மூச்சு விடுவதில் சிரமம் ஆகியவற்றை சரியாக அறிந்து சிகிச்சை வழங்க வேண்டும்.
முதியவர்கள், இதய நோயாளிகள், புற்றுநோயாளிகள், எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்கள், எலும்பு மஜ்ஜை மாற்று சிகிச்சை செய்தவர்கள், உறுப்பு மாற்று சிகிச்சை செய்தவர்கள் இந்தத் தொற்றினால் பாதிக்கப்படும் போது சற்று தீவிரத்துடன் வெளிப்படலாம். இவர்களுக்கு கூடுதல் கவனம் தேவை.
அறிகுறிகள் என்ன?
சாதரண காய்ச்சல், சளி, உடல்வலி போலத் தான் இதன் அறிகுறிகளும் இருக்கும். சில நேரங்களில் எந்த அறிகுறிகளும் இல்லாமல் தொற்று நம்மைக் கடந்து செல்லும்.
எதிர்ப்பு சக்தி குறைபாடு உள்ளவர்கள், முதியோர்கள் மற்றும் குழந்தைகளில் சிலருக்கு இந்த நோய் தொற்று ஏற்படும் போது மூச்சு திணறல், சுவாசக் கோளாறு போன்ற சுவாசம் சம்பந்தமான பிரச்னைகள் ஏற்படலாம்.
தொற்று நோய்...
இது ஒரு தொற்று நோய். பாதிக்கப்பட்டவர்களின் இருமல், தும்மல் மூலம் பரவும். அவர்களுடைய எச்சில், சளி ஆகியவை எங்கேயாவது தெறித்திருந்தால், அதை தெரியாமல் இன்னொருவர் தொட நேரிடும்போதோ அல்லது கைகளில் படும்போதோ, இந்த நோய் தொற்று பரவும்.
குழந்தைகளை எப்படி தாக்குகிறது?
இந்த வைரஸ் உலகில் பல ஆண்டுகளாக இருந்து வருவதால், இது இந்தியாவிலும் முன்னரே இருந்திருக்கிறது. ஏன், இப்போது கூட அறிகுறிகள் இல்லாமலும், நமக்கு தெரியாமலும் இருந்து வரலாம். குளிர்கால சீதோஷண் நிலையாக இருப்பதால் குழந்தைகளுக்கு தற்போது பரவி இருக்கலாம். மற்றபடி இந்தியா இப்போது தான் ஹெச்எம்பிவி தொற்றை சந்திக்கிறது என்பது வதந்தியாகும்.
எப்படி கண்டுபிடிக்கப்படுகிறது?
RT-PCR
Nucleic Acid Amplification Test (NAAT)
Immunofluorescence or Enzyme Immunoassay
ஆகிய மூன்று முறைகள் மூலம் இந்தத் தொற்றை கண்டுபிடிக்கலாம்.
தடுப்பூசி உண்டா?
இப்போது வரை, இந்த நோய் பொது சுகாதாரத்திற்கு பெரிய அச்சுறுத்து தொற்றாக இல்லாததால், இந்தத் தொற்றுக்கு தடுப்பூசி கண்டறியப்படவில்லை.
சீனாவின் நிலை என்ன?
சீனா வெளியிட்டுள்ள தகவலின் படி, இப்போது அங்கே குளிர்கால வைரஸ் தொற்றுகள் பரவி வருகின்றன. இன்னும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் கூட, இப்போது இந்த குளிர் கால சுவாசப்பாதை வைரஸ் பரவல் அதிகமாக உள்ளது.
பொதுவாகவே, குளிர் காலங்களில் சுவாசம் சம்பந்தமான தொற்றுகளும் பிரச்னைகளும் அதிகமாவது இயல்பு தான். ஆனால், இதன் பரவல் சீனாவில் அதிகமாக இருப்பதால், தற்போது பெரிய பேசுப்பொருளாக மாறியுள்ளது.
இன்னொரு கொரோனாவா இது?
HMP வைரஸ் கொரோனா மாதிரி பெருந்தொற்றாக மாறுவதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு.
கொரோனா வைரஸ் அப்போது புதிதாக கண்டிபிடிக்கப்பட்ட, உருவான வைரஸ். அதற்கான எதிர்ப்பு சக்தி அப்போது மனிதர்களிடம் இல்லை. அதனால், அந்த வைரஸ் பெருந்தொற்றாக மாறி, உலக முழுவதும் பரவியது. ஆனால், HMP வைரஸ் உலகில் பல வருடங்களாக இருந்து வரும் வைரஸாகும். இந்த வைரஸுக்கான எதிர்ப்பு சக்தியை மனிதர்களிடம் ஏற்கனவே இருக்கிறது.இது புதிய வைரஸ் அல்ல. அதனால், இப்போதைக்கு இந்த தொற்று பெரும்தொற்றாக மாறுவதற்கு அதிக வாய்ப்புகள் கிடையாது.
மேலும், இதுகுறித்து மக்கள் பயப்பட தேவையில்லை.
எப்படி தடுக்கலாம்?
கொரோனாவிற்கு என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை செய்தோமா, அதையே இப்போதும் பின்பற்றினால், இந்த நோயில் இருந்து தப்பிக்கலாம்.
மாஸ்க் அணிய வேண்டும்.
அடிக்கடி கைகழுவுதல் வேண்டும்.
சானிடைசர்களை பயன்படுத்த வேண்டும்.
வீடு மற்றும் சுற்றுபுறத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும்.
காய்ச்சல் இருமல் இருக்கும் போது, சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும்.
தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.
இருமும்போதும், தும்மும்போதும் வாயை கர்சீப்பால் மூடுவது அவசியம்.
தொற்று குறித்த விழிப்புணர்வுடனும் கவனமுடனும் இருந்தாலே இதிலிருந்து எளிதில் மீண்டு விடலாம்.!