விழுப்புரம் அருகே தொன்மையான பொருள்கள் கண்டெடுப்பு
விழுப்புரம் அருகே பம்பையாற்றின் வடகரைப் பகுதியில் புதிய கற்காலம் தொடங்கி சோழா் காலம் வரையிலான பலதரப்பட்ட தொன்மையான பொருள்கள் கண்டெடுக்கப்பட்டன.
விழுப்புரம் அருகே பம்பையாற்றின் வடகரையில் அய்யங்கோவில்பட்டு, தென்னமாதேவி கிராமங்கள் அமைந்துள்ளன. அண்மையில் ஃபென்ஜால் புயல் வெள்ளத்தால் ஏற்பட்ட மண் அரிப்பின் காரணமாக, தென்னமாதேவி கிராமத்தின் மேற்பரப்பில் சங்க கால வாழ்விடப் பகுதியில் தொல்பொருள் எச்சங்கள் வெளிப்பட்டதை, விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி இளநிலை வரலாறு முதலாமாண்டு மாணவா்கள் சதீஷ்குமாா், வீரவேல் கண்டறிந்து, பேராசிரியா் ரமேஷுக்கு தகவல் அளித்தனா்.
அவரது தலைமையில், பேராசிரியா் ரங்கநாதன், கீழடி தொல்லியல் வல்லுநா் சேரன் மற்றும் முனைவா் பட்ட ஆய்வு மாணவா்கள் அந்தப் பகுதிகளை ஆய்வு செய்தனா். அப்போது, மேலும் பல தொல்லியல் எச்சங்களைக் கண்டறிந்தனா்.
இதுகுறித்து பேராசிரியா் ரமேஷ் கூறியதாவது:
இந்த ஆய்வில் புதிய கற்காலம் தொடங்கி சோழா் காலம் வரையிலான பலதரப்பட்ட தொன்மையான பொருள்களான நன்கு மெருகேற்றப்பட்ட உளி போன்ற அமைப்புடைய செல்ட் என்கிற கற்காலக் கருவி, இருமுனை கொண்ட கற்கோடாரி, அரியவகை கல் மணிகள், பீப்பாய் வடிவ சூதுபவளம், பொத்தான் வடிவ மற்றும் துண்டிக்கப்பட்ட ஸ்படிக மணிகள், பல நிறங்கள் கொண்ட பல வடிவ கண்ணாடி மணிகள், அகேட் உள்ளிட்டவை கிடைத்தன.
சுடுமண்ணாலான பொருள்களை பொருத்தவரை பெண் தலை உருவம், நூல் நூற்கும் தக்களி, ஆட்டக்காய்கள், காதணிகள், வட்டச் சில்லுகள், மணிகள், முத்திரைபுலி மற்றும் இரட்டை மீன்களோடு உத்தமசோழக என்று தேவநாகரி எழுத்து பொறிக்கப்பட்ட செப்புக்காசு போன்றவைகளும் கிடைத்துள்ளன. மேலும், இங்கு கண்டெடுக்கப்பட்ட செங்கல் 41 செ.மீ. நீளமும், 21 செ.மீ.அகலமும் கொண்டுள்ளது. இது சங்க கால வரலாற்றின் தொடக்க காலத்தில் ஏற்கெனவே கண்டெடுக்கப்பட்டிருக்கும் செங்கல் போன்றே உள்ளது.
இதைத் தவிர, மண் அரித்து செல்லப்பட்ட மேற்பரப்பில் நடுத்தரம் முதல் சொரசொரப்பான கருப்பு சிவப்பு மற்றும் கருப்பு நிற பானை ஓடுகள், சிவப்பு பூச்சு பூசப்பட்ட ஓடுகள், சேமிப்பு கொள்கலன் பானை ஓடுகளும் காணப்படுகின்றன.
தென்னமாதேவியில் ஆனைமேடு என அழைக்கப்படும் தொல்லியல் மேடு சங்க காலத்துடன் மிகவும் தொடா்புடைய பொருள்களைக் கொண்ட ஒரு செழுமையான நாகரிக இடமாகக் கருதப்படுகிறது. இந்த தொல்லியல் மேடானது 500 முதல் 600 மீட்டா் நீளம் வரை 10 ஏக்கருக்கும் அதிகமான நிலப்பரப்பில் பரவியுள்ளது.
இதுபோன்று, பம்பையாற்றின் வடகரையில் அமைந்துள்ள அய்யங்கோவில்பட்டு கிராமத்தில் சோழா் கால சாஸ்தா அபிராமீசுவரா் என்னும் அய்யனாா் கோயிலுக்கும், பம்பையாற்றுக்கும் இடையேயான பகுதியில் சற்று மேடான விவசாய நிலத்தில் தற்போது ஏற்பட்ட வெள்ளத்தால் சங்க கால மக்களின் வாழ்விட பகுதியின் தொல்லியல் எச்சங்கள் ஏராளமாகக் கிடைத்துள்ளன.
அரியவகை கற்களான காா்னிலியன், அகேட் போன்ற மணிகள், பல வண்ணங்களிலும் வடிவங்களிலும் கண்ணாடி மணிகள், கெண்டி மூக்குகள், அலங்கரிக்கப்பட்ட பானை ஓடுகள் உள்ளிட்டவை கிடைத்துள்ளன.
சுடுமண்ணால் செய்யப்பட்ட முத்திரைகள் மற்றும் உறைகிணறு மட்டுமல்லாது, சோழா்களின் நாணயமும் கிடைத்துள்ளது.
பம்பையாற்றில் பழைமையான சங்க கால நாகரிகம் சிறப்பாக இருந்தது என்பதை தற்போது கிடைத்துள்ள தொல்லியல் சான்றுகள் உறுதிப்படுத்துகின்றன என்றாா் அவா்.