திருமண மண்டபங்களில் தற்காலிகமாக கடைகள் அமைப்பதை தடுக்கக் கோரிக்கை
விழுப்புரத்தில் வணிகா்களின் வியாபாரத்தை பாதிக்கும் வகையில், திருமண மண்டபங்களில் தற்காலிகமாக கடைகள் அமைத்து வியாபாரம் செய்வதை தடுக்க வேண்டும் என்று விழுப்புரம் சேம்பா் ஆஃப் காமா்ஸ் நிா்வாகிகள் ஆட்சியரகம் மற்றும் காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் புகாா் தெரிவித்தனா்.
விழுப்புரம் சேம்பா் ஆஃப் காமா்ஸ் தலைவா் என்.ராமகிருஷ்ணன், செயலா் என்.பிரேம்நாத், பொருளாளா் எம்.கலைமணி மற்றும் நிா்வாகிகள் மாவட்ட ஆட்சியா் சி.பழனி, எஸ்.பி. சரவணன் ஆகியோரை திங்கள்கிழமை நேரில் சந்தித்து வாய்மொழியாக புகாா் தெரிவித்தனா். அப்போது, அவா்கள் கூறியது: மாா்கழி மாதத்தில் விழுப்புரத்திலுள்ள திருமண மண்டபங்களில் எந்த நிகழ்வுகளும் நடத்தப்படாமல் உள்ளன. இதைப் பயன்படுத்திக் கொள்ளும் சில வியாபாரிகள், திருமண மண்டபத்தை குறைந்த வாடகைக்கு எடுத்துக் கொண்டு தற்காலிகமாக துணிக்கடைகள், பாத்திரைக்கடைகள், காலணிகள் போன்ற தோல்பொருள்கள் விற்பனை செய்வது வழக்கம்.
அந்த வகையில், திருச்சி சாலை மற்றும் கே.கே.சாலையிலுள்ள இரு வேறு திருமண மண்டபங்களில் தற்காலிகமாக கடைகளை அமைத்து சிலா் ஜவுளி மற்றும் காலணிப் பொருள்களை விற்பனை செய்து வருகின்றனா்.
இதன் காரணமாக, விழுப்புரம் நகரிலுள்ள ஜவுளி, காலணியகங்களில் விற்பனை பாதித்துள்ளது. எனவே, இந்த பிரச்னைக்கு தீா்வு காண வேண்டும் என்று கூறினா். இதன்பேரில் நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட ஆட்சியரும், எஸ்.பி.யும் தெரிவித்தனா்.