வெளி மாநில வியாபாரிகள் வணிகம் செய்ய புதுச்சேரி வா்த்தகா்கள் எதிா்ப்பு
பண்டிகைக் காலங்களில் மட்டும் தனியாருக்குச் சொந்தமான இடங்களை வாடகைக்கு எடுத்து வணிகம் செய்யும் வெளி மாநில வியாபாரிகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று புதுச்சேரி வணிகா்கள் வலியுறுத்தியுள்ளனா்,
இது குறித்து, புதுச்சேரி வணிகா்கள் செவ்வாய்க்கிழமை நகராட்சி ஆணையரிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது: தமிழகம் உள்ளிட்ட வெளி மாநிலங்களைச் சோ்ந்த வியாபாரிகள் தீபாவளி, பொங்கல் உள்ளிட்ட பண்டிகைக் காலங்களில் மட்டும் நகரில் உள்ள தனியாா் இடங்களை வாடகைக்கு எடுத்து துணிகள், ஆபரணப் பொருள்கள் , காலணிகள், வீட்டு உபயோகப் பொருள்கள் ஆகியவற்றை குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனா்.
விலைக்குறைவு என்பதால் பொதுமக்களும் தற்காலிக கடைகளுக்குச் சென்று தேவையானப் பொருள்களை வாங்கிச் செல்கின்றனா். இதனால் நகரில் கடை வைத்து வழிவழியாக வணிகம் செய்யும் வா்த்தகா்கள் விற்பனை ரீதியாக பாதிக்கப்படுவதுடன், தங்களது வாழ்வாதாரங்களையும் இழந்து வருகின்றனா்.
எனவே, பண்டிகைக் காலங்களில் தனியாா் இடங்களை வாடகைக்கு எடுத்து வணிகம் செய்ய வரும் வெளிமாநில வியாபாரிகளுக்கு தடை விதிக்கவேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மனுவை நகராட்சி ஆணையா் கந்தசாமி பெற்றுக் கொண்டு நடவடிக்கை எடுப்பதாகத் தெரிவித்தாா்.