Health : "ஏ.சி அறையில் இருந்தால் உள்நாக்கில் தொற்று ஏற்படுமா?"
உள்நாக்கு சதை வளர்ச்சியினால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பலரும் சிரமங்களை அனுபவிக்கிறார்கள். உள்நாக்கு சதை வளர்ச்சி என்றால் என்ன, அது ஏன் வருகிறது, அதனை எவ்வாறு சரி செய்வது என்பது போன்ற பல கேள்விகளுக்கான விடையை தெரிந்துகொள்வதற்காக சென்னையில் உள்ள பொதுநல மருத்துவர் டாக்டர் அருணாச்சலத்திடம் பேசினோம்.
அதென்ன உள்நாக்கு..?
''உள்நாக்கை உடற்கூறியல் ரீதியாக யுவ்லா (uvula) எனக் கூறுவோம். இது மனிதனாக பிறக்கக்கூடிய அனைவருக்கும் கட்டாயமாக இருக்கக்கூடிய ஒன்று. இதை உணவுக் குழாயின் ஆரம்பப்பகுதி எனவும் சொல்லலாம். நமது தொண்டையில் உள்நாக்கு மட்டுமல்ல, இருபுறமும் டான்சில் எனப்படும் நிணநீர் சுரப்பி இருக்கும். சிலருக்கு டான்சில் பெரியதாக இருக்கும். சிலருக்கு சிறியதாக இருக்கும். இதன் முக்கிய நோக்கம் அதிகப்படியான எச்சிலை சுரக்க வைத்து தொண்டை மற்றும் உணவு குழாயின் ஆரம்ப பகுதியை ஈரப்பதமாக வைத்துக் கொள்வதுதான்.
உள்நாக்கு சதை வளர்ச்சி ஏன் ஏற்படுகிறது?
பிறர் இருமும் போதும் தும்மும் போதும் அவர்களிடமிருந்து கிருமி மற்றவர்களுக்கு பரவுகிறது. அந்த கிருமியானது தொண்டையில் தங்கி, பல்கி பெருகுவதனால் ஏற்படும் வீக்கம் தான் உள்நாக்கு சதை வளர்ச்சி. இது தொண்டையில் ஏற்படும் தொற்றுகளில் ஒன்று. இது ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு சுலபமாக காற்றின் மூலம் பரவக்கூடியது. உள்நாக்கானது இயல்புக்கு அதிகமாக வளர்ந்திருக்கிறது என்றால் தொண்டையில் ஏதோ நோய் தொற்று ஏற்பட்டிருக்கிறது என்று புரிந்து கொள்ளலாம். தவிர, அதிக குளிர்ச்சியான நீர் மற்றும் குளிர் பானங்கள் அருந்துவதாலும், ஏ.சி அறையில் இருப்பதாலும், ஏ.சி பேருந்து மற்றும் ரயிலில் பயணிப்பதாலும்கூட உள்நாக்கில் தொற்று ஏற்படலாம்.
கை வைத்தியம் மட்டும் போதுமா?
இப்போதும் கிராமப்புறங்களில் உள்நாக்கு சதை வளர்ச்சி ஏற்பட்டிருந்தால் உப்பு நீரைக்கொண்டு வாய் கொப்பளிக்க சொல்வார்கள். இதைவிட மருத்துவரிடம் சென்று ஆன்டிபயாடிக் போட்டுக் கொள்வது நல்லது.
சூடாக அருந்தினாலே சரியாகி விடுமா?
உள்நாக்கு சதை வளர்ச்சி ஏற்படுவதற்கு முன்னால் சிறிதாக வீக்கம் ஏற்படும். அப்போதே வெந்நீர், பால், டீ, காபி போன்றவற்றை சூடாக அருந்தினால் கிருமிகள் இறந்து போவதற்கு வாய்ப்பிருக்கிறது. இதற்கு பிறகும் சரியாகவில்லை என்றால் மருத்துவரிடம் சென்று சிகிச்சை பெறவேண்டும். வைரஸ் தொற்றாக இருந்தால் 3 நாட்களில் சரியாகிவிடும். பாக்டீரியாவாக இருந்தால் மருத்துவர் கொடுக்கும் ஆன்டிபயாடிக் சாப்பிட்டால் சரியாகும்.''
Vikatan play▶️
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...