முந்திரிக்காடு டு சந்தனக்காடு : `தமிழ்நாடு விடுதலைப்படை... விடை தேடும் பயணம்’ | ...
National siddha Day 2024: வாழ்வியல் நோய்களுக்கு சித்த மருத்துவத்தில் தீர்வு இருக்கிறதா?
இன்று 8-வது தேசிய சித்த மருத்துவ தினம் (டிசம்பர் 19). ''மார்கழி மாதத்தில் வருகிற ஆயில்ய நட்சத்திரம் அன்று அகத்தியர் பிறந்த நாள் என கணிக்கப்பட்டு, அன்றைய தினமே தேசிய சித்த மருத்துவ தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது'' என்கிறார், சென்னையைச் சேர்ந்த சித்த மருத்துவரும், அறிஞர் அண்ணா மருத்துவமனையில் தலைமை மருத்துவராகவும் சித்த மருத்துவ கல்லூரியின் முதல்வராகவும் இருந்த மறைந்த மருத்துவர் கே. நடராஜன் அவர்களின் மகளுமான டாக்டர் முத்து கிருஷ்ணவேணி.
தற்காலத்தில் அதிகரித்து வரும் வாழ்வியல் நோய்களுக்கான தீர்வுகள் அல்லது கட்டுப்படுத்தும் மருந்துகள் சித்த மருத்துவத்தில் இருக்கின்றனவா என்பது பற்றி இந்தக் கட்டுரையில் அவர் பேசுகிறார்.
''வாழ்வியல் நோய்களில் பலரும் பாதிக்கப்படுவது நீரிழிவினால்தான். எந்த நோய் என்றாலும், ஆரம்ப காலத்திலேயே கண்டறிதல் மிகவும் அவசியம். அதுதான், நோயை எளிதில் குணப்படுத்த உதவும். நாள்பட்ட நோய்களை குணப்படுத்துவது கடினம். அப்படியும் சிலவற்றை சித்த மருத்துவத்தால் குணப்படுத்த முடியும் என்றாலும், நீரிழிவைக் கட்டுக்குள் மட்டுமே வைக்க முடியும். உடற்பயிற்சி, உணவு முறைகள், வாழ்வியல் மாற்றம், எண்ணெய்க்குளியல் போன்றவற்றை மேற்கொண்டால் ப்ரீ டயாபடீஸ் நிலையில் உள்ள நோயாளிகளை குணமாக்கலாம். சித்த மருத்துவத்தில் நீரிழிவு நோய்க்கு ஆவாரைக்குடிநீர், நாவல் கொட்டைச்சூரணம், சிறுகுறிஞ்சான் பொடி, வில்வ மாத்திரை போன்ற மூலிகைகள் மிகுந்த பலன் அளிக்கின்றன.
அடுத்ததாக ரத்த அழுத்தம். ரத்த அழுத்தத்திற்கான காரணங்கள் பல உண்டு. இந்நோயையும் முழுமையாக கட்டுக்குள் வைக்க முடியும். மல்லி சூரணம், சர்ப்பகந்தா போன்ற மூலிகைகள் மிகுந்த பலன் அளிக்கிறது. இந்நோய்க்கும் ஆரோக்கியமான உணவு முறைகள், உடற்பயிற்சி, தியானம், ஏழு மணிநேர உறக்கம் போன்றவை மிக மிக முக்கியம்.
இரைப்பு நோய் என்று அழைக்கப்படுகிற ஆஸ்துமாவுக்கு சித்த மருத்துவத்தில் நல்ல தீர்வு உண்டு. எந்த பக்க விளைவும் கிடையாது. நஞ்சறுப்பான் சூரணம் ஆஸ்துமாவுக்கு நல்ல பலன் அளிக்கும்.
பீனிச நோய் என அழைக்கப்படுகிற சைனசிட்டிஸுக்கு நிரந்தரத் தீர்வு சித்த மருத்துவத்தில் உண்டு. பஞ்ச கற்ப குளியல் சூரணத்தில் தலை முழுகி வரவேண்டும். நசியம் என்று சொல்லப்படும் நேசல் ட்ராப்ஸை நாசித்துவாரங்களில் விட மூக்கடைப்பு குணமாகும். நாசிக்காபரணம் என்று சொல்லப்படும் மூலிகை பொடி மூக்கிலிட குணம் தரும்.
ஆஸ்டியோபோரோசிஸ் பிரச்னையில், உடல் எலும்புகளில் உள்ள கால்சியம் சத்துக் குறைந்து எலும்புகள் பலவீனமாகும். இதனை நோயின் ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்தால் , கால்சியம் சத்து குறையாமல் எலும்புகளைப் பலப்படுத்தலாம். முத்து பற்பம், பவள பற்பம், முத்துச்சிப்பி பற்பம் போன்ற மருந்துகள் இந்தப் பிரச்னைக்கு நல்ல பலன் அளிக்கின்றன.
இந்தக் காலகட்டத்தில் ஒற்றைத்தலைவலி எனப்படுகிற மைக்ரேன் அதிகரித்துவிட்டது. நவீன மருத்துவத்தில் வெசோடயலேட்டர்ஸ் (vasodilators) மருந்துகள் மூலம் ரத்த நாளங்களை விரிவடையச் செய்து, ரத்த ஓட்டத்தை சீராக்கி இந்தத் தலைவலியை சரி செய்வார்கள். இதே வழிமுறையை மூலிகை மருந்துகள் மூலம் சித்தாவிலும் செய்து வருகிறோம். கூடவே, இந்த வாழ்வியல் பிரச்னைக்கு தியானம் மிகவும் அவசியம்.
இவைத்தவிர, உடலை ஆரோக்கியமாகவும், இளமையாகவும் வைத்துக்கொள்ள சித்த மருத்துவத்தில் காயகற்பங்களும் இருக்கின்றன. உங்களுக்குப் பிடித்த எந்த மருத்துவ முறையை வேண்டுமானாலும் நீங்கள் பின்பற்றலாம். ஆனால், அந்த மருத்துவ முறைக்கான மருத்துவரிடம் ஆலோசனை பெற்றப் பிறகே அவற்றை உட்கொள்ள வேண்டும்'' என்கிற டாக்டர் முத்துகிருஷ்ணவேணி, கோவிட், கேன்சர் போன்ற வியாதிகளுக்கு சித்த மருத்துவத்தில் என்ன செய்கிறார்கள் என்பது குறித்தும் சொன்னார்.
''கோவிட் பரவல் காலங்களில் உலக மருந்துகள் தொற்றின் தன்மையை கணிக்க முடியாமல் கலங்கி நின்ற காலத்தில்கூட கபசுர குடிநீர், நிலவேம்பு குடிநீர் போன்ற மருந்துகள் பலருக்கும் கைக்கொடுத்தது பலரும் அறிந்த ஒன்றுதான். கேன்சரைப் பொறுத்தவரை, ரசகந்தி மெழுகு முதலாக பல மருந்துகள் கேன்சரை கட்டுக்குள் வைப்பது உறுதியாகியுள்ளது'' என்கிறார்.
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...