Paracetamol: `வயதானவர்களுக்கு பாராசிட்டமால் ஆபத்தா?' - ஆய்வு முடிவும் டாக்டரின் விளக்கமும்
மருத்துவரின் ஆலோசனை பெறாமலே, மெடிக்கல் ஷாப்களில் வாங்கக்கூடிய மாத்திரைகளில் முக்கியமான ஒன்று, பாராசிட்டமால். இதை அளவு தெரியாமல் எடுத்துக்கொள்ளும்போது, சில பக்க விளைவுகளை ஏற்படுத்தும் என ஆய்வுகள் எச்சரித்துக்கொண்டே இருக்கின்றன.
இந்த நிலையில், தற்போது பாராசிட்டமால் மாத்திரையை 65 வயதிற்கு மேற்பட்டோர் அடிக்கடி பயன்படுத்தினால் மோசமான பக்கவிளைவுகள் ஏற்படும் என புதிய ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது.
பிரிட்டனில் உள்ள நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகம் நடத்திய ஒரு புதிய ஆய்வில், 65 வயதிற்கு மேற்பட்டவர்கள் பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி பயன்படுத்துவதால், இரைப்பை, குடல், இதயம் மற்றும் சிறுநீரக பிரச்னைகளை ஏற்படுத்துகிறது என்று தெரியவந்துள்ளது. பாராசிட்டமால் மாத்திரையை வயதானவர்கள் அடிக்கடி எடுத்துக் கொள்வதால், சிறுநீரக பாதிப்பு 19 சதவிகிதமும், மாரடைப்பு சதவிகிதமும், உயர் ரத்த அழுத்தம் 7 சதவிகிதமும் அதிகரிப்பதாக அந்த ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.
அடிக்கடி பாராசிட்டமால் எடுத்துக்கொண்ட 1,80,000 பேர், அதே வயதில் பாராசிட்டமால் எடுத்துக்கொள்ளாத 4 லட்சம் பேர் என நடத்தப்பட்ட இந்த ஆய்வின் முடிவில், பாராசிட்டமாலை அடிக்கடி பயன்படுத்துபவர்களுக்கு வயிற்றுப் புண்கள், இதய செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம், நாள்பட்ட சிறுநீரக நோய் ஆகியவற்றின் அபாயங்கள் அதிகரித்துள்ளதாகக் கண்டறிந்துள்ளனர்.
இதுபற்றி பல்கலைக்கழகத்தின் முன்னணி ஆராய்ச்சியாளர் வெய்யா ஜாங் (Weiya Zhang) கூறுகையில், ''ஆஸ்டியோ ஆர்த்ரைட்டீஸ் காரணமாக வருகிற வலிகளை குறைப்பதற்கான வலி நிவாரண மருந்தாக பாராசிட்டமால் பரிந்துரைக்கப்படுகிறது. பாராசிட்டமால் குறைந்தபட்ச வலி நிவாரண விளைவையே கொண்டிருப்பதால், ஆஸ்டியோ ஆர்த்ரைட்டீஸ் போன்ற நீண்டகாலப் பிரச்னைகளுக்குத் தொடர்ந்து பாராசிட்டமாலை முக்கியமான வலி நிவாரணியாகப் பயன்படுத்துவதை கவனமாக பரிசீலிக்கப்பட வேண்டும்'' என்கிறார்.
சென்னையைச் சேர்ந்த பொதுநல மருத்துவர் அருணாச்சலத்திடம் இதுகுறித்து பேசினோம். "பொதுவாக எல்லா மருந்திற்கும், அதிகபட்சமாக இத்தனை டோஸ் வரைக்கும் கொடுக்கலாம் என்கிற அளவு இருக்கிறது. பாராசிட்டமாலை பொறுத்தவரை, 40 முதல் 60 கிலோ வரை உடல் எடை கொண்டவர்கள், நாளொன்றுக்கு அதிகபட்சமாக 4 கிராம் வரை பாராசிட்டமால் எடுத்துக் கொள்ளலாம். ஒரு பாராசிட்டமால் மாத்திரை 500 முதல் 650 மில்லி கிராம் வரை இருக்கும். அதனால், டாக்டர் ஆலோசனையின்படி இந்த மாத்திரையை ஒரு நாளைக்கு 4 வேளை வரைகூட எடுத்துக் கொள்ளலாம். தற்போது பல மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சை முடிந்த பிறகு ஏற்படும் அதிகப்படியான வலியைப் போக்க பாராசிட்டமாலை இரவு ஒரு கிராமும் பகல் ஒரு கிராமும் கொடுக்கிறார்கள். இதன் மூலம் நோயாளிகள் வலி இல்லாமல் இருக்கிறார்கள்.
இந்த ஆராய்ச்சி, 65 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு ஏற்படக்கூடிய பக்க விளைவுகள்பற்றி பேசுகிறது. 65 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள் அனைவரும் பாராசிட்டமால் மாத்திரையைத் தொடர்ந்து எடுத்துக்கொள்ளவே கூடாதா என்றால், அப்படி சொல்ல முடியாது. வலி நிவாரணம் தேவைப்படுபவர்கள், டாக்டரின் ஆலோசனைப்படி பாராசிட்டமால் எடுத்துக்கொள்வதே நல்லது. அதேநேரம், தொடர்ந்து இந்த மாத்திரையை எடுத்துக்கொள்பவர்கள், மாதம் ஒருமுறை அல்லது மூன்று மாதத்திற்கு ஒருமுறை கல்லீரல் மற்றும் நுரையீரல் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அவ்வாறு சோதனை செய்த பிறகு மருத்துவரின் ஆலோசனையுடன் பாராசிட்டமாலை தொடர்ச்சியாக எடுத்துக்கொள்ளலாம். இந்த ஆராய்ச்சியின் முடிவு ஒரு நேரடியான எச்சரிக்கை கிடையாது. சிலருக்கு பக்க விளைவுகள் ஏற்படலாம். சிலருக்கு ஏற்படாமலும் இருக்கலாம்" என்கிறார்.