தலா ரூ. 50,000 செலுத்தினால் விடுதலை! 14 தமிழக மீனவர்களுக்கு இலங்கை நீதிமன்றம் தீ...
CCTV: 'உங்கள் வீட்டிற்கு இலவச சிசிடிவி கேமரா வேண்டுமா... எங்கே, எப்படி விண்ணப்பிக்க வேண்டும்?'
சிசிடிவி கேமராக்கள் அவசியமாகிறது
திருட்டு, பாலியல் வன்கொடுமைகள், குழந்தை கடத்தல், விபத்துகள், கொலை, கொள்ளை என நாளுக்கு நாள் சமூகத்தில் குற்றங்கள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. குற்றத்தை தடுக்க, அல்லது குறைக்க வேண்டுமானால் குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டியது அவசியம். ஆனால் பல குற்றச் சம்பவங்களில் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க காவல்துறையினருக்கு சாட்சிகள் அல்லது சிறிய துப்பு தேவைப்படுகிறது. மாறிவரும் டிஜிட்டல் உலகில் துப்புக் கொடுக்கும் இன்ஃபார்மர் வேலையைச் செய்வதற்கு சிசிடிவி கேமராக்கள் அவசியமாகிறது.
ஆயிரக்கணக்கில் செலவு செய்து சிசிடிவி கேமராவை பொருத்தி அதை பாதுகாக்க ஆகும் செலவுகளையும் மேனேஜ் செய்வது இங்கு எல்லோருக்கும் எளிதானது அல்ல. சிசிடிவி கேமரா எளிய மக்களையும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தனியார் நிறுவனம் ஒன்று ' Secure our city' என்ற செயல்திட்டத்தை முன்னெடுத்துள்ளது. இந்த முன்னெடுப்பு மூலம் சென்னை, கொச்சின், மும்பை, ஐதராபாத் போன்ற பெருநகரங்களில் இலவசமாக சிசிடிவி கேமராக்களை பொருத்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பை உறுதி செய்வதை இலக்காக எடுத்துள்ளது.
இந்த செயல்பாடுகள் முன்னெடுத்துள்ள செக்யூர் கேம் நிறுவனத்தின் தலைவர் ரிஜாய் தாமஸிடம் இது குறித்து பேசினோம்." சிசிடிவி என்பது வாழ்க்கையில் தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது. என் வாழ்க்கையை மாற்றியது ஒரு சிசிடிவி கேமராதான். நான் என் கரியரை வெளிநாட்டில் உள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் தான் தொடங்கினேன். அங்கு எதிர்பாராத ஒரு விதமாக ஒரு கண்ணாடி உடைந்து விட்டது. அதை நான் தான் உடைத்தேன் என அந்த நிறுவனத்தினர் என் மீது பழி போட்டதுடன், அதற்கான தொகையாக பத்து லட்சம் ரூபாயை என் ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்யப்போவதாகவும் சொன்னார்கள்.
அப்போது என்னுடைய ஊதியம் மிகக் குறைவு, பத்து லட்சம் ரூபாய்க்கு உழைக்க வேண்டும் என்றால் என் வாழ்க்கையில் பாதி நாள்கள் அதை சம்பாதிப்பதிலேயே வீணாகியிருக்கும். அந்த நேரத்தில் அங்கிருந்த சிசிடிவி பதிவு காட்சிகள் மூலம் நான் என் மீது தவறில்லை என்பதை நிருபித்தேன்...அந்த சம்பவத்திற்கு பிறகு சிசிடிவி மீதான என் ஆர்வம் அதிகமானது. பல மக்களுக்கு இலவசமாக சிசிடிவி பொருத்திக்கொடுக்க வேண்டும் என்பது என் இலக்காக மாறியது. இதனையடுத்து என் சேமிப்பு பணத்தை வைத்து ஐக்கிய அரபு நாடுகளில் சிசிடிவி கேமரா சார்ந்த தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றை தொடங்கினேன்.
நிறுவனத்தின் ஒரு செயல்பாடாக 'Secure our city' என்ற செயல்திட்டத்தை முன்னெடுத்தேன். இந்தியாவின் பெரு நகரங்கள் ஒவ்வொன்றிலும் 10,000 இலவச சிசிடிவி கேமராக்கள் பொருத்துவதை நிறுவனத்தின் இலக்காக வைத்தோம். சில ஆண்டுகள் செயல்திட்டம் மற்றும் உழைப்பிற்கு பிறகு இத்திட்டத்தை முதலில் சென்னையில் இருந்து தொடங்கியிருக்கிறோம். இத்திட்டத்தின் மூலம் சென்னையில் உள்ள யார் வேண்டுமானாலும் இலவச சிசிடிவி கேமரா பொருத்த பதிவு செய்யலாம். முதலில் பதிவு செய்யும் 10,000 பேருக்கு இலவச சிசிடிவி கேமராக்கள் பொருத்த இருக்கிறோம். இந்த கேமராக்களின் பராமரிப்பு செலவினை ஒரு வருடத்திற்கு எங்கள் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும்.
தனிநபரின் வீடு, அலுவலகம் என யார் வேண்டுமானாலும் எந்த இடத்திற்கு வேண்டுமானாலும் https://www.secureourcity.org/ என்ற இணையதள முகவரி மூலம் விண்ணபிக்கலாம். இந்த விண்ணப்பத்தில் உங்கள் முகவரி, உங்கள் கட்டத்தின் வகை, தொலைபேசி எண், இ-மெயில் ஐடி போன்ற தகவல்களை நீங்கள் உள்ளிட வேண்டியிருக்கும். அதன்பின் எங்கள் நிறுவனத்தின் பணியாளர்கள் நேரில் வந்து ஆய்வு செய்து, அதன் பின் சிசிடிவி கேமரா பொருத்தி இலவச ஹார்ட் டிஸ்க்கும் வழங்குவார்கள். கேமரா பொருத்த ஆகும் செலவும் இலவசமே.
எல்லா தரப்பு மக்களும் பயனடைய வேண்டும் என்றாலும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மக்கள், சாலையோரத்தில் இருப்பவர்கள், முதியோர் இல்லத்தில் வசிப்பவர்கள், கல்விக்கூடங்கள் போன்றவற்றுக்கு இந்த திட்டம் சென்றடைந்தால் எங்களுக்கு கூடுதல் மகிழ்ச்சி. எனவே இணையத்தை பயன்படுத்த தெரியாத மக்களுக்கு, பாதுகாப்பு தேவைப்படும் மக்களுக்கு யார் வேண்டுமானாலும் பதிவு செய்து உதவலாம். இது மக்களின் பாதுகாப்பிற்கான ஒரு முன்னெடுப்பு. நிச்சயம் பணம் சம்பாதிப்பதற்காக அல்ல" என்று விரிவாக விளக்கினார் ரிஜாய் தாமஸ்.'
Secure our city' என்ற நிகழ்ச்சியின் தொடக்க நிகழ்வு கடந்த வாரம் நடுவானில் விமானத்தில் வைத்து நடத்தப்பட்டது. இதில் நடிகை பாவனா, நடிகர் நரேன்,இயக்குநர் எஸ்.ஏ சந்திரசேகர், ஷோபா சந்திரசேகர் மற்றும் பல்வேறு துறை சார்ந்த பெண்கள் என 100 பேர் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.