Justin Trudeau:`இந்தியாவுடன் உரசல்... பொருளாதார சிக்கல்' - ஜஸ்டின் ட்ரூடோ ராஜினா...
போலி ஆவணங்கள்; பனியன் நிறுவனத்தில் பணி... திருப்பூரில் தங்கியிருந்த வங்கதேசத்தவர்கள் 6 பேர் கைது!
திருப்பூர் மற்றும் அதன் சுற்றுப்புற நகரங்களில் உள்ள பனியன் நிறுவனங்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிகம் பணியாற்றி வருகின்றனர். அதிலும், குறிப்பாக மேற்கு வங்கம், பீகார், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் அதிகம் பணிபுரிகின்றனர். அதில், சட்டவிரோதமாக மேற்கு வங்கத்துக்குள் நுழையும் வங்கதேசத்தவர்கள் அங்கு மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்களைப்போல் ஆதார் உள்ளிட்ட போலி ஆவணங்களைத் தயாரித்து திருப்பூரில் தங்கி வேலை செய்து வருவது தொடர் கதையாகி வருகிறது. இதைத் தடுக்க போலீஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக பல்லடத்தை அடுத்த மகாலட்சுமி நகர் பகுதியில் உரிய ஆவனங்கள் இன்றி வங்தேசத்தைச் சேர்ந்தவர்கள் தங்கியிருப்பதாக பல்லடம் போலீஸாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற போலீஸார் ஒரு வீட்டில் இருந்தவர்களை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர்கள், வங்கதேசத்தைச் சேர்ந்த ரவ்ஹான் அலி (36), ஹரிருள் இஸ்லாம் (26), ரஹ்மான் (20), சோஹில் இஸ்லாமி (20), சபிபுல் இஸ்லாம் (40), அப்துல் ஹோசன் (27) ஆகியோர் என்பது தெரியவந்தது.
மேலும் அவர்கள் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்து கட்டுமானப் பணி மற்றும் பனியன் நிறுவனங்களில் வேலை செய்து வந்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து அவர்களை கைதுசெய்த பல்லடம் காவல்துறையினர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சென்னை புழல் சிறைக்கு அழைத்துச் சென்றனர். வங்கதேசத்தைச் சேர்ந்த 6 பேர் உரிய ஆவணங்களின்றி தங்கியிருந்தது பல்லடத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.