TN Assembly: "கோரிக்கை நிராகரிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது" - ஆளுநர் மாளிகை அளித்த விளக்கம் என்ன?
தமிழக ஆளுநர் மாளிகை சற்றுமுன் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறது.
2025ஆம் ஆண்டின் முதல் கூட்டத்தொடர் இன்று (ஜனவரி 6) ஆளுநர் உரையுடன் தொடங்கவிருந்தது. இதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று காலை தமிழக சட்டப்பேரவைக்கு வந்தார். ஆளுநர் உரையாற்றத் தொடங்குவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென உரையை நிகழ்த்தாமல் அவையிலிருந்து வெளியேறினார். தேசிய கீதம் முதலில் இசைக்கப்படாததால்தான் ஆளுநர் வெளியேறினார் என்று கூறப்படுகிறது.
அரசியல் வட்டாரத்தில் இது பெரும் பரபரப்பைக் கிளப்பியது. ஆளுநரின் இந்த செயலுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்திருக்கிறது.
தமிழக ஆளுநர் மாளிகை சற்றுமுன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஒவ்வொரு மாநில பேரவையிலும் ஆளுநர் உரையின்போது தேசியகீதம் இசைக்கப்படுகிறது. ஆளுநர் உரைக்கு முன்பு மற்றும் முடிந்த பின்னர் தேசிய கீதம் இசைக்கப்படும். முன்பே பலமுறை வலியுறுத்தியும் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது துரதிர்ஷ்டவசமானது.
அரசமைப்பின் கடமைகளைப் பின்பற்ற வேண்டியது ஆளுநரின் கடமை. தமிழ்த்தாய் வாழ்த்து மீது ஆளுநருக்கு எப்போதும் மரியாதை உள்ளது. தமிழ் கலாசாரத்தின் மீது அன்பு, மரியாதை இருக்கின்றன. தனது ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் தமிழ்த்தாய் வாழ்த்தை ஆளுநர் பாடுவார்" என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.
விகடன் ஆடியோ புத்தகம்
நீங்கள் விரும்பி படித்த தொடர்கள், இப்போது ஆடியோ வடிவில்... புத்தம் புதிய விகடன் ப்ளே... உங்கள் அன்றாட பணிகளை கவனித்துக் கொண்டே ரசித்து கேட்க, உடனே இன்ஸ்டால் செய்யுங்கள்...