ஆளுநரை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்: திமுக ஆா்ப்பாட்டத்தில் கனிமொழி வலியுற...
இந்தோனேசியா: பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வழங்கும் திட்டம் அறிமுகம்!
இந்தோனேசியாவில் பள்ளி குழந்தைகளுக்கு ஊட்டச்சத்துள்ள உணவு வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 28 மில்லியன் டாலர்கள் செலவில் நாடு முழுவதும் திங்கள்கிழமை(ஜன. 6) இத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூலம், சுமார் 90 மில்லியன் குழந்தைகளும் கர்ப்பிணிகளும் பயனடைவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கண்ட பிரிவினரின் ஊட்டச்சத்து குறைபாட்டை களைவதே இத்திட்டத்தின் நோக்கமாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நிகழாண்டில் இத்திட்டத்தால் 19.47 மில்லியன் பள்ளி குழந்தைகளும் கர்ப்பிணிகளும் பயனடைவர் என்று இந்தோனேசிய அரசு கணித்துள்ளது. இதற்காக 2025-26 நிதியாண்டில் 4.3 பில்லியன் டாலர்கள் நிதி ஒதுக்கீடு செய்யப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் அதிபர் பிரபோவோ சுபியாந்தோ கடந்தாண்டு தேர்தல் வாக்குறுதியாக, இலவசமாக ஊட்டச்சத்துள்ள உணவு வழங்கும் திட்டம் அமல்படுத்தப்படும் என்று தெரிவித்திருந்தார். இந்தோனேசியாவில் 5 வயதுக்குட்பட்ட 21.5 சதவிகித குழந்தைகளின் முறையான வளர்ச்சி பாதிப்படையக்கூடாது என்பதை இலக்காகக் கொண்டு இத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்று அவர் தெரிவித்துள்ளார். மேலும், இத்திட்டத்தால் விவசாயிகளின் வருவாய் அதிகரிக்கும் என்றும் அவர்கள் விளைவிக்கும் பயிர்களின் மதிப்பும் உயரும் என்றும் தெரிவித்துள்ளார்.
282 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள்தொகை கொண்டுள்ள இந்தோனேசியா, தென்கிழக்கு ஆசியாவில் மிகப்பெரிய பொருளாதார நாடாக உள்ளது. இந்த நிலையில், அங்கு நாடு முழுவதும் இத்திட்டத்தை செயல்படுத்துவது எந்தளவுக்கு சாத்தியம் என அந்நாட்டு பொருளாதார நிபுணர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
இதனிடையே, பிரபோவோ சுபியாந்தோ கடந்தாண்டு அக்டோபரில் அதிபராகப் பதவியேற்றபின் பல்வேறு வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு, இந்தோனேஷியாவுக்கு நிதியுதவியை பெற நடவடிக்கைகளை முன்னெடுத்தார். அந்த வகையில், சீனாவுடன் 10 பில்லியன் டாலர்கள் ஒப்பந்தம் கடந்த நவம்பர் மாதம் உடன்படிக்கையாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.